

ஐம்பது வருடங்களுக்கு முன்பு சென்னையின் புறநகரான குன்றத்தூர் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையைத் துல்லியமாகப் புனைவாக்கியிருக்கும் நாவல்தான் ‘சோளம் என்கிற பேத்தி’. இந்நாவலின் ஆசிரியர் கி.கண்ணன். இது இவரது முதல் நாவல். தொண்ணூறுகளிலிருந்து எழுதிவருகிறார். இந்த நாவல் தந்த வாசிப்பு அனுபவம் இவரது கதைகளைத் தேடி வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் நாவலிலேயே தன் வருகையைக் காத்திரமாக அறிவித்த புனைவாசிரியர்கள் பலர் தமிழில் உண்டு. அந்த வரிசையில் கி.கண்ணனும் இணைகிறார்.
எழுபதுகளின் காலகட்டக் கிராம வாழ்க்கையை சற்றும் மிகைப்படுத்தாமல் எழுதியிருக்கிறார். குன்றுமேடு என்கிற கிராமம்தான் இந்நாவலின் கதைக்களம். ஆலந்தூர், பரங்கிமலை, பல்லாவரம் ஆகிய பெயர்கள் நாவலின் சில இடங்களில் ஊடாடுகின்றன.
இவற்றைக் கொண்டுதான் நாவலின் கதை நிகழிடத்தை அனுமானிக்க முடிகிறது. நாவலாசிரியரின் இளமைக் கால வாழ்க்கையும் அவருடன் வாழ்ந்த சக மனிதர்களுமே நாவலின் கதாபாத்திரங்கள். இது குன்றுமேடு பகுதியில் எழுபதுகளில் வாழ்ந்தவர்களின் உண்மைக் கதை. உண்மைக் கதையைப் புனைவாக எழுதும்போது பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
அதனால், பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு அவர்களது உடலமைப்பையும் நடத்தையையும் அடிப்படையாகக் கொண்டு காரணப் பெயர்களையே நாவலாசிரியர் சூட்டியிருக்கிறார். உதாரணமாக, இந்நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களான உதடிக் கிழவி, சோளம் ஆகிய இரண்டு பெயர்களுமே காரணப் பெயர்கள். உதடிக் கிழவியின் உண்மையான பெயர் கோவிந்தம்மா. கிழவிக்குச் சராசரி உதடுகளைவிடக் கொஞ்சம் பெரியது.
மக்காச்சோளம் தின்றுகொண்டிருந்தபோது பிறந்ததால் உதடிக் கிழவியின் பேத்திக்குச் சோளம் என்று பெயரிடுகிறார்கள். ஆளிவாயன், புட்டை வயித்தன், மரநாய், பூனை, டங்காரு, சந்துபல்லி, கூழ்வயித்தன், கட்டக்காலன், குட்டைக்கலக்கி, கோணவாயன், கீச்சான், புட்லூரா என ஒவ்வொருவரும் அவர்களது புனைபெயரிலேயே அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பெயர்களுக்கெல்லாம் நாவலில் விளக்கங்கள் தேவைப்படவில்லை.
ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களின் கதையாகவே இந்நாவல் விரிந்திருக்கிறது. கதை நிகழும் களத்தையும் காலத்தையும் பிரதிக்குள் நாவலாசிரியர் மறைத்தே வைத்திருக்கிறார். அதையும் மீறி சில அனுமானங்களின் ஊடாகக் கதையின் காலத்தைத் தீர்மானிக்கிறோம். உண்மை மனிதர்களின் கதையாக இருப்பதால், மிகக் கவனமாக இதனைத் தவிர்த்திருக்கிறார் என்று கருத இடமிருக்கிறது. இந்த நாவலில் பெண்களே நிறைந்திருக்கிறார்கள்.
ஏனெனில், கிராமங்களில் குடும்பங்கள் பெரும்பாலும் பெண்களைச் சார்ந்தே இயங்கி வருகின்றன. நாவலின் முக்கியக் கதாபாத்திரம் சோளம். இவள், பட்டியல் இனத்தைச் சார்ந்தவளாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இன்றும் சாதியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதில் கிராமங்களின் பங்கு முக்கியமானது. எழுபதுகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால், சாதி குறித்த உரையாடலையும் நாவல் தவிர்த்திருக்கிறது.
ஆப்பம் விற்றுப் பிழைப்பு நடத்தும் உதடிக் கிழவியின் மகள், சோளத்தைப் பெற்றுவிட்டு வேறொருவனுடன் ஓடிப்போகிறாள். சோளம் குழந்தையாக இருந்தபோதே தந்தையும் இறந்துவிடுகிறார். இந்தப் பின்புலத்துடனேயே அவள் வளர்கிறாள். தாயும் தந்தையும் அற்ற சோளம், பாட்டியின் அரவணைப்பில் வாழ்க்கையை எதிர்கொள்கிறாள். இறுதியில் சாராய வியாபாரியாக மாறுகிறாள். அந்தத் தொழிலைத் தக்கவைத்துக்கொள்ள, இறுதியில் அவள் ஓர் அதிர்ச்சியான முடிவை எடுக்கிறாள்.
இதைப் பெண்ணியப் பிரதியாகவும் வாசிக்கலாம்; பட்டியல் இனப் பிரதியாகவும்கூட வாசிக்கலாம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சோளம், படிப்பறிவற்றவள். ஆண்மையப்பட்ட இச்சமூகத்தில் அவளால் என்ன செய்ய இயலுமோ, எது சாத்தியமோ அதற்கு மட்டுமே நாவல் இடமளித்துள்ளது. அதுதான் யதார்த்தமும்கூட. ஆசிரியரின் குறுக்கீடு இல்லாமல் கதாபாத்திரங்களின் வழியாகவே நாவல் வளர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதை 1934இல் பிரசுரமானது. ‘என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!’ என்று எழுதினார் புதுமைப்பித்தன். அக்கதையினூடாகக் கற்பு குறித்த பார்வையைப் புதுமைப்பித்தன் புரட்டிப் போட்டிருந்தார். அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகப் புதுமைப்பித்தன் அவ்வாறு எழுதவில்லை; பொன்னகரத்தின் யதார்த்தம் அதுதான்.
இதேபோன்று ‘சோளம் என்கிற பேத்தி’ நாவலில் இடம்பெற்றுள்ள பாலியல் சார்ந்த கதையாடல்களும் தமிழ் இலக்கியத்திற்குப் புதியது. பெண்களின் பாலியல் சார்ந்த நடவடிக்கைகளை இந்நாவலில் கவனமாகக் கையாண்டிருக்கிறார் கி.கண்ணன். பிரதியைப் படிக்கும் வாசகர்கள் முகத்தை நொடித்துக்கொள்ளாத அளவுக்குப் பாலியல் பிரச்சினைகள் இயல்பாகப் பேசப்பட்டுள்ளன. அந்த அளவிற்கு நாவலின் பிரதி செம்மைப்படுத்தப்பட்டிருக்கிறது.
நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி, சிறப்பானது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கதையை நிகழ்காலத்தில் நினைவுகூரும்போது, அக்காலத்தின் புழங்குமொழியைப் பிரதிக்குள் கொண்டுவருவது படைப்பாளருக்குச் சவாலானது. கதாபாத்திரங்களின் உரையாடலில் வட்டாரமொழி அருமையாகத் தொழிற்பட்டிருக்கிறது. வட தமிழகத்தின் வட்டாரமொழி, தமிழில் குறைவாகவே எழுதப்பட்டிருக்கிறது.
சமீப காலத்தில்தான் இப்பகுதி மக்களின் மொழி நவீன இலக்கியத்தில் காத்திரமாகப் பதிவாகத் தொடங்கியுள்ளது. இப்பகுதியில், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் ‘இடக்கர் அடக்கல்’ சொற்களும் பாலியல் வசைச் சொற்களும் எவ்விதத் தடையுமின்றி நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இம்மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் ஒருவருக்கொருவர் சண்டை போடும்போதும் உரையாடலில் வந்து விழும் பாலியல் சொற்கள் புனைவாக எழுதப்படும்போது செம்மைப்படுத்தப்பட்டுவிடுகின்றன. இந்நாவலாசிரியர் அதனைச் செய்யாதது ஆறுதல்.
‘சோளம் என்கிற பேத்தி’ நாவல் தமிழுக்கு முக்கியமான வரவு. கிராமத்தின் அசலான மொழியும் இயல்பான வாழ்க்கையும் அவ்வளவு நெருக்கமாக ஊடாடியிருக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் நாவலில் பூரணத்துவம் பெற்றிருக்கின்றன. கோட்பாடு சார்ந்த புனைவுகள் தமிழில் தொடர்ச்சியாக எழுதப்பட்டாலும் யதார்த்த நாவலுக்கு எப்போதும் இடமிருக்கிறது. இந்நாவலில் நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு கிராமத்தின் பத்தாண்டு கால வாழ்க்கை கண் முன்னே விரிகிறது. அதனை எவ்விதச் சார்புத் தன்மையும் இல்லாமல் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.
சோளம் என்கிற பேத்தி
கி.கண்ணன்
யாவரும் பப்ளிஷர்ஸ்,
விலை: ரூ.250
தொடர்புக்கு: 90424 61472 / 98416 43380
- தொடர்புக்கு: ramesh5480@gmail.com