

டான் ட்வான் எங் (Tan Twan Eng) மலேசிய எழுத்தாளர்; சட்டம் பயின்றவர். இதுவரை மூன்று நாவல்கள் எழுதியுள்ளார். இவரது இரண்டாவது நாவலான ‘The Garden of Evening Mists’ பல விருதுகளை வென்றதுடன், புக்கர் இறுதிப் பட்டியலிலும் இடம்பெற்றது. ‘தி ஹவுஸ் ஆஃப் டோர்ஸ்’ என்கிற இந்த நாவல், இரண்டு பிரபலங்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டது. எழுத்தாளர் வில்லியம் சாமர்செட் மாவ்மின் வாழ்க்கை, சுவாரசியங்கள் நிறைந்தது.
ஆங்கிலேயரான இவர் பிறந்தது பாரிஸில். மருத்துவக் கல்வி பயின்ற இவர், முதல் உலகப் போரின்போது மருத்துவராகப் போர்முனையில் பணியாற்றியிருக்கிறார். நாடக ஆசிரியராகப் பணமும் புகழும் பெற்று, முப்பத்து மூன்று நாடகங்கள் எழுதி, பின் அதை நிறுத்தி நாவல்கள், கதைகள் எழுத ஆரம்பித்தவர்.
இவரது ‘Of Human Bondage’ வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல். ஆங்கிலேயர்களுக்கு உளவாளியாகப் பணிபுரிந்தவர். கடைசியாகப் பயணங்கள் செய்து, அந்த அனுபவங்களைக் கதைகளாக மாற்றியவர். இவர் இந்த நாவலின் பிரதானக் கதாபாத்திரங்களில் ஒருவர்.
ஆப்ரிக்கா (1947), மலேசியாவின் பினாங்கு (1910, 1921) ஆகிய மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை இது. 1921இல் சாமர்செட் மாவ்ம், மலேசியாவில் ஒரு நண்பரின் வீட்டில் தங்குகிறார். நண்பரின் மனைவி இவருக்குச் சொல்லும் கதை 1910இன் கதை. அவருடைய கதை மட்டுமன்றி பலரது கதைகளும் அதில் வருகின்றன. முதல் அதிபரும் புரட்சியாளருமான சன் யாட் சென்னின் கதை உள்படப் பல கதைகளையும் அவர் சொல்கிறார். எல்லாவற்றிலும் முக்கியமாக 1920களின் மலேசியா குறித்த சித்திரம் கண்முன் விரிகிறது.
சீனர்கள் ஜப்பானியர்களாலும், ஆங்கிலேயர்களாலும் பலவகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாற்பது, ஐம்பது வருடங்களுக்குள் சீனா வல்லரசானது ஒரு வியக்கத்தக்க முன்னேற்றம். சீனா குறித்த ஏராளமான தகவல்கள் நாவலில் இருக்கின்றன. இந்த நாவல் ஒரு நினைவேக்கப் பயணம் எனலாம். அதை வரலாற்று நாவலாக இரண்டு பிரபலமானவர்களை வைத்து மாற்றியிருக்கிறார்.
இதற்காக இவர் ஆராய்ச்சி மேற்கொண்ட நூல்களின் பட்டியல் பின்னால் இணைக்கப்பட்டிருக்கிறது. குறைவாக எழுதினாலும் இலக்கியத்தில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் எழுத்து. வரலாற்று நாவல் என்பது இப்படித்தான் எழுதப்பட வேண்டும். - சரவணன் மாணிக்கவாசகம்
தி ஹவுஸ் ஆஃப் டோர்ஸ் (The House of Doors)
டான் ட்வான் எங்
கேனாங்கேட் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.1800
தடம்மாறாக் கதைகள்: வெகுசன இதழ்களின் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற, பிரசுரமான 16 கதைகளின் தொகுப்பு இது. என்றாலும் வாசித்து முடித்த பின்னரும் நம் நினைவோடு உறவாடும் கதைகளாக இருக்கின்றன. சிக்கல் அற்ற எளிய மொழியில் அமைந்த கதையாடல், எழுத்தாளருக்கு வெகு லாகவமாகக் கைகூடியுள்ளது.
எங்கும் தேங்கி நிற்காமல் கரைபுரண்டோடும் வெள்ளமென வாசிப்பில் நம்மை வேகமாகக் கடத்திச்செல்லும் இக்கதைகள், படிப்பதற்கான சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. 2018ஆம் ஆண்டின் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘நிற்க அதற்குத் தக’ கதையில் வரும் பொறியியல் பட்டதாரியான கிருஷ்ணா, வேலை தேடி பெங்களூரு செல்கின்றான்.
‘என் சர்டிபிகேட்டை முகமூடியோ, ஹெல்மெட்டோ இல்லாமல், கழுத்தில் டை கட்டி வந்து, ரெண்டே ரெண்டு வார்த்தை ஆங்கிலம் பேசிப் பறிச்சிட்டாங்க’ என்று சொல்லும் கிருஷ்ணா, ‘படிக்காதவங்க எடுக்கிற முடிவைப் படிச்சவங்களால எடுக்க முடியறதில்லை’ என்று கதையை முடித்து, ‘சரிதான்’ என்று நம்மையும் சொல்ல வைப்பதில் வெற்றியடைகிறார் எழுத்தாளர். நூலிலுள்ள எல்லாக் கதைகளும் எடுத்துக்கொண்ட கதைக் களனிலிருந்து தடம்மாறாக் கதைகளாக உள்ளன.- மு.முருகேஷ்
கால தாமதமாக வந்துகொண்டிருக்கி்றது…
நா.கோகிலன்
தேநீர் பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 9080909600
குறள் கவிதை: யாவருக்குமான அறநெறிகளைப் போதிக்கிற உலகப் பொதுமறைக்குத் தமிழில் உரைகள் பல உண்டு. இந்தத் தலைமுறைக்கு ஏற்ற வகையில் திருக்குறளின் 1,330 குறள்பாக்களுக்கும் உரையெழுதியதோடு குறுங்கவிதையாகவும் எழுதியிருக்கிறார் தமிழ்க்காரி (சித்ரா மகேஷ்).
இரண்டடி குறளின் பொருளை மூன்று வரிகளில் கவிதையாகச் சொல்ல முனைந்திருக்கிறார். அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்களையும் பிரித்தறியும் வகையில், மூன்று நிறங்களில் நூல் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் குறள்களுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன. அவை கண்களுக்கு விருந்தாகவும் இருக்கின்றன. - ப்ரதிமா
வாழும் நெறி வள்ளுவம்
தமிழ்க்காரி குறுங்கவிதைகள்
அந்தரி பதிப்பகம்
விலை: ரூ.800
தொடர்புக்கு: 7373736276