

‘அலைகளை நேசிக்கிறேன்/மூச்சுக்காற்றைப் போல் அவை/ஒருநாளும் நின்று போவதில்லை’ என்று எழுதியிருக்கும் நிமோஷினியின் முதல் கவிதை நூல், ‘அட்டிகை அம்மா நான்’ 90-களில் வெளியானது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அலைகளைப் போல் தன்போக்கில் எழுதிக்கொண்டே இருக்கிறார்.
பார்த்தவை, கேட்டவை, உணர்ந்தவை, உள்வாங்கியவை என அனைத்துமே சிறுசிறு பத்திகளாக எழுதப்பட்டிருந்தாலும் வாசித்த கணத்தில் நம் மனதில் தங்கிவிடும் செறிவான பதிவுகளாக உள்ளன. வேப்பம்பூ அளவிலான பூக்கள் அச்சிடப்பட்ட புடவைகளை அணியும் அம்மாவுக்கு, வெள்ளை நிற ரவிக்கை அணிவதில் உள்ள விருப்பம் பற்றிய குறிப்புடன் தொடங்கும் கொமாரனின் குறிப்புகள், கெங்கம்மா எனும் தனது தாயின் பெயரை, ‘ஆண்டாள்’ என அப்பா மாற்றி வைத்தது பற்றிய பதிவுடன் முடிவதும் நல்ல பொருத்தமே.
எந்த முன்முடிவும் இல்லாமல் எல்லா மனிதர்களோடும் இயல்பாகப் பழகுபவர் என்பதற்கான அடையாளங்களாக அமைந்துள்ள இக்குறிப்புகள், சில வரிக் கவிதைகளோடு முடிவது கவிஞரது இருப்பை இன்னும் ஆழமாக உணர வைக்கிறது. அளவெடுத்துச் சிலை வடிக்கும் சிற்பியின் லாகவத்தோடு சின்னச் சின்ன வாக்கியங்களைக் கொண்டு மிக அழகாகச் செதுக்கியுள்ள பத்திகள், ஓர் எழுத்தாளனின் உள்மனச் சித்திரங்களாக விரிகின்றன. - மு.முருகேஷ்
கொமாரன் குறிப்புகள்
நிமோஷினி
சித்தார்த் வருண் தசிந்தனா வெளியீடு
விலை: ரூ.230
தொடர்புக்கு: 9444631655
நமக்கான விழிப்படைதல்கள்: சம்புவின் ‘காவியேறும் ரத்தம்’ தொகுப்புக் கவிதைகளில் உருக்கொண்டிருக்கும் சார்புத்தன்மை இடதுசாரித் தன்மையாக இருக்கிறது. மட்டுமின்றி, எளியவர்களின் கைகளை உயர்த்தும் குரலாகவும் கவிதைகள் உள்ளன. அரசு திட்டமிட்டு நிகழ்த்திய அறமற்ற செயல்களுக்குத் தன் எதிர்வினையாக மொழிவழியே அதன் குரூரங்களை வெளிப்படுத்துகின்றன சம்புவின் கவிதைகள். வாசிப்பில் நம்மை ஆற்றுப்படுத்த ஆங்காங்கே அரசியலற்ற கவிதைகளும் உண்டு.
‘தீண்டிவிடும் தொலைவில் நச்சரவம்/ நெளிகிற/ ஆளரவமற்ற கொடு நிலமிது/ மகளே/ உன் பாதையில் சூதானம் அவசியம்’ எனத் தொடங்கும் ‘கூடு திரும்புதல்’ கவிதையில் பெண்களுக்காக எத்தகைய உலகைக் கையளித்துள்ளோம், வெற்று அடிமைகள் பரிபாலிக்கும் ராஜ்ஜியத்தில் பெண்களின் சுதந்திரத்தன்மை என்னவாகி இருக்கிறது. நீதிக்காகக் கையேந்துபவர்களை நிராதரவாக்கும் பதர்கள் நிறைந் திருக்க... உனக்கான கவசத்தை நீயே கண்டடை மகளே என நாமும் நம் மகளுக்குச் சொல்ல வேண்டி இருப்பதை உணர்த்துகிறது இக்கவிதை.
‘விசுவாச மருளேறிய இந்த வரிசை/ ஒருபோதும் குலைந்துவிடக் கூடாதென்பது/ ராஜ்ய நலனில்/ அக்கறைகொண்டு விதந்தோதப்படுகிறது’ என்பனவற்றை உள்ளீடாகக் கொண்டிருக்கும் ‘விசுவாசம் ஓர் தேசிய நிர்ப்பந்தம்’ கவிதை நடப்பு அரசியலின் வெளிப்பாடாக உள்ளது. அதிகார இயந்திரங்கள் மூலம் தான் நம்பும் சித்தாந்தத்தை அவசர அவசரமாக அரசு நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் ஆட்சியை என்றைக்கும் தங்களுக்கானதாக மாற்றத் துடிக்கும் அவலத்தைக் காட்சிப்படுத்துகிறது கவிதை.
கரணம் தப்ப மரணம் எனும் சொல்வழக்குக்கு ஏற்ப இந்தத் தொகுப்பின் கவிதைகள் கொஞ்சம் பிசகினாலும் பிரச்சாரமாக மாறிவிடும் சூழல் இருக்க, தனக்கேயான மொழியின் பரிச்சயத்தால் சம்பவங்களைக் கவிமொழிக்குள் கொடுத்திருப்பதில் சம்பு எதிர்கொண்டிருக்கும் சவாலை நம்மால் உணர முடிகிறது. தனிநபர் துதிபாடுதல் மூலம் இங்கு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாசிச அரசியல் கருத்தியல் திணிப்பின் விழிப்பு நிலையைச் சம்புவின் ‘காவியேறும் ரத்தம்’ தொகுப்பின் கவிதைகள் உணர்த்திக்கொண்டு இருக்கின்றன. - ந.பெரியசாமி
காவியேறும் ரத்தம்
சம்பு
வெற்றிமொழி வெளியீட்டகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9715168794