Last Updated : 20 Sep, 2017 11:10 AM

 

Published : 20 Sep 2017 11:10 AM
Last Updated : 20 Sep 2017 11:10 AM

எமதுள்ளம் சுடர்விடுக! - 09: தமிழர்க்கு மாற்று வரலாறு!

ஆ.சிவசுப்ரமணியன் தமிழகத்தின் மிகச் சிறந்த வரலாற்றாசிரியர். ஆய்வுலகம் பொதுவாகப் புகத் தயங்கும் பிரதேசங்களில் ஆய்வுசெய்து புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சியவர்.

சிவசு என அழைக்கப்படும் பேராசிரியர் சிவசுப்ரமணியன், மார்க்சிய கருத்துநிலையாளர். நாட்டார் வழக்காற்றியலில் புகழ் பெற்றவர். ஆதாரத்தோடும், ஆவணப் பதிவுகளோடும் பொறுப்புணர்ச்சியோடும் கருத்துகளைப் பதிபவர்.

சிவசு வரலாறு எழுதும்முறை மாற்று வரலாறு என்பதில் தொடங்கும். மரபு வரலாறு, மன்னர்களின் பரம்பரை, அந்தப்புரம், போர்கள் எனும் மனிதகுல விரோதம் போன்றவற்றில் நிலைகொள்வது என்றால், மாற்று வரலாறு என்பது சமூக வளர்ச்சிப் போக்கையும் அதில் நிலவிய, நிலவும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவது. சிவசுப்ரமணியனின் ‘அடித்தள மக்கள் வரலாறு’ நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. இது அடித்தள மக்கள் வரலாற்றியலில் மிகவும் முக்கியமான புத்தகம். ஜெர்மானியக் கவியும் நாடக ஆசிரியரும் ஆன பெர்ட்டோ பிரெக்ட் எழுதிய கவிதையை இதில் முன்னுரைக்கிறார் சிவசு.

‘ஏழு நுழைவாயில்கள் கொண்டு

தேபன் நகரைக் கட்டியது யார்?

வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளன

அரசர்களின் பெயர்கள்

அரசர்களா சுமந்து வந்தனர்

கட்டிட வேலைகளுக்கான கற்களை?

பொன்கதிர் வீசும் விமா நகரத்தில்

எவ்விதமான வீடுகளில் வாழ்ந்தனர் தொழிலாளிகள்?

காளை அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்றான்

அவன் தனியாகவா?

அப்போது ஒரு சமையல்காரன் கூடவா

இல்லை அவனோடு...'

- இப்படிப் பேசுகிறது கவிதை. உண்மையில் சாதிய மேலாண்மையும் ஒடுக்கு முறையும் மேலோங்கி இருக்கும் இந்திய சமூகத்துக்கு அழகாகப் பொருந்தும் கவிதை இது!

பெரும் வெற்றி

மரவுவழி வரலாற்றில், ஆவணங்கள் ஆளுவோரால் உருவாக்கப்படுபவை. எழுத்தறிவில்லாத, கல்வி மறுக்கப்பட்ட மக்கள் தம் முந்தைய வாழ்க்கையைத் தங்கள் வாய்மொழி மூலமாகவே பதிவு செய்கிறார்கள். அவர்களின் கதைகள், பாடல்கள், சடங்குகள், பழமொழிகள், நடனங்கள் ஆகியவற்றின் துணைகொண்டு, எழுதப்படாத அந்த அடித்தள மக்களின் வாழ்க்கையை, வரலாறுகளைப் பதிவு செய்திருப்பதில் சிவசுவின் எழுத்து பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குழந்தையை ஏலம் விடுவதாக வேண்டிக்கொள்ளும் பெற்றோர்கள், கோயில் முன் பகுதியில் வைத்து ஏலம் விடுவார்கள். முன் ஏற்பாட்டின்படி உறவினர் ஒருவர் பணம் கொடுத்து ஏலம் எடுப்பார். பின்னர் பெற்றோர்கள் அப்பணத்தைக் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு, ஏலம் எடுத்தவரிடம் இருந்து குழந்தையைப் பெற்றுக்கொள்வார்கள். நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் நிகழும் இச்சடங்கு, எதைச் சுட்டுகிறது? ஒரு காலத்தில் மக்களை அடிமைகளாக ஏலம் விட்டதன் அடிப்படையில் உருவான சடங்கியல் நிகழ்வு இது. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறே இப்படி உருமாறியிருக்கிறது.

வாய் செத்த பூச்சிகள்

சமணத்தை சைவம் தேய்த்தது. மதுரையில் எண்ணாயிரம் சமண முனிவர்கள் பாண்டியனால் கழுவேற்றப்பட்டதைப் திருத்தொண்டர் புராணம் குறிப்பிடும். ‘போம் பழியெல்லாம் சமணர் தலையோடே’ என்ற சமணரைப் பற்றிய பழமொழியில் உள்ள கதையைத் திருவாய்மொழி விளக்கவுரை விளித்திருக்கிறது. சமணர்கள் எவ்வளவு ‘வாய் செத்த பூச்சிகளாக’ இருந்துள்ளார்கள் என்பதன் விளக்கம் இது.

ஒரு கள்ளன் பிராமணன் வீட்டில் கள்ளம் இட்டான். ஈரச் சுவர். இடிந்து விழுந்து கள்ளன் மாய்ந்தான். மன்னரிடம் நீதி கேட்டுச் சென்றார்கள் கள்ளனின் உறவினர்கள். மன்னன் ஒரு மூடன். (எல்லாக் காலத்திலும் அப்படியா?) ‘‘பிராமணனே பழி...’’ என்றான். பிராமணன், சுவரை வைத்த கூலியாளைச் சொன்னான். கூலியாளோ, ‘‘தண்ணீர்விட்ட பெண் அதிகமாக நீரைவிட்டாள்’’ என்றான். பெண்ணோ, ‘‘குயவன் பெரிய பானை கொடுத்தானே...’’ என்றாள். குயவனோ, ‘‘ஒரு தாசி அப்படியும் இப்படியும் போனாள்’’ என்றான். தாசி, ‘‘வண்ணான் புடவை தராமல், நான் போக வர இருந்தேன்’’ என்றாள். வண்ணானோ, ‘‘துவைக்கும் கல் மேல் ஒரு சமணன் உட்கார்ந்திருந்தான். அவன் போனதும் துவைத்தேன்’’ என்றான். சமணனை அழைத்துக் கேட்டான் மன்னன். சமணன், ஒரு மௌனி. அவன் பேசாமல் நின்றான். ‘‘பேசாதவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்...’’ என்று சமண னைக் கொன்றான் மன்னன்.

கிழக்கத்திய கம்பெனி ஆட்சியில் ஏற்பட்ட பெரும் துன்பம், விவசாயிகள் தாம் விளைவித்த பொருளுக்கு ஆங்கிலர் விலை வைத்ததே. இதை நாட்டுப்புற மக்கள் இப்படிச் சொன்னார்கள்:

‘ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி

காகிதம் போட்டான் வெள்ளக்காரன்...’

மக்களிடம் இருந்து மக்கள் வரலாற்றைத் திரட்டுவதே, மக்கள் வரலாறாக இருக்கும். அரசு இயந்திரம், அடிப்படை மக்களுக்கு விசுவாசமாக இருப்பதில்லை.

டுக்கப்பட்ட மக்கள் ஆண்களாயின் கருப்பன், குப்பன் என்று தான் பெயர் சூடிக்கொள்ள வேண்டும். கருப்பசாமி, குப்புசாமி என்று சாமியைச் சேர்க்க முடியாது. பெண்கள் நாச்சாள், பழனாள் என்ற பெயருக்கு மேல், நாச்சம்மாள், பழனாத்தாள் என்றெல்லாம் ஆக முயற்சிக்கக் கூடாது. இது ஒரு காலவிதி. இது மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் துணி, ரவிக்கை, தாவணி ஆகியவைகளைப் பயன்படுத்தி மார்பை மறைக்கக்கூடாது என்பதும் விதி. இந்தக் கொடுமைகளை எதிர்த்து, குமரி மாவட்டத்து ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்து எழுந்து, 1822, 1828, 1858 என மூன்று காலகட்டத்தில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்கள். என்றாலும் அவர்களின் மனச்சீற்றம் குறையவில்லை.

ருமுறை ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா நாடு சுற்றிப் பார்க்க பவனி வந்தார். மன்னரை வரவேற்க வந்த பெண்கள், தங்கள் பெண் உறுப்பைக் காட்டி நின்றார்கள். பேஷ்கார் என்கிற அரசு உத்தியோகஸ்தன், பெண்களிடம் கோபப்பட்டு கேட்டபோது, ‘‘இதுவரை யார் யாருக்கோ மார்பைக் காட்டினோம். அதைவிட மேலான வரவேற்பை மன்னருக்குத் தர வேண்டாமா?’’ என்றார்களாம். ஆய்வாளர் ஆ.கா.பெருமாளை மேற்கோளிட்டு சிவசு இக்கதையைக் குறிப்பிடுகிறார்.

ந்நூலில் குறிப்பிடும்படியான கட்டுரையில் ஒன்று, தாது வருஷத்து பஞ்சம் பற்றியது. 1876. வருஷம் தொடங்கி 1890 வரை நீடித்த மிகப் பெரும் பஞ்சம். விக்டோரியா மகாராணியின் நேரடி ஆட்சி இந்தியருக்கு தந்த கொடை இது. இப்பஞ்சத்தை வாய்மொழிப் பாடல்கள் பதிவு செய்திருக்கின்றன.

‘தாது வருஷம் பஞ்சத்திலே - ஓ சாமியே

தாய் வேறே பிள்ளை வேறே

மாசி மாதத்திலே மாடுகளும் பட்டினியே

பங்குனி மாதத்திலே

பால் மாடெல்லாம் செத்துப்போச்சே

காட்டுப் பக்கம் நூறு பிணம்; வீட்டுப் பக்கம் நூறு பிணம்

ரோட்டுப் பக்கம் நூறு பிணம்...’

ணக்கன் வழக்காறுகள் என்றொரு கட்டுரை. நில வருவாய் முக்கிய ஆதாரமாக இருந்தது ஆங்கிலேயருக்கு. ஆகவே, வரி வசூலிப்பது நிலங்கள் பற்றிய அளவுகள் கணக்கன் அல்லது கர்ணம் வசம் இருந்தது. அரசு அதிகாரமும் இருந்ததால் ஊழலும் அவர்களிடம் இருந்தது. மக்கள் வெறுக்கும் அதிகாரிகளில் கணக்கன் உண்டு.

‘இருந்தும் கெடுத்தான் இருக்கங்குடிக் கணக்கன், செத்தும் கெடுத்தான் இருக்கங்குடிக் கணக்கன்’ - என்று ஒரு பழமொழி உண்டு. என்ன விஷயம்?

இருக்கங்குடிக் கணக்கன் அயோக்கியன். சூது வாது செய்பவன். அவனை மக்கள் வெறுத்தார்கள். ஒருநாள் அவன் சாக இருந்தான். ஊராரை அழைத்தான். சாகிறவனாயிற்றே என்று மக்கள் போனார்கள். அவர்களிடம் அவன், தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரினான். தான் செத்த பிறகு தன்னுடைய உடம்பை தரையில் இழுத்துக்கொண்டு போய் செருப்பால் அடித்துப் புதைக்க வேண்டும் என்றான். ஒரு நாள் செத்தும் போனான். சுடுகாட்டில் மக்கள் அவனை மகிழ்ச்சியாக அடித்தார்கள். அச்சமயம் போலீஸ் வந்தது. சாகும் முன்பே, போலீஸுக்குத் தன்னை மக்கள் கொல்ல இருக்கிறார்கள் என்று கடிதம் கொடுத்திருந்தான். மக்களை கைது செய்தது போலீஸ்.

‘அடித்தள மக்கள் வரலாறு’ போலவே, ‘தமிழகத்தில் அடிமை முறை வரலாறும் வழக்காறும்’, ‘கூலித் தமிழ் காட்டும் சமுதாயம்’, ‘காலனியமும் கச்சேரித் தமிழும்’ போன்ற பல அரிய நூல்களின் ஆசிரியர் சிவசு. தமிழர்கள் தங்களை அறிந்துகொள்ள - சரியாக அறிந்துகொள்ள உதவும் பெரிய துணை, இப்புத்தகங்கள்!

- சுடரும்... | எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x