

இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்பின் (FIP -The Federation of Indian Publishers) தென்னிந்தியாவிற்கான துணைத் தலைவராக எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.ஒளிவண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலுள்ள அனைத்துப் பதிப்பாளர்களின் கூட்டமைப்பான இது, ஆகஸ்ட் மாதம் பொன்விழா கொண்டாடியது. ஆண்டுதோறும் மொழிவாரியாக சிறந்த பதிப்பகங்களைத் தேர்ந்தெடுத்துக் கெளரவித்துவருகிறது.
நா.மகாலிங்கம் விருதுகள்: நா.மகாலிங்கம் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகச் சிறந்த மொழிபெயர்ப்பு ஆக்கங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் கிராஸ்மேனின் ஆங்கில நாவலான ‘நிலத்தின் விளிம்புக்கு’ என்கிற மொழிபெயர்ப்புக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை எழுத்தாளர் அசதா மொழிபெயர்த்துள்ளார். முதல் பரிசு ரூ.2 லட்சம் ரொக்கம் அடங்கியது. இரண்டாம் பரிசு, மமாங் தய்யின் ‘கருங்குன்றம்’ நாவலை மொழிபெயர்த்த கண்ணையன் தட்சிணாமூர்த்தி, கே.சதாசிவனின் ‘தமிழகத்தில் தேவதாசிகள்’ வரலாற்று ஆய்வு நூலை மொழிபெயர்த்த கமலாலயன் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இரண்டு நூல்களுக்குத் தலா ரூ.50,000 ரொக்கம் பரிசளிக்கப்படும். பி.அஜய் பிரசாத்தின் தெலுங்குக் கதைகளை ‘அத்தங்கி மலை’ என்ற பெயரில் மொழிபெயர்த்த மாரியப்பன். க.கர்னல் ஜேம்ஸ் வெல்ஷின் ‘எனது ராணுவ நினைவலைகள் 1-2’ நூலை மொழிபெயர்த்த ப.கிருஷ்ணன், கொரியக் கவிதைகளை ‘மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்’ என்ற பெயரில் மொழிபெயர்த்த பா.ரவிக்குமார், ப.கல்பனா ஆகிய இருவர், கேரளப் பழங்குடிக் கவிதைகளை மொழிபெயர்த்த நிர்மால்யா ஆகியோருக்கு மூன்றாம் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
நால்வருக்கும் தலா ரூ.25,000 பரிசு வழங்கப்படும். இவ்விருதுகள் அருட்செல்வரின் நினைவு நாளான அக்டோபர் 2ஆம் நாள் சென்னை ஏவி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.
பெருமாள்முருகனுக்குத் தேசிய விருது: ஒடிசா புவனேஸ்வரில் கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்றுவரும் இலக்கியத் திருவிழாவில் இந்த ஆண்டு முதல் புனைவு, புனைவற்ற, வாழ்நாள் சாதனை ஆகிய மூன்று பிரிவுகளில் ராம்நாத் கோயங்கா நினைவாக இலக்கிய விருதுகள் வழங்கத் தொடங்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் சாதனையாளருக்கான முதல் விருது (The New Indian Express Literary Excellence Award) தமிழ் எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் ரொக்கமும் பாராட்டுக் கேடயமும் அடங்கியது இந்த விருது. பெருமாள் முருகனுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்த விருதை வழங்கினார்.
கடலூர் புத்தகக் காட்சி: கடலூர் மாவட்ட புத்தகக்காட்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி எழுத்தாளர்களின் உரைகளும் நிகழ்த்தப்படவுள்ளன.
வெள்ளிக் கடற்கரையில் வரும் 09.10.23 வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசைப் பதிப்பகம் தனி அரங்கு (எண் - 98) அமைத்துள்ளது இங்கு இந்து தமிழ் திசைப் பதிப்பக வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கும்.