

தமிழ்க் கவிதைப் பரப்பில், முன்னை மரபுக்கும் பின்னை புதுமைக்கும் பாலமாக இன்றைக்கும் எழுதிக் கொண்டிருப்பவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் பிறந்த ந.ஜெகதீசன், கல்லூரியில் படிக்கிற நாள்களிலேயே தமிழன்பன் எனும் புனைபெயரில் கவிதைகளை எழுதினார். பின்னாளில் மு.கருணாநிதியின் தலைமையிலான கவியரங்கில் பங்கேற்கையில், ‘ஈரோடு தமிழன்பன்’ எனக் கருணாநிதி அழைக்கவே, அதுவே பின்னாளில் பெயராக நிலைத்தது.
பாவேந்தரின் சீடர்: சென்னிமலையிலுள்ள தொடக்கப் பள்ளியில் படித்தபோது, பாரதியின் கவிதை நூல்களைப் படித்தவருக்கு, கவிதையெழுதும் ஆர்வம் இயல்பாக எழுந்தது. அப்போதே புனைபெயர்களில் எழுதத் தொடங்கியதோடு, ‘சுய சிந்தனை’ எனும் கையெழுத்து இதழினையும் நடத்தத் தொடங்கினார். கரந்தைப் புலவர் கல்லூரின் மாணவராக இருந்த தமிழன்பனுக்கு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘இசை அமுதம்’, ‘அழகின் சிரிப்பு’ நூல்களைப் படித்த பிறகு, பாரதிதாசனின் கவிதைகள் மேல் கவனம் குவிந்தது.
கல்லூரியின் இளங்கோ மன்ற ஆண்டு விழாவிற்குத் (1954 பிப். 21) தலைமையேற்க, பாரதிதாசனை அழைத்து வந்தார் தமிழன்பன். பாரதிதாசனின் கவிதைகள் மீதான ஈர்ப்பும், அவருடனான நட்பும் தமிழன்பனுக்குப் பெரும் ஊக்கத்தை வழங்கின. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு புரட்சிக் கவிஞரோடு பத்தாண்டுக் காலம் உடன் பயணித்தார். தமிழன்பனின் ‘நெஞ்சின் அலைகள்’ நாவலின் கையெழுத்துப் பிரதியை வாசித்த பாரதிதாசன், அதனை நூலாக்க உதவினார். பாரதிதாசன் மறைவுக்குப் பிறகு 1965இல் அந்த நாவல் வெளிவந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் பெற்றார். மரபுக் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த தமிழன்பன், புதுக்கவிதையின் பக்கமாகத் தன் கவனத்தைத் திருப்பினார். 1968ஆம் ஆண்டில் ‘கொடி காத்த குமரன்’ எனும் வில்லுப்பாட்டு நூலினையும், 1970இல் ‘சிலிர்ப்புகள்’ எனும் கவிதை நூலையும் வெளியிட்டார். சுருக்கமும் செறிவுமான வார்த்தைகளில் கவித்துவம் ததும்பும் கவிதைகளைப் படைத்தளித்தார் தமிழன்பன். ‘தீவுகள் கரையேறுகின்றன’, 'காலத்திற்கு ஒருநாள் முந்தி’, 'அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்’, 'ஊமை வெயில்’, 'திரும்பி வந்த தேர்வலம்’, ‘கருவறையிலிருந்து ஒரு குரல்’, ‘பனி பெய்யும் பகல்’, ‘திசை கடக்கும் சிறகுகள்’, ‘மாற்று மனிதம்’ உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கவிதை நூல்களைப் படைத்த தனிப்பெருங்கவி தமிழன்பன்.
ஹைக்கூ உலகம்: ‘சுதந்திரத்தை/என்னால்/சாப்பிட/முடியவில்லை/சோறு கொடு’ என்று பசித்தவர்களின் குரலை எதிரொலிக்கும் தமிழன்பன் கவிதைகளில், சமூக எள்ளல் சற்று தூக்கலாக இருப்பதைக் காணலாம். புதுக்கவிதைகளை வீச்சோடு எழுதிக்கொண்டிருந்த தமிழன்பன், பாரதி அறிமுகம் செய்த ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளைப் பரவலாகச் செய்த முன்னோடிகளுள் ஒருவர்.
1985இல் ‘சூரியப் பிறைகள்’ எனும் ஹைக்கூ நூலை, அவரே ஓவியங்களையும் வரைந்து வெளிக்கொண்டுவந்தார். அந்த நூலில் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் தொடக்கம் பற்றியும், அதனைத் தமிழில் எழுதுகையில் கவனம் கொள்ள வேண்டிய கூறுகளையும் விளக்கி 14 பக்கத்தில் நீண்ட முன்னுரையை எழுதினார். இது ஹைக்கூ பற்றிய பலரின் கேள்விகளுக்குப் பதிலாக அமைந்தது.
‘திரும்பத்/திரும்ப/நிலா/ஒளி/–பாறை/திடீரென/மலர்ந்துவிட்டது’ என்றெழுதி அஃறிணை பொருள்களுக்கும் உயிர்ப்பினை உண்டாக்கினார். ஹைக்கூவோடு நின்றுவிடாமல், உலகக் கவிதைகளின் புதுப்புது வடிவங்கள் குறித்த அவரது தேடலில், சென்ரியு, லிமரிக்கூ, பழமொன்ரியு, கஸல் ஆகியன தமிழுக்குப் புதுவரவாயின. சென்னை புதுக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழன்பன், முன்பே ‘பொதிகை தொலைக்காட்சி’யில் பகுதிநேர செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.
கவிதை, நாவல் எழுதியதோடு சிறுகதை, நாடகம், சிறார் இலக்கியம், வாழ்க்கை வரலாறு, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல வகைமைகளிலும் 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்தி, வங்காளம், மலையாளம், ஆங்கிலம், உருது உள்ளிட்ட பல மொழிகளிலும் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1998இல் கவிதையிலேயே எழுதப்பட்ட முதல் பயண இலக்கியமாக ‘உன் வீட்டிற்கு வந்திருந்தேன்… வால்ட் விட்மன்!’ எனும் நூலை வெளியிட்டார். உலக இலக்கியங்களை வாசிப்பதிலும், சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெருடாவின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் தமிழன்பன், நெருடாவின் நூற்றாண்டினை ஒட்டி, 2004இல் வினாக்களாலேயே அமைந்த ‘கனாக் காணும் வினாக்கள்’ எனும் கவிதை நூலையும் தந்தார். அந்நூலை ஹாங்காங் பல்கலைக்கழகப் பேராசிரியரும் அகராதித் துறையில் குறிப்பிடத்தக்க ஆய்வாளருமான கிரெகரி ஜேம்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, அதன் ஒலிக்குறிப்பையும் சேர்த்து வெளியிட்டார்.
நிறவெறிக்கு எதிராகப் போராடிய ஆப்பிரிக்க - அமெரிக்கத் தலைவரான மார்ட்டின் லூதர் கிங் வாழ்க்கையைக் கவிதை வடிவில், ‘காலத்தால் மறையாத கருப்புச் சூரியன்’ எனும் நூலாக எழுதினார் தமிழன்பன். எப்போதும் ஈரம் சுரக்கும் கவிதை உள்ளம்கொண்டவர் ஈரோடு தமிழன்பன். இந்த அம்சம்தான் 90ஆவது அகவையிலும் அவரைத் தொடர்ந்து உயிர்ப்போடு இயக்கிக் கொண்டேயிருக்கிறது.
- தொடர்புக்கு: murugesan.m@hindutamil.co.in