

‘புட்பால் அண்ட் காமிக் ஆர்ட் இன் ஜெர்மனி’ என்ற தலைப்பில் சென்னை மாக்ஸ்முல்லர் பவனில் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு ஜெர்மனியில் வரையப்பட்ட கேலிச்சித்திரங்கள் கண்காட்சி ஜூலை 19-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.
“வாழ்க்கை வட்டமானது; பந்தும் வட்டமானது, உலகமும் வட்டம். இவை மொத்தமும் எத்தனை தீவிரமானதோ, அதே அளவில் இவற்றை வேடிக்கையும் செய்ய முடியும்” என்றார் சென்னை மாக்ஸ் முல்லர் பவனின் இயக்குனரான ஹெல்மட் சிப்பர்.
திரைப்படங்களிலும் இலக்கியத்திலும் விளையாட்டு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. ஜெர்மனி நாட்டில் கால்பந்தாட்டத்தை முன்வைத்து கேலிச்சித்திரங்கள் வரைவது பல தசாப்தங்களாக வழக்கத்தில் இருந்துவருகிறது.
“கால்பந்தாட்டம் நமது யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. நமது சமூகத்தைச் சிறந்த முறையில் பகடி செய்வதற்குக் கால்பந்தாட்ட கேலிச்சித்திரங்கள் உதவுகின்றன” என்றார் ஹெல்மட் சிப்பர்.
மாக்ஸ் முல்லர் பவனில் வைக்கப்பட்டிருந்த பல கேலிச்சித்திரங்களில் கால்பந்தாட்டத் துறையில் நிலவும் ஊழல்கள் பொதுவாக விமர்சிக்கப்படுகின்றன. எதிர்பாலினம் தொடர்பான கேலிகளும் இடம்பெற்றுள்ளன.
விளையாட்டு வீரர் ரொனால்டோ தனது பனியனைக் கழற்றும் நிகழ்வுக்காகவே மொத்த ஆட்டத்தையும் ஒரு பெண் பார்க்கிறாள். இன்னொரு சித்திரத்தில் மனைவி, கணவனை உருளைக்கிழங்கு வாங்கிவரச் சொல்கிறாள். கணவனோ தொலைக்காட்சியில் புட்பால் மேட்ச் பார்ப்பதற்காகப் பக்கவாதம் பாதித்துவிட்டதாக நடிக்கிறான்.
கேலிச்சித்திரங்கள் அனைத்தும் அரசியல் ரீதியாகச் சரியான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதையும் இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தினார் ஹெல்மட்.
வாழ்க்கைக்கும் விளையாட்டுக்கும் உள்ள தொடர்புகளைக் கொண்டுவருவதே கேலிச்சித்திரங்களின் வேலை என்று கூறினார்.
ஒரு தேசத்தின் கலையை இன்னொரு தேசத்தில் காண்பிக்கும்போது, அந்த தேசத்துக்கேயுரிய கலாசாரத் தனித்துவங்கள் மற்றும் நுட்பங்களை இழந்துவிடுவதும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புகளும் உண்டு.
அதனால் இந்தியச் சூழலுக்கு ஏற்றாற் போன்ற கேலிச்சித்திரங்களையே தேர்வு செய்து மாக்ஸ் முல்லர் பவன் இக்கண்காட்சியை வைத்துள்ளது.
இந்தக் கேலிச்சித்திரங்களை வரைந்த ஓவியர்கள் ஜெர்மானிய செய்தித்தாள் மற்றும் நகைச்சுவை பத்திரிகைகளைச் சேர்ந்த கேலிச்சித்திரக்காரர்கள்.