

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருத்தி, அதன் அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மற்றொருத்தி. இந்த இரண்டு பெண்களுக்கு இடையில் உலகின் மாபெரும் தத்துவங்களும் அதிசயிக்கத்தக்க அறிவியல் கண்டுபிடிப்புகளும் உருவாகி விட்டன. லட்சியங்கள், அரசு அமைப்பு முறைகள் எல்லாம் மாற்றம் கண்டுவிட்டன. ஆனால், பெண் என்கிற புள்ளியில் அந்தப் பெண்கள் இருவரும் இணைகிறார்கள். இத்தனைக்குப் பிறகும் அவர்களது சங்கடங்கள் மாறிவிடவில்லை. அவர்கள், பத்மாவும் நைனாவும்.
மும்பையில் விளம்பரத் துறையில் பணிபுரியும் நவநாகரிகப் பெண் நைனா. இன்றைய காலகட்டத்தில் நைனா கேரளத்தில் இருக்கும் தனது மூதாதையரின் எட்டுக்கட்டு வீட்டைத் தேடிப் போவதிலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. அங்கு ஒரு நாள்குறிப்புப் புத்தகத்தைக் கண்டெடுக்கிறாள். நாவல் பின்னோக்கித் தன் சிறகை விரிக்கிறது. இந்த விவரிப்பின் வழி கேரள, தமிழ்க் கலாச்சாரமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பிராமணக் குடும்பங்கள் கேரளக் கலாச்சாரத்தில் ஒரு பாதிப்பை விளைவித்தவை.
கேரளக் கலாச்சாரத்தை உள்வாங்கிக்கொண்டு, தங்கள் தமிழ்க் கலாச்சாரத்தை அங்கும் கையளித்துள்ளார்கள். இந்த அம்சம் நாவலாசிரியரின் விவரிப்பின் வழி புலனாகிறது. 1900இல் கேரளத்தில் வாழும் பேர்கேட்ட பிரமாணக் குடும்பத்துக்கு பத்மா வாழ்க்கைப்பட்டுப் போவதில் தொடங்குகிறது.
பத்மா என்கிற 16 வயதுப் பெண், அழகும் புத்திக்கூர்மையும் கொண்டவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். அந்தப் பெரிய வீட்டில் எல்லாருக்கும் பிடித்தவளாக மாறுகிறாள். தன் கணவனின் மனம் கவர்ந்தவளாக ஆகிறாள். மோகமும் அன்பும் மட்டுமல்ல, அவள் மீது அவனுக்குப் பெரும்மதிப்பும் இருந்தது.
இன்றைய நிலையிலிருந்து பார்க்கும்போது இது கவனிக்கத்தகுந்த அம்சம். எல்லாம் இருந்தும் அவளுக்கு ஒரு குறை. பிள்ளைப் பேறு என்பது எந்த அளவு ஒரு பெண்ணின் தெய்வாம்சமாகப் பார்க்கப்படுகிறதோ, அதே அளவுக்கு அது அவளுக்குச் சாபமாகவும் ஆகிறது.
இந்தப் பிரபஞ்சம் தொடங்கிய காலத்தில் பிள்ளை பெறும் இந்த அம்சம் பெண்ணுக்குப் பேறாக இருந்திருக்கும். அவளே ஆக்கும் தெய்வம். அவளே மனிதக்கூட்டத்தின் தலைவியாகவும் இருந்துள்ளாள். ஆனால், இதுவே அவளுக்குப் பின்னால் சாபமாக ஆகிறது. ஆண் தலைமை கொண்டதால் இதெல்லாம் மாறுகிறது. பத்மாவுக்குப் பிள்ளைகள் இல்லை. அவள் பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லை.
அந்த வீட்டின் நிலைமை தலைகீழாகிறது. அதனால் ஆண் முன்னெடுத்துச் செல்லும் இந்தக் குடும்ப அமைப்பின் பாதுகாவலர்களாகப் பெண்களே இருக்கிறார்கள் என்பது முரணான அம்சம். அந்தப் பெண்களும் கூடிபத்மாவின் கணவனுக்கு மறுமணம் செய்துவைக்க நினைக்கிறார்கள்.
நைனாவும் பத்மாவும் இந்தப் புள்ளியில் ஒன்றிணைகிறார்கள். இருவரும் தனித்த ஆளுமை கொண்ட பெண்கள். ஆனால், அவர்களைப் பலவீனமாக்கும் பிள்ளைப்பேறின்மை என்னும் அம்சம் அவர்கள் வாழ்க்கையைப் புயலுக்குள் தள்ளிவிடுகிறது.
வாழ்க்கையில் எதிர்பார்க்கவே முடியாத திருப்பத்தில் அவர்கள் இந்த வேதனையை எதிர்கொள்கிறார்கள். அவர்களது நம்பிக்கைக்கு உரிய கணவன்மார், இந்தச் சமூகக் கற்பிதத்தில் எடுக்கும் முடிவுகள் அவர்களைப் பாதிக்கின்றன. இந்த இரண்டு பெண்கள் வழி தென்னிந்தியப் பெண்களின் வாழ்க்கையைத் திருத்தமாக மாலா மகேஷ் இதில் சித்தரித்துள்ளார். - விபின்
பத்மா
மாலா மகேஷ்
இந்து தமிழ் திசை
விலை: ரூ.400
தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402
ஆன்லைனில் வாங்க: store.hindutamil.in/publications