

ஈழ இலக்கியப் படைப்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன. நவீனத் தமிழ் இலக்கியத்துள் ஈழப் புனைவுகளின் பங்களிப்பு முக்கியத்துவமுடையவை. அலைந்துழன்று துயரத்தின் பெருவெளியில் பதியமிடப்பட்ட தம் வாழ்வை எழுதுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்த அனுபவங்கள்; தரிசனங்கள். பெரும்பாலும் ஒடுக்குமுறை, போராட்டம், போர், புலம்பெயர்வு, தாயக நினைவுகளென நீளும் நிரையே இவர்களின் இலக்கியக் களம். இந்த வரிசையில் வெளியான ஈழ எழுத்தாளர் தெய்வீகனின் ‘உன் கடவுளிடம் போ’ தொகுப்பு பல அம்சங்களில் முக்கியமானது.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளின் அகவய நுட்பம் சிறப்புக்குரியது. புறவய விவரிப்புகள் வழியாக மிகையற்ற உணர்வுகளை அழகியல் நுண்மைகளோடு முன்வைக்கும் தெய்வீகனின் ‘புலரியில் மறைந்த மஞ்சள் கடல்’ கதை சிறந்த நவீனத் தமிழ்ச் சிறுகதைகளில் ஒன்றாக அடையாளப்படுத்தும் தகுதி படைத்தது.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஆஸ்திரேலியப் படையிலிருந்த ஒருவரைத் திருமணம் செய்த ஜப்பானியப் பெண்ணான ஹிமாரிக்கும் ஈழர் ஒருவருக்கும் இடையே நிகழ்கிற உரையாடல், கசப்பையும் நெருக்கடியையும் எதிர்கொள்ளும் அகதிகளின் துயரத்தை வெளிப்படுத்துகிறது.
தெய்வீகனின் கதையுலகம் அகப்பயணத்தினால் வழிநடத்தப்படுகிறது. நேரடியான உணர்ச்சி வெளிப்பாட்டைத் துறந்தும், மிக நீளமான சூழல் விவரணைகளை ஏற்றும் கதைகளைப் படைக்கிறார். 'அவனை எனக்குத் தெரியாது' என்கிற கதையில் மரணதண்டனை பெறும் குற்றவாளியான அருட்குமரனின் குடும்பத்தினரை ஊடகங்கள் சூழ்ந்து நிற்கும்போது “தாயின் முந்தானையை எடுத்து அகிலா தனது முகத்தை முற்றாக மறைத்துக்கொண்டாள்.
தவரஞ்சினி தன் முகத்தை அழுகைக்குள் புதைத்திருந்தாள். காராளசிங்கம் விறைத்தபடியிருந்தார். அவருக்குள் புத்திர சோகத்தின் இருள் புகுந்திருந்தது” என்றெழுதுவது தெய்வீகனின் மிகையற்ற அழகியல் உத்தி.
முப்பதாண்டுக் காலமாய் நிகழ்ந்த மானுடப் பேரழிவை முன்வைத்து எழுதப்படும் ஈழப்புனைவுகள் பல. அனுபவத்திலான நேரடிச் சித்திரங்களை முதன்மைப்படுத்தி ஆவணத்தன்மையோடு இழைந்த புனைவுகள் ஒரு தரப்பு. அதே அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கியத்தின் அழகியல் அம்சங்களை உள்ளடக்கிய இலக்கியப் புனைவுகள் இன்னொரு தரப்பு. இவ்விரண்டு தரப்பிலும் இருந்து நீங்கி, வேறொரு களத்தை தெய்வீகன் தேர்வு செய்திருக்கிறார்.
நினைவின் வழியாகத் தாயகத்தை மலர்த்தி, புலம்பெயர்வு மண்ணிலுள்ள வாழ்வின் சம்பவங்களோடு இணைக்கிறார். பெரும்பாலான கதைகள் அவர் வாழக்கூடிய ஆஸ்திரேலியாவிலேயே நிகழ்கின்றன. ஆனால், முதன்மைக் கதைமாந்தர்கள் ஈழத்தவர்களே. விடுதலைக்காய் உயிர் உவந்து போர்க்களம் சென்றவர்கள் வீரயுகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அடையும் உள்ளக்கொதிப்புகளையும் அவமானங்களையும் ‘பொதுச்சுடர்’ என்கிற கதை மூலமாக முன்வைக்கிறார்.
களத்தில் குருதி சிந்தியவர்களைப் புறந்தள்ளிவிட்டு புலம்பெயர் நாடுகளில் பவுசாக வாழ்பவர்கள், தம்மைத் தாமே தியாகியெனக் கூறும் அவலத்தை தெய்வீகன் எழுதியிருக்கிறார். ஆழமான முரண்களையும் மானுடத் தத்தளிப்பையும் மொழியின் படிம நேர்த்தியோடு முன்வைக்கும் அசலான கதைகளை இத்தொகுப்பின் வழியாக கையளித்திருக்கிறார்.
‘உறக்கமில்லாக் குருதி’ என்ற கதையானது பல கால அடுக்குகள் கொண்டது. அமைதிப்படையினர் மனுஷச் சங்ஹாரத்தினை ஈழத்தில் நிகழ்த்திய நாள்களில் காணாமல் போயிருந்த வயற்கரைப் பிள்ளையார் சிலையை ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் கண்டு திகைப்புக்குள்ளாகும் கார்த்திகேசு என்பவர் அடையும் ஆற்றாமை பெருங்கனலாய் மூள்கிறது.
யாழ்ப்பாணத்தில் இருந்து காணாமல்போன மிகத் தொன்மையான பிள்ளையார் சிலை ஆஸ்திரேலியாவுக்கு எப்படி வந்தது? ஈழச்சனங்கள் மட்டுமல்ல, அவர்கள் வழிபட்ட தெய்வங்களும் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டுமிருக்கிறார்கள் என்பதை தெய்வீகனும் வையத்திடம் அறிவிக்கிறார்.
“தனது முழுப்பலத்தையும் திரட்டி ‘ஐயோ எங்கட பிள்ளையார்’ என்ற கார்த்திகேசுவின் தீனக்குரல், அருங்காட்சியகத்தில் தாகத்தோடு அடர்ந்து ஒலித்தது. அது அங்கிருந்த எல்லா ஆதிக்குடிகளினதும் ஒற்றைக் கூவலாக காற்றை உடைத்தபடி ஓங்காரமாக எதிரொலித்தது” என்ற வரிகளால் இந்தக் கதை ஈழரின் வலியாக மட்டுமே நிறைவு பெறவில்லை அல்லவா! இந்தக் கதையின் சிறப்பு இது.
ஈழப் புனைவுலகின் சில பொதுவான அம்சங்களோடு தெய்வீகனின் கதைகளுக்கு ஒட்டுறவு இல்லை. பலரோடும் பாதையில் ஓடி, சக்தியை இழக்க விரும்பவில்லை. அவருக்கெனத் தனித்த ஓட்டப்பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். வாசகருக்கு அந்த ஓட்டப்பாதையில் புதிய தரிசனங்கள் அளிக்கப்படுகின்றன.
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஈழ இலக்கியத்தின் போக்கு பற்றிக் குறிப்பிடுகையில் ‘ரயில் புறப்பட்டுவிட்டது’ இனி நிறுத்தமுடியாமல் அவ்வளவு வேகத்துடன், விட்டதைப் பிடிப்பதுபோல படைப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன என்றார். புறப்பட்டிருக்கும் ஈழ இலக்கிய ரயிலில் தெய்வீகனின் ‘உன் கடவுளிடம் போ’ தொகுப்பு நிரந்தர மாட்சி பெற்றிருக்கிறது.
உன் கடவுளிடம் போ, தெய்வீகன்
தமிழினி வெளியீடு
விலை: ரூ.190
தொடர்புக்கு: 9884225576
- தொடர்புக்கு: akaramuthalvan01@gmail