பெரிய விஷயங்களின் எளிய வழிகாட்டி

பெரிய விஷயங்களின் எளிய வழிகாட்டி
Updated on
3 min read

கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூலை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரிச் சிந்தனையாளர் ரங்கநாயகம்மா தெலுங்கில் எழுதிய நூலின் ஆங்கிலம் வழித் தமிழாக்கம் ‘குழந்தைகளுக்கான பொருளாதாரம்’. படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் சிரமமாக இருக்கும் சில விளக்கங்களை, ரங்கநாயகம்மா சிறார்களின் தோள்கள் உயரத்துக்கு இறக்கியுள்ளார். சிறார்களுக்கான இலக்கியமும் நூல்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகும் வகையில், இந்த நூலை அவர் உருவாக்கியுள்ளார். சிறார்களுடன் ஒருவராகக் கலந்து தன் மொழியை எளிதாக்கியுள்ளார்.

நம் அன்றாட வாழ்க்கையில் உள்ள அறிவியல், அதன் உண்மைகளைச் சான்றுகளுடன் விளக்குவது இந்நூலின் நோக்கங்களுள் ஒன்று. பணம் என்றால் என்ன என்கிற எளிய, அதேநேரம் சிக்கலான கேள்வியில் தொடங்குகிறது நூல். அந்தப் பணத்தைத் தொடர்ந்து கேள்வி பொருளை நோக்கிச் செல்கிறது.

பொருள் எப்படி மனிதர்களால் உருவாக்கப்படுகிறது? - இப்படிக் குழந்தைகளின் விளையாட்டைப் போல் ஒன்றிலிருந்து ஒன்றாகக் கைமாறி அறிவுக்கு விருந்தாகிறது. பணப் பரிவர்த்தனைக்கு முன்பு வழக்கத்திலிருந்த பண்டமாற்று முறையின் பிரச்சினைகள் குறித்தும் ஒரு கட்டுரையில் சொல்கிறார். சமீப காலமாகச் செய்திகளில் நாம் கேட்கும் பொருளாதர நெருக்கடி நிலை குறித்தும் அதன் காரண காரியங்கள் குறித்தும் எளிமையாக விளக்கியிருக்கிறார். - ஜெய்

குழந்தைகளுக்கான பொருளாதாரம்
ரங்கநாயகம்மா

(தமிழில்: கொற்றவை)
ஸ்வீட் ஹோம் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 87545 07070

அறம் சார்ந்த கல்வி மாணவர்களுக்கு மட்டுமல்ல... பெற்றோர்களின் பொறுப்பின்மையும் மாணவர்கள் சீரழிவதற்குக் காரணமாக அமைகிறது. மாணவர்கள் கெட்டுப்போவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்கிற பொதுப்புத்தியுடன் இன்னும் சிலர் வலம்வருகின்றனர். இது தவறான பார்வை என்கிறார் மகாராசன். இன்று ஆசிரியர்களுக்குரிய ஆகப்பெரிய அதிகாரம் என்பது தவறிழைக்கும் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் அதிகாரிகளிடமும் மன்னிப்புக் கேட்பது மட்டுமே என்று குறிப்பிடுவதன் வாயிலாகத் தமிழகப் பள்ளி ஆசிரியர்களின் மனநிலையை உணர முடிகிறது.

சமகாலச் சூழலில் மாணவர்களாலும் பெற்றோர்களாலும் ஆசிரியர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகின்றனர். பெற்றோர் கும்பலாகப் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களைத் தாக்கும் வன்ம நிகழ்வுகளை அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் காணப்படும் சாதிய மனோபாவம், மாணவர்களைச் சமூக உதிரிகளாக மாற்றுகிறது. இதுபோன்ற ஆசிரியர்களைக் கண்டறிந்து களையெடுக்க வேண்டும். குறிப்பாக மாநில, தேசிய அளவிலான பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பின்பற்றப்பட வேண்டும். அறம்சார்ந்த சமூகக் கல்வி மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் தேவையானதாக இருக்கிறது.

ஆசிரியர் - மாணவர் உறவு அறுபடாமல் இருக்க இத்தகைய கல்வி அவசியமானதாகும். இறுதியாக, ‘எல்லாரும் சமம்தானே டீச்சர்’ எனச் சாதியத்தை அடித்து நொறுக்கி, ஆசிரியர்களுக்குப் பாடம் கற்பித்த முனீஸ்வரனை நூலில் பாராட்டியது மட்டுமல்லாமல், இந்த நூலை அவருக்கே தளுகையாக்கியிருக்கிறார் நூலாசிரியர். ஆக, மாணவர்கள் சமூக உதிரிகளாக மாறும் பேராபத்தைத் தடுக்க வேண்டிய பணிகளைச் செய்தாக வேண்டும். இது ஒவ்வொரு சமூக மனிதரின் உடனடிக் கடமையாகும் என்ற சிந்தனையை நூலில் விதைக்கிறார். - பி.பாலசுப்பிரமணியன்

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து
மகாராசன்

ஆதி பதிப்பகம்
விலை: ரூ.90
தொடர்புக்கு: 9159933990

அயல்மொழி நூலகம்: புதுமையான வரலாற்று நாவல்: எழுத்தாளர் ஸேடி ஸ்மித்தின் இந்த நாவலின் தொடக்கத்தில் பதினான்கு வயதுச் சிறுவன், வீட்டின் மேல்தளத்தில் ஏற்பட்ட துளைகளைச் சரிப்படுத்த வருகிறான். அந்த வீட்டின் பெண்மணி புகழ்பெற்ற எழுத்தாளரின் உறவினர்; பராமரிப்பாளர்; காதலி; முதல் வாசகி. சிறுவன் அந்தப் பெண்மணியிடம் சொல்கிறான் ‘உங்கள் வீட்டில் இலக்கிய எடை அதிகமாக இருக்கிறது, அதனால்தான்’.

இன்னொரு இடத்தில் கதைசொல்லி சொல்கிறாள், ‘ஏழைகளுக்கு இலக்கியம் தேவையில்லை, அவர்கள் வேண்டுவது ரொட்டியை’, ‘வாழ்க்கை எவ்வளவு சிறியதோ அது நகைச்சுவையாகத் தொடரும், துயரத்தை நிறுத்தல்குறிகளாகக் கொண்டு’. இது போன்ற ஸ்மித்தின் மொழி நடை புன்னகைத்தாரா என்று யோசிக்க வைக்கும் புன்னகையைப் போல, நகைச்சுவை நொடிப்பொழுதில் மறைந்து போகும்.

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, 40 நாவல்களுக்கு மேல் எழுதிய வில்லியம் ஐன்ஸ்வொர்த் என்ற ஆங்கிலேய எழுத்தாளர், அவரது இரண்டு மனைவிகள், ஐன்ஸ்வொர்த்தின் நூல்கள் - இவற்றைக் கதைசொல்லி எலிஸா அவளது பார்வையில் சொல்கிறாள். எலிஸா புத்திசாலியான, ஆனால் அவநம்பிக்கை நிறைந்த பெண். ஐன்ஸ்வொர்த்தின் நண்பர் சார்லஸ் டிக்கன்ஸ். ஐன்ஸ்வொர்த்தின் ஒரு நாவல் டிக்கன்ஸின் ஒலிவர் டிவிஸ்ட்டைவிட விற்பனை அதிகமானதால், தன்னைப் பெரிய எழுத்தாளர் என்று அவர் நம்பும் முகாந்திரமும் இருந்திருக்கிறது.

ஆனால், காலம் மிகக் கருணையற்றது. எல்லாவற்றையும் வண்டலைப் போல் வடிகட்டி இலக்கியத்தை மட்டுமே ஜெயித்து நிற்க அனுமதித்துள்ளது. இன்றும் உலகின் தலைசிறந்த நாவலாசிரியர் டிக்கன்ஸ். ஐன்ஸ்வொர்த்தின் ஒரு நூல்கூட இப்போது அச்சில் இல்லை. நாவலின் மற்றுமொரு முக்கியமான பகுதி 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆள்மாறாட்ட வழக்கு. செல்வந்தர் குடும்பத்தின் ஒரே வாரிசு, கப்பல் மூழ்கியதில் இறந்ததாகக் கருதப்படுகிறது.

சில வருடங்கள் கழித்து அவன் உயிருடன் இருப்பதாகச் சொல்கிறான். அவனுடன் இந்தக் குடும்பத்தில் பல வருடங்கள் இருந்த அடிமை, அவன்தான் எஜமான் என்கிறான். இறந்தவனின் குடும்பம் குறித்த தகவல்களை அடிமை அவனுக்குச் சொல்லியிருக்கலாம். ஆனால், பெற்றவளே அவனைப் பார்த்து இதுதான் என் மகன் என்று அடையாளம் காட்டிவிட்டு இறக்கிறாள்.

அடிமையின் கதை அவனது முன்னோர்களிடமிருந்து தொடங்குகிறது. ஆப்ரிக்காவில் ஸ்பானியர்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றிய ஆங்கிலேயர், லட்சக்கணக்கான ஆப்ரிக்கர்களைத் தங்கள் நாட்டில் கடும் வேலைகள் செய்ய வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்கிறார்கள். காலமெல்லாம் அடிமை வாழ்வு, அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் அவர்களும் அடிமை, உரிமையாளர் சுதந்திரம் தரும் வரை எத்தனை தலைமுறை ஆனாலும் அடிமை வாழ்வுதான்.

இரண்டு கதைக் களங்கள் கொண்ட நாவல் இது. 19ஆம் நூற்றாண்டின் அதிகம் தெரியாத ஒரு எழுத்தாளரை மையமாகக் கொண்டு உண்மைகளை விட்டு விலகாது ஒரு நாவலை அவர்களால் எழுத முடிகிறது. முழுமையான ஆராய்ச்சி, கடினமான உழைப்பு - ஒரு திரில்லர் நாவலுக்கும் இருப்பதே இவர்களின் வெற்றிச் சூத்திரம். நம் காலத்தில் வாழ்ந்த புதுமைப்பித்தனையோ தி.ஜானகிராமனையோ இதுபோல் வைத்து நாவல் ஒன்று எழுதுவதைக் கற்பனைகூட நம்மால் செய்ய முடியாது. தகவல் பற்றாக்குறை ஒரு சவால். - சரவணன் மாணிக்கவாசகம்

ஃப்ராட் (Fraud)
ஸேடி ஸ்மித்

பென்குயின்
விலை: ரூ.422 (அமேசான்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in