

எழுத்தாளரும் கவிஞருமான யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது கதைகள், ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு என ரிலே ரேஸ் போல் கைமாறிக் கைமாறிக் கொத்தாகத் திரளும் அனுபவத்தைத் தருபவை. யதார்த்தவாதம் மேலோங்கிய காலகட்டத்தில், கதைகளுக்குள் மாயத்தை விளைவித்துப் பார்த்தவர். தன் கவிதைகள் மூலம் இலக்கியத்தில் தேவதச்சன் பள்ளியைச் சேர்ந்தவராக அறிமுகமானவர்.
பிறகு, தன் கதைகள் வழி புனைவுவெளியை விரித்துக்கொண்டவர். சங்கீத ஞானம் உள்ளவர். நன்றாகப் பாடக்கூடியவர். ‘ஒளி விலகல்’ (சிறுகதைத் தொகுப்பு), ‘குள்ளச் சித்தன் சரித்திரம்’ (நாவல்), ‘ஒற்றை உலகம்’ (கவிதைத் தொகுப்பு) ஆகியவை குறிப்பிடத்தகுந்த நூல்கள். இந்த விருது ரூ.5 லட்சம் ரொக்கப் பணத்தையும் பாராட்டுக் கேடயத்தையும் உள்ளடக்கியது.
சுருதி இலக்கியம் யுடியூப் அலைவரிசை: சமீப காலத்தில், தமிழ்த் தீவிர இலக்கியத்தைப் பரவலாக்கியதில் சுருதி டிவிக்கு (Shruti TV Literature) முக்கியப் பங்கு உண்டு. வெகுஜன அடையாளம் இல்லாத எழுத்தாளர்களுக்கும் இந்த யுடியூப் அலைவரிசை வழி ஓர் அடையாளமும் கிடைத்தது. தமிழின் இலக்கிய நிகழ்வுகள் பெரும்பாலானவற்றை தரமான வீடியோ பதிவாக யுடியூபில் கிடைக்கவைத்திருக்கிறது சுருதி.
யுடியூப் சேனல் பலவற்றுக்கும் சினிமா ஒன்றே இலக்காக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பல ஊர்களுக்கும் பயணித்து இலக்கியம் வளர்க்கிறார்கள் சுருதி டிவியின் கபிலனும் சுரேஷும். இதற்காக அவர்கள் செய்யும் செலவு அதிகம். அதனால் சுருதி டிவி நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், வாசகர்களிடம் உதவி கோருவதாகவும் இவர்கள் அறிவித்துள்ளனர். அவர்கள் முதன்மையாகக் கோருவது ரூ.5,000 சந்தா. நன்கொடைகளையும் வரவேற்கிறார்கள். தொடர்புக்கு: கபிலன்: 94444 49221
செம்மலர் இதழ் ஆவணம்: தமிழின் முக்கியமான இலக்கிய இதழ் ‘செம்மலர்’. தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் கு.சின்னப்ப பாரதி, டி.செல்வராஜ், தணிகைச் செல்வன், மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன், ச.தமிழ்ச்செல்வன், நாஞ்சில் நாடன் போன்ற பலரும் செம்மலரில் கதைகள் எழுதியிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடங்கப்பட்ட இதழ் இது. இதன் ஐம்பது ஆண்டு கால இதழ்கள் தொகுக்கப்பட்டு, தெற்காசிய திறந்தநிலை மின்னணு ஆவணக் காப்பகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இணைப்புச் சுட்டி: https://www.jstor.org/site/south-asia-open-archives/saoa/cemmalar-34788153/
கயிறு 50,000 பிரதிகள்: சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனின் ‘கயிறு’, சாதி அபிமானத்தை எதிர்த்ததற்காகக் கவனம் பெற்ற சிறார் படைப்பு. இதன் மலிவு விலை மக்கள் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை: ரூ.5. சென்ற வாரம் இந்த மலிவு விலைப் பதிப்புக்கான முன்பதிவு தொடங்கியது. இப்போது வரை 50,000 பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த நூலை முன்பதிவுசெய்ய: 94449 60935.