Published : 26 Dec 2017 10:01 AM
Last Updated : 26 Dec 2017 10:01 AM

கடவுளின் நாக்கு 78: மவுனத்தின் எடை!

மவுனத்தின் எடை!

ந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம்தான் என பதில் சொல்வேன். மவுனத்தின் எடையை ஒருவராலும் தீர்மானிக்கவே முடியாது. கடலின் ஆழத்தில் உறைந்துபோன பாறையைப் போல, அது கண்ணுக்குத் தெரியாமல் விரிந்திருக்கிறது. பேச்சையே புரிந்துகொள்ளாத நம் சமூகம் மவுனத்தை எப்படிப் புரிந்துகொள்ளும்? ஆண் - பெண் என்கிற பேதமின்றி எல்லோரும் தீர்க்கப்படாத, மவுனத்தைச் சுமந்துகொண்டு அலைகிறோம். தனி மனிதர்களைப் போலவே சமூகமும் பல விஷயங்களில் மவுனம் காக்கிறது.

வெற்றுச் சுவர் ரகசியம்

மனிதனைத் தவிர, வேறு எந்த விலங்கும் தனது கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க விரும்புவதே இல்லை. மனிதர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒருபோதும் திரும்பிப் போக முடியாத கடந்த காலம் ஏன் மனிதர்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது? நாட்கள் கடந்துபோய்விட்டன. நிகழ்வுகள் கடந்துபோய்விட்டன. ஆனால், அது ஏற்படுத்திய வலியும், வேதனையும் கடந்துபோவது இல்லை. வலி உறைந்துவிடுகிறது. அதுதான் மவுனத்தின் சாரமா?

பவுத்த துறவி ஒருவர் சுவரைப் பார்த்து அமர்ந்தபடியே பல ஆண்டுகள் ஒருவருடனும் பேசாமல் இருந்தார் என வாசித்திருக்கிறேன். அவர் மவுனமாக இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஏன் சுவரைப் பார்த்து அமர்ந்திருந்தார்? வெற்றுச்சுவர் என்பது அவரது மனதின் வெளிப்பாடுதானா? இல்லை, மனிதர்களைப் பார்த்தபடியே இருப்பவர்களால் பேச்சை கட்டுப்படுத்த முடியாதா?

குழந்தைகளுக்கு மொழி பழகும்வரை எல்லாமும் காட்சிகள்தான். விரும்பியபடியே ஒலி எழுப்பி உலகோடு அவர்கள் விளையாடுகிறார்கள். எந்தப் பொருளுக்கும் பெயர் கிடையாது. குழந்தைகளுக்கு உலகிலுள்ள எல்லாப் பொருளும் மவுனமானதுதான். ஒரு குழந்தை தனது கையில் ஆப்பிள் பழத்தைப் பிடித்தபடியே வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தது. என்ன பார்க்கிறது? ஆப்பிள் ஏன் மவுனமாக இருக்கிறது என அது யோசிக்கிறதா? குழந்தை ஆப்பிளை வைத்து விளையாடுகிறது. திடீரென ஆப்பிளைக் கடித்துப் பார்க்கிறது. நாவில் அதன் சுவை படருகிறது. இரண்டாவது கடியோடு ஆப்பிளைத் தூக்கி எறிந்து விடுகிறது. குழந்தை சுவைத்தது ஆப்பிளை மட்டுமில்லை; மவுனத்தையும்தானே!

பொம்மை சிநேகம்

குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் பேசத் தெரியாதவை. அவற்றோடு குழந்தைகள் எளிதாக சிநேகம் கொண்டுவிடுகிறார்கள். பேசத் தெரிந்தவர்களுடன் உறவுகொள்வதுதான் முழந்தைகளுக்குப் பிரச்சினை. பெரியவர்கள் எல்லாவற்றுக்கும் காரணம் கேட்பார்கள். விளக்கம் சொல்கிறார்கள்.

அதுதான் குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லை. குழந்தை உலகை வியப்பதுபோலவே தன் உடலையும் கண்டுவியக்கிறது. தன்னு டைய கை, கால்களைத் தானே ஆட்டி ஆட்டிப் பார்த்துக்கொள்கிறது. கண் ணாடி தேவையின்றித் தன்னை அறிந்துகொள்வதில் அதற்கொரு ஆனந்தம்! மவுனத்தைக் கடந்து பேச்சுக்குள் பிரவேசித்தப் பிறகு குழந்தை உருமாறிவிடுகிறது. பின்பு வாழ்நாள் எல்லாம் அது மவுனத்துக்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறது.

மவுனம் எப்படியிருக்கும் காட்டுங்கள் எனக் கேட்டதற்கு, ஜென் துறவி ஒருவர் - வெள்ளைக் காகிதம் ஒன்றை நீட்டினார் எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

மவுனத்தின் பக்கங்கள்

கானக்கூத்தனின் கவிதை ஒன்றில் ’வெள்ளைப் பேப்பருக்கு முன்பக்கம், பின்பக்கம் என்று கிடையாது. எதை முதலில் பார்க்கிறோமோ, அதுவே அதன் முன்பக்கம்’ என்றொரு வரியை வாசித்திருக்கிறேன். மவுனத்துக்கும் முன்பக்கம், பின்பக்கம் உண்டா ?

உங்கள் பேச்சு மவுனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மவுனமே நல்லது என்கிறது கிரேக்க ஞானம். மவுனம் என்பது வாய் மூடியிருப்பது மட்டுமில்லை; அதிலும் உயர்ந்த மவுனம் இன்னொன்று உள்ளது. அது அகத்தினுள் நிகழும் மவுனம். வாயை மூடிக்கொண்டிருக்கும் மவுனமும் நமக்குத் தேவை. ஆழமான அகமவுனமும் தேவை. இரண்டும் எளிதில் உருவாகிவிடுவதில்லை.

நம் பிரச்சினைகளுக்குக் காரணம் எங்கே பேசக் கூடாது எனத் தெரியாமல் போனதுதான். ஞானிகள் குறைவாகப் பேசுவதற்குக் காரணம், அவர்களுக்கு மவுனத்தின் வலிமை புரிந்திருப்பதுதான். மவுனத்தைச் சுமையாக்கிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். சக்தியாக மாற்றிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

ஸ்பானிய கதை

ஒரு காலத்தில் மனிதர்களைப் போலவே மேகங்களுக்கும் பேசும் சக்தியிருந்தனவாம். இதனால் பூமியில் யார் என்ன தவறு செய்தாலும், அதை மேகங்கள் காட்டிக் கொடுத்துவிடுமாம். ஒருநாள் மழைக் கடவுள் பூமிக்கு வந்தார். அழகான இளம்பெண் ஒருத்தி தனியே வீட்டில் நெசவு நெய்துகொண்டிருந்தாள். அவளை அடைவதற்காக அவர் சேவல் உருவமெடுத்து அவளின் வீட்டின் முன்பாகச் சென்றார். அந்த இளம் அழகான செங்கொண்டை சேவலைக் கண்டு ஆசையாகி அதைத் துரத்திப்பிடித்து அணைத்துக் கொண்டாள்.

மறுநிமிஷம் மழைக் கடவுள் தன்னுடைய உருவத்தை அடைந்து, அவளுடன் வல்லுறவு கொண்டார். ஆசை தீர்ந்தவுடன் மழைக் கடவுள் வானுலகுக்குப் போய்விட்டார். அந்தப் பெண் கர்ப்பிணியானாள்.

அந்தப் பெண்ணுக்குப் பையன் பிறந்தான். தனது மகனுக்கு மழைக் கடவுள்தான் தகப்பன் என அவள் வாதிட்டார். யாரும் நம்பவில்லை. தனக்காக யாராவது சாட்சி சொல்ல மாட்டார்களா என அவள் அழுதாள். மேகங்கள் அவளுக்காகச் சாட்சி சொல்ல முன்வந்தன. மழைக் கடவுளால்தான் அவள் கெடுக்கப்பட்டாள். ஆகவே, அவளது பிள்ளைக்குத் தந்தை மழைக் கடவுளே என மேகங்கள் சாட்சியம் சொன்னது. இதனால், ஆத்திரம் அடைந்த மழைக் கடவுள் என்னைக் காட்டிக் கொடுத்த காரணத்தால் இனி உங்களுக்குப் பேச்சு மறைந்துபோய்விடும் எனச் சாபம் கொடுத்துவிட்டார்.

அன்று முதல் மேகங்கள் மவுனமாக உலவுகின்றன. தான் கண்ட உண்மைகளை வாய்விட்டுச் சொல்ல முடியாமல் அவற்றை மழையாகப் பொழிகின்றன என்றொரு ஸ்பானிய நாட்டுப்புறக் கதை சொல்கிறது. உண்மைதான் மழையாகப் பொழிகிறது என்பது எவ்வளவு கவித்துவமாக இருக்கிறது பாருங்கள்!

ஒளிரும் மவுனம்...

கவிஞர்களும், எழுத்தாளர்களும், ஓவியர்களும், இசைக் கலைஞர்களும் மவுனத்தைப் புரிந்துகொள்கிறார்கள். தனது படைப்பின் வழியே மவுனத்தை ஒளிரச் செய்கிறார்கள். பேசப்படாத விஷயங்களே இலக்கியத்தின் ஆதாரம்.

வரலாற்றின் மவுனத்தையும் பண்பாட்டின் மவுனத்தையுமே எழுத்தாளன் கேள்வி கேட்கிறான். அதிகாரம் எதைஎல்லாம் மறைத்து வைக்க நினைக்கிறதோ, அதற்கு எதிராகக் குரல் எழுப்புகிறான். உறைந்துபோன மவுனத்தைக் கூரான வாள்போல உருமாற்றி, அதைக்கொண்டே சமர் செய்கிறான். பேச்சை புரிந்துகொள்வது போலவே மவுனத்தைப் புரிந்து கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். அதற்குக் கலையும் இலக்கியமும் பேருதவி செய்யக்கூடும். உலகம் மறந்துபோன எத்தனையோ தகவல்களை, நினைவுகளை, நிகழ்வுகளைக் கதைகள் காப்பாற்றி வைத்திருக்கின்றன. திரும்பத் திரும்ப உலகுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

உலகின் ஆதிசெல்வம் கதைகளே! அவை தீர்ந்து போவதே இல்லை. உலகில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கையைவிட நிச்சயம் கதைகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கக்கூடும். ஆகவே, கதை சொல்லுங்கள். கதை கேளுங்கள். கதைகளின் வழியே வாழ்க்கையைக் கண்டடையுங்கள்!

- நிறைந்தது.

எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x