

தியடோர் பாஸ்கரன் 1980 களிலிருந்து தமிழ் சினிமா குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறார். அண்மையில் வௌிவந்துள்ள நூல் ‘திரையில் விரியும் சமூகம்’. சினிமா எதிர்மறையாகப் பார்க்கப்பட்ட தொடக்கக் காலத்தில் அது தேசிய எழுச்சிக்குப் பயன்படக்கூடிய கலை என்று நம்பியவர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி என்றும் தமிழ் சினிமாவின் சகல பரிமாணங்களையும் முதன்முதலில் அரசியலுக்குப் பயன்படுத்தியது இந்திய தேசியக் காங்கிரஸ்தான் என்பதையும் சுட்டி, அதன் செயல்பாட்டை விவரிக்கிறார்.
சாதி-வர்க்க முரண்களை உடைத்துச் சமூகப் புரட்சியை உண்டாக்கிய இடமாக சினிமாக் கொட்டகைகள் எப்படித் திகழ்ந்தன என்றும் பிரிட்டிஷாரின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நோக்கத்தின் அடிப்படையில், 1918ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் அமல்படுத்தப்பட்ட தணிக்கை முறை, முதலில் காவல் துறை கையில் இருந்ததற்கான காரணத்தையும் விவரிக்கும் கட்டுரைகள் தமிழ் சினிமாவின் தொடக்கக் காலச் சூழலை அறியத் துணைபுரிவன.
‘சபா நாடகங்களும் தமிழ் சினிமாவும்’ என்னும் கட்டுரை கூர்மையான அவதானிப்புகளை முன்வைக்கிறது. மௌனப் படத்திலிருந்து பேசும் படங்கள் பிற நாடுகளில் இயல்பாக வளரத் தமிழிலோ, அது முன்னரே தயாராக இருந்த நாடகம் என்னும் நிகழ்கலை வடிவை உள்வாங்கிக் கொண்டு எப்படிவெளிப்பட்டது என்பதை முன் கோணப் பார்வை, பாத்திரங்களின் அதிகமான பேச்சு ஆகியசபா நாடகக் கூறுகளைக் கொண்டு விவரிக்கிறது.
தமிழ் சினிமாவில் பாட்டு, நடனத்தின் இடத்தை விளக்கும் ஆசிரியர், நல்ல சினிமாவிற்குப் பாட்டு தேவையில்லை என்பதுடன் தேவையற்ற பாடல்களும் நடனங்களும் படத்தின் தாக்கத்தை எவ்வாறு நீர்த்துப்போகச் செய்கின்றன என்பதையும் பொழுதுபோக்குத் தளத்தில் மட்டுமே சினிமா நின்றுவிடக் கூடாது என்கிற ஆதங்கத்தையும் வைக்கிறார்.
தமிழ் சினிமாவின் பெண்ணுடல் நோக்குதல், அரசியல் சினிமா பேசும் கட்டுரைகள் இச்சிந்தனைகளை இன்னும் விரிவாகப் பார்ப்பதற்கான திறப்பைத் தருகின்றன. ‘கே.டி. என்கிற கருப்பு துரை’, ‘மனுசங்கடா’, ‘காக்கா முட்டை’, ‘குடிசை’ ஆகிய படங்கள் பற்றிய நேர்மையான விமர்சனங்கள் இப்படங்களின் நுட்பங்களை விளக்கி, ஒரு படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்று கற்றுத் தருகின்றன.
திரைப்படங்களில் பேச்சைக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும் என்று விரும்பும் ஆசிரியர், கட்டுரைகளையும் சுருக்கமாகவே எழுதியிருக்கிறார். சிறிய கட்டுரைகள் என்றாலும் அவை பெரும் தேடல்களுக்கு நம்மை இட்டுச் செல்பவை. தமிழ்த் திரைப்படங்கள் ஆரோக்கியமான பாதையில் பயணிப்பதற்கான கரிசனத்தையும் சிந்தனைகளையும் விதைப்பவை.
திரையில் விரியும் சமூகம்
க.தியடோர் பாஸ்கரன்
மலர் புக்ஸ் வெளியீடு
விலை: ரூ.220
தொடர்புக்கு: 9382853646
- தொடர்புக்கு: sudaroviya@gmail.com