

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா 01.09.2023 இல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. திங்கள்கிழமை (11.09.2023) நிறைவுபெறும் இந்தப் புத்தகக் காட்சியில், இந்து தமிழ் திசை வெளியீடுகள் (அரங்கு எண்கள் 22, 23) கிடைக்கும். எழுத்தாளர்கள் நக்கீரனும் பவா செல்லத்துரையும் இன்று (09.09.2023) உரையாற்றுகிறார்கள். நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் புத்தகக் காட்சி நடைபெற்றுவருகிறது.
மாடம்பாக்கம் புத்தகத் திருவிழா: சென்னை மாடம்பாக்கம் சந்தரேசன் நகர் ஸ்ரீ சுபிக்ஷம் ஹாலில் புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது. இம்மாதம் 10.09.2023இல் நிறைவுபெறவுள்ள இந்தப் புத்தகக் காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகளும் கிடைக்கும். வள்ளி புத்தக நிலையம் இந்தப் புத்தகக் காட்சியை ஒருங்கிணைத்துவருகிறது. தொடர்புக்கு: 9884355516.
டிஸ்கவரி பதிப்பகத்துக்குத் தேசிய விருது: தமிழின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்று டிஸ்கவரி பதிப்பகம். கலை, இலக்கியம், சினிமா எனப் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டுவரும் இந்தப் பதிப்பகத்துக்கு, இந்தியப் பதிப்பாளர் கூட்டமைப்பின் சிறந்த தமிழ்ப் பதிப்பகத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் பதிப்பாளர் வேடியப்பன். டிஸ்கவரி பதிப்பகத்துடன் டிஸ்கவரி புக்பேலஸ் என்கிற புத்தகக் கடையையும் இவர் நடத்திவருகிறார்.
சென்னையின் வாரந்தோறும் நடைபெற்றுவரும் இலக்கியக் கூட்டங்களுக்குத் தொடக்கமாக அமைந்தது இந்தப் புத்தகக் கடைதான். தற்போது இலக்கியக் கூட்ட அரங்கு, திரையிடல் அரங்கு, சிற்றுண்டிக் கடை எனப் பல வசதிகளுடன் இந்தப் புத்தகக் கடை கே.கே. நகர் முனுசாமி சாலையில் செயல்பட்டுவருகிறது.
தொ.பரமசிவன் புத்தகம் சலுகை விலையில்... தமிழ்ப் பண்பாட்டைத் தன் எழுத்துகள் வழி துலக்கப்படுத்தியவர் பேராசிரியர் தொ.பரமசிவன். இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவை தொகுக்கப்பட்டு ‘தென்புலத்து மன்பதை’ என்கிற பெயரில் உயிர் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. தொகுப்பாசிரியர் ஏ.சண்முகானந்தம். ரூ.500 விலை கொண்ட இந்தத் தொகுப்பு செப்டம்பர் 17ஆம் தேதி வரை சலுகை விலையில் ரூ.400-க்கு விற்கப்பட்டுவருகிறது. சலுகை விலை பிரதிக்கு: 98403 64783
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது: கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று (09.09.2023) சென்னை இந்திரா நகரில் உள்ள யூத்ஹாஸ்டலில் மாலை 6 மணி அளவில் நடைபெறவுள்ளது. வீணைக் கலைஞர் ரமணா பாலச்சந்தர், மிருந்தங்கக் கலைஞர் விஜய் பி நடேசன் ஆகியோர் விருதுபெறுகின்றனர். இருவரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.