Published : 17 Dec 2017 10:10 AM
Last Updated : 17 Dec 2017 10:10 AM

காலத்தின் வாசனை: கனவு மீன்களும், ஒரு வேளைச் சாப்பாடும்!

நாற்பது வருடங்களுக்கு முன்னால் நான் சந்தித்த ஒரு நபரை அவருடனான உரையாடலை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறேன் என்றால், நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவர் ஒரு சாதாரண மனிதர். கண் தெரியாத மனிதர். அபூர்வமானவர்.

தஞ்சாவூரின் சிதிலமடைந்த அரண்மனை வளாகத்தில் தர்பார் ஹாலுக்குப் போகிற வழியில் கையில் சலங்கை கட்டிய கம்புடன் அவர் நின்றுகொண்டிருப்பார். பல வருடங்களாக அங்கே நின்றுகொண்டு சுற்றுலாப் பயணிகளிடம் கையேந்தியபடி அந்த சலங்கைக் கழியைத் தட்டிக்கொண்டிருப்பார். கடைந்தெடுத்த மாதிரியான அந்த முகம், மூக்கு, தாமிர நிறம் எல்லாம் சேர்ந்து ஒரு கிரேக்கச் சிற்பத்தின் சாயல் தெரியும். காலம் செதுக்கிய மனிதர் அவர். ஒரு நாள் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“பெரியவரே, எத்தனை வருஷங்களாக உங்களுக்குப் பார்வை இல்லை?”

வெள்ளை விழிகள் உருள அவர் சொன்னார், “அஞ்சு வயசுல ஒரு வைக்கோல் வண்டிக்குப் பின்னாடியே ஓடினேன். வைக்கோல் சரிந்து முகத்தில் விழுந்து கண்ணு ரெண்டும் போச்சு. ஆனா காது நல்லா கேக்கும். சொல்லப்போனா இந்தக் காதாலதான் நான் பாக்கறேன்... இப்பகூட உங்க பின்னாடி ஒரு கார் வந்து நிக்குதே... கவனிச்சீங்களா?”

திரும்பினேன், ஒரு கார் நின்றுகொண்டிருந்தது.

‘‘அந்த கார்லேர்ந்து எறங்குறவங்களைப் பத்திக்கூட நான் சொல்ல முடியும். குண்டா வெள்ளைக்காரன்...ரெண்டு சின்னஞ்சிறுசுக... துரைசாணியம்மா...’’ எனக்கு ஆச்சரியம் தாளவில்லை.

“எப்படி இவ்வளவு துல்லியமா சொல்ல முடியுது?”

“எல்லாம் ஒரு ஊகத்துல சொல்றதுதான். சென்ட் வாசனையை வெச்சு மூக்கு சொல்லிப்புடும். இப்ப மணி நாலு பத்து… சரிதானுங்களா?’’ வாட்ச்சைப் பார்த்தேன். மாலை சரியாக நாலு பத்து!

“கண்கட்டு வித்தை மாதிரில்ல இருக்கு... ஏதாவது யட்சணி வேலையா?”

“காலைல எந்திரிச்சதும் 5.45-க்குப் பாங்கு சத்தம் கேட்ட ஒடனே தலைக்குப் பின்னாடி இருக்கற கடிகாரத்த திருகி வச்சிருவேன்.

அலாரம் வைக்கிற மாதிரிதான். அதுபாட்டுக்கு ஓடிக்கிட்டிருக்கும். நெனச்ச மாத்திரத்துல நேரத்தைச் சொல்லிடுவேன்.”

“பல வருஷமா இங்கே நின்னுக்கிட்டு இருக்கீங்க! அந்தக் காலத்துக்கும் இப்ப உள்ள காலத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுது?”

“சத்தம் பெருத்துப் போச்சு தம்பி! காரு வண்டி சத்தம்... சனங்க போடுற சத்தம்… புதுசு புதுசா மோட்டாருங்க போடுற சத்தம்... காதக் கொடையுது! ஆனா, காக்கா குருவி சத்தம் கொறைஞ்சி போச்சு!

எனக்குப் புரிந்தது. உலகத்தோடு சேர்ந்து நாமும் மாறிவருவதால் மாற்றத்தை உணரும் திராணி அற்றுவிட்டது. இவர் மாற்றத்தை உணர்கிறார். “தம்பி! இப்படித்தான் ஒரு நாள் இங்கதான் நிக்கிறேன். திடீர்னு தலையில சூரியன் சுடுறது ஒறைக்குது! நான் எப்பவும் நிக்கிற வாதாமரத்த வெட்டிட்டாங்க! அதான் நிழல் போச்சு!

சற்று தள்ளி ஒரு நாய் படுத்திருந்தது.

“அதுதான் என் தோழன்! மத்தியானம் ரோட்டைத் தாண்டி அளச்சிக்கிட்டுப் போய் ஒரு ஓட்டல்ல சாப்பிட்டதும் பத்திரமாக் கொண்டாந்து உட்டுரும்! எம்மேல மட்டும் கை வச்சுடாதீங்க… வந்து கொதறிடும். இப்படித்தான் ஒரு ரவுடிப்பய என்கிட்டேர்ந்து ஜோல்னாப்பையை லவட்டப் பார்த்தான்! அவன்மேல விழுந்து கொதறிடுச்சு!’’

ஹெலன் கெல்லர் அம்மையார் தனக்கு மூன்று நாட்களுக்கு மட்டும் பார்வை கிடைத்தால் என்னென்ன பார்க்க ஆசை என்று ஒரு கட்டுரை எழுதியிருப்பார். நான் கேட்டேன்.

“பெரியவரே! மறுபடி உங்களுக்குப் பார்வை கிடைச்சா என்ன பார்க்கணும்னு ஆசை?”

“வெயிலைப் பார்க்கணும் தம்பி... வெயில்லதானே நின்னுக்கிட்டே இருக்கேன். அப்புறம் என் தோழனான நாயைப் பார்க்கணும். அம்மா காட்டிச் சோறு ஊட்ன நெலாவப் பார்க்கணும்.”

“உங்களுக்குக் கனவு வருமா?”

“ஓ வருமே! நெறய்ய மீன் பிடிக்கிற மாதிரி. கனவு வந்தா மறுநாள் என் கைல காசு கொட்டும். எவ்வளவு காசு கெடச்சாலும் ஒரு வேளைதான் சாப்பிடுவேன்!”

“உங்க குடும்பம்?”

“எனக்குத்தான் கலியாணமே ஆகலையே! ஆனா, ஒரு கலியாணம் பண்ணிவச்சேன்?”

“என்ன சொல்றீங்க?”

“ஆமாம் தம்பி! இங்கே குச்சி ஐஸ் விக்கிறவரு நம்ப சிநேகிதரு... ஒரு நாள்... அவம் மகளுக்குக் காசு இல்லாம நிச்சயத்தோட கல்யாணம் நின்னுபோச்சுன்னு சொல்லி அழுதாரு. நான் ராத்திரில ஒரு டெய்லர் வீட்டுத் திண்ணைல ஒண்டிக்குவேன். அவருகிட்டே நான் சேமிச்ச பணத்தைக் கொடுத்துவச்சிருந்தேன். குச்சி ஐஸ்காரருக்கு அந்தப் பணத்தை அப்படியே கொடுக்கச் சொல்லிட்டேன். கல்யாணம் ஜம்முன்னு நடந்தது. அந்தப் பொண்ணு அப்பப்போ வந்து குழந்தையோட என் கால்ல விழுந்து கும்புட்டுட்டுப் போவும்.”

அப்படியே அவர் கையைப் பிடித்துக்கொண்டேன். எங்களைக் கடந்து ஒரு சுற்றுலாக் கும்பல் போயிற்று.

“பெரிய கோயில் பார்த்தாச்சு. அரண்மனை பாத்தாச்சு. வேற என்ன இருக்கு பாக்க?”- யாரோ கேட்டார்கள்.

‘இதோ இந்தப் பெரியவர்’ என்றேன் மனதுக்குள்!

- தஞ்சாவூர்க் கவிராயர்
 தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x