

கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மதுரையில் நிறுவப்பட்டிருக்கும் நூலகம் நாள்தோறும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. வார இறுதி நாள்களிலும் விடுமுறை நாள்களிலும் வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ பத்தாயிரத்தைத் தொடுகிறது. கலைஞரின் பெயரால் அமைந்த நூலகத்தின் முதல் தளத்தில் கலைஞருக்கு என்றே தனிப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.
அழகான அரங்க அமைப்பு, சிறப்பான வெளிச்ச ஏற்பாடுகள், சொகுசான இருக்கைகள் என்று ஒரு அரண்மனைக்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகிறது கலைஞர் பிரிவு. இப்பிரிவில் அவரோடு உரையாடும் வகையில் அமைந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பு, அவரோடு செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வகையிலான அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
நூலகத்திற்கு வரும் அனைத்து வயதினரையும் கவரும்வகையில் இவை அமைந்துள்ளன. கலைஞரின் சுயசரிதையான ‘நெஞ்சுக்கு நீதி’, அவருடைய புகழ்பெற்ற ‘பொன்னர் சங்கர்’,‘ரோமாபுரிப் பாண்டியன்’ உள்ளிட்ட இலக்கியப் படைப்புகளுடன் அவரது சட்டமன்ற உரைகளின் தொகுப்புகளும் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் என்பது பெரியார், அண்ணாவையும் அவர்களின் கொள்கைகளையும் சேர்த்துப் பொருளுணர்த்தும் வார்த்தை அல்லவா? கலைஞர் பிரிவு என்று பெயரிடப்பட்டிருந்தாலும் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் எழுத்துகள், உரைகள் அடங்கிய புத்தகங்களால்தான் கலைஞர் பிரிவு நிறைந்திருக்கிறது. கி.வீரமணி, நன்னன், பசு.கவுதமன் என்று பலராலும் பல்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்ட பெரியாரின் எழுத்துகளும் உரைகளும் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
கோவை விடியல் பதிப்பகத்தின் வெளியீடான ‘பெரியார் அன்றும் இன்றும்’, நெ.து.சுந்தரவடிவேலு எழுதிய பெரியார் குறித்த புத்தகம் என்று பதிப்பிலுள்ள பெரியார் குறித்த புத்தகங்கள் அனைத்தையும் இப்பிரிவில் பார்க்க முடிகிறது. எஸ்.வி.ராஜதுரையின் பெரியாரிய ஆய்வு நூல்களான ‘சுயமரியாதை சமதர்மம்’, ‘ஆகஸ்ட் 15’ ஆகிய இரண்டு நூல்களும் இந்தப் பிரிவை அணிசெய்கின்றன.
செந்தலை கவுதமன் தொகுத்து, தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட ‘அண்ணாவின் அறிவுப் புதையல்’ 150 தொகுதிகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. தவிர, டி.எம்.பார்த்தசாரதி, கே.ஜி.இராதாமணாளன், க.திருநாவுக்கரசு, ஓவியா முதலானோர் எழுதிய திராவிட இயக்க வரலாற்று நூல்களும் இடம்பெற்றுள்ளன. ஏறக்குறைய 3.5 லட்சம் புத்தகங்களைக் கொண்ட இந்த நூலகத்தில் முதலாவது எண்ணிட்ட புத்தகம் கலைஞர் பிரிவில்தான் இடம் பெற்றுள்ளது.
அது கலைஞர் எழுதிய புத்தகம் அல்ல. அறிஞர் அண்ணாவைப் பற்றியது. ‘இந்து தமிழ்திசை’ வெளியீடான ‘மாபெரும் தமிழ்க் கனவு’தான் அது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு அளிக்கப்பட்ட புத்தகங்களின் ஒரு பகுதியை இந்த நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பதால்,‘மாபெரும் தமிழ்க் கனவு’, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘த கிராண்ட் தமிழ்ட்ரீம்’, கலைஞரைப் பற்றிய ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ ஆகிய புத்தகங்களைக் கலைஞர் தனிப் பிரிவில் திரும்பிய இடமெல்லாம் பார்க்க முடிகிறது.
செப்.15: அண்ணா பிறந்தநாள்
- தொடர்புக்கு: ilavenilse@gmail.com