

‘குமரி முனையும் வேங்கடமும்/ குடகும் கடலும் திசையாக/ அமரும் எல்லை உள்ளிருந்தே/ அகிலம் முழுதும் படர்ந்தாயே...’ என்று தமிழன்னையைப் புகழ்ந்து பாடிய செய்குதம்பிப் பாவலர், தமிழுக்கு ஆற்றிய பெரும் பங்கினை ‘மகாமதி, சதாவதானி செய்குதம்பிப் பாவலர் வாழ்வோவியம்’ என்கிற இந்தப் புத்தகம் ஆழமாகப் பேசுகிறது. தமிழ் மொழியை மேன்மைப்படுத்த இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் எத்தகைய தொண்டினை ஆற்றியுள்ளார்கள் என்பதைப் பாவலரின் கண்வழியே இப்புத்தகம் விளக்குகிறது. - எல்னாரா
மகாமதி, சதாவதானி செய்குதம்பிப் பாவலர் வாழ்வோவியம்
கவிஞர் நாஞ்சில் ப.ஜமால் முஹம்மது
சதாவதானி செய்குதம்பிப் பாவலர் தமிழ்ச் சங்கம்
விலை: ரூ.330
தொடர்புக்கு: 98401 40104
நூல் நயம் | தமிழகம்: ஒரு முழுமையான சித்தரிப்பு: தமிழ்நாட்டின் அரசியல், பண்பாடு, வரலாறு, கலை எனப் பல அம்சங்களை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் கவனப்படுத்தியதன் தொகுப்பு இது. சிவகங்கைச் சீமையின் அரசர் வேங்கைப் பெரிய உடையணத் தேவர், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நாடுகடத்தப்பட்டது குறித்த கட்டுரையுடன் இந்த நூல் தொடங்குகிறது. தமிழிகத்தில் நடைபெற்ற காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள் இந்த நூலின் முதல் பகுதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஊமைத்துரை, திருநெல்வேலி எழுச்சி, ஆஷ் படுகொலை, கொடி காத்த குமரன் எனப் பல பொருள்களில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசர்களைப் பற்றிய பகுதியில் ‘பொன்னியின் செல்வன்’ சினிமா வந்த காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயங்கள் நினைவுக்கு வந்துசெல்கின்றன.
துப்பறியும் நாவலுக்கு இணையான ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு குறித்த சுவாரசியமான கட்டுரை இதில் உண்டு. அதுபோல் ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கும் வரலாற்றுக்குமான நெருக்கத்தை, இடைவெளியைப் பேசும் கட்டுரையும் இந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னோடி முயற்சிகளைக் குறித்த கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
பத்திரிகையாளர்கள் டி.ராமகிருஷ்ணன், பி.கோலப்பன், பொன் வசந்த், சாய் சரண், எஸ்.கணேசன் உள்ளிட்டோர் எழுதிய செய்திக் கட்டுரைகளின் தொகுப்பான இதன் வழி, சோழர் ஆட்சிக் காலத்தில் தொடங்கிச் சென்ற நூற்றாண்டு வரையிலான தமிழகம் இந்த நூலில் பல வண்ணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. - விபின்
நம் வெளியீடு: தடுப்பூசிகளின் கதை: பெரியம்மை உள்ளிட்ட நோய்கள் இந்தியாவில் தடுப்பூசி மூலம் ஒழிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் வளர்ச்சியில் இந்தியா உலக அரங்கில் எவ்வாறு உயர்ந்து நிற்கிறது என்பதைச் சுவைபடச் சொல்கிறது இந்தப் புத்தகம். வழக்கமாக மருத்துவம், நோய்கள் சம்பந்தப்பட்ட புத்தகம் என்றாலே படிக்கும்போது ஒரு சோர்வு தட்டும்.
ஆனால், அதுபோன்று எதுவும் இல்லாமல், தடுப்பூசி பயன்பாட்டில் இந்தியா எப்படிப் படிப்படியாக வளர்ச்சி அடைந்து, உலகத்துக்கே வழிகாட்டியாக விளங்குகிறது என்பதை நம் கையைப் பிடித்தபடி அழைத்துச் சென்று உலாவிக்கொண்டே சுவாரசியமாகக் கதை சொல்வதுபோல விறுவிறுப்பாக விவரித்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
தடுப்பூசியைக் கண்டுபிடித்த இங்கிலாந்தின் எட்வர்ட் ஜென்னர், பெரியம்மை நோய்க்கு எதிராக அவர் பயன்படுத்திய தடுப்பூசி முறை, சீனா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்த முறைகள் ஆகியவை பற்றியும் இந்நூல் வழி தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை
சஜ்ஜன் சிங் யாதவ் (தமிழில்: ஆனந்த இந்திரா, எழில்)
இந்து தமிழ் திசை
விலை: ரூ.350
தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402
ஆன்லைனில் வாங்க: store.hindutamil.in/publications