

மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பான சக்கரத்தின் பயன்பாட்டால் பண்டமாற்று முறை பல்வேறு இடங்களுக்குத் துரிதமாக நகர்ந்தது. இம்முறை இன்று வரை தொடர்ந்துவருகிறது. ஆனால், இந்நகர்வினைக் குறித்து நாம் எந்த அளவிற்குப் புரிதலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்? அந்தவகையில், தமிழ் இலக்கியப் பரப்பில் இன்றளவும் பேசப்படாத பல்வேறு களங்கள் பேசாப் பொருளாகவே இருக்கின்றன. அதில் ஒன்று, லாரி ஓட்டுநர்களும் அவர்களின் நிச்சயமற்ற வாழ்வும்.
எழுத்தாளர் கவிப்பித்தன் எழுதி, நீலம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘சேங்கை’ நாவல் இந்நகர்வினைக் குறித்த விரிவான பார்வையுடன் வெளிவந்திருக்கிறது. எழுத்தாளர் பாலகுமாரனின் ‘இரும்புக் குதிரைகள்’ நாவலும் எழுத்தாளர் வ.கீராவின் சிறுகதைகளும் இதே களம், பொருள் சார்ந்து எழுதப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும் இக்களத்தினை முழுமையாக அணுகித் தெளிவுற விளக்க இந்நாவல் முயல்கிறது.
பொதுவாக இந்த நாவல் நாம் அறியாத நிலம், அதில் வாழும் மனிதர்கள், அந்நிலத்தின் சமூக அரசியல், வாழும் நிலத்தில் கடந்து செல்லும் அன்றாடம், கண்டுகொள்ளப்பட வேண்டிய ஆனால் புறக்கணிக்கப்படும் பல விஷயங்கள், மனிதர்களின் உண்மையான நிலையை, பிரச்சினைகளை உணர்த்துவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
நகரம் குறித்தான அலங்காரப் பொய்களைச் ‘சேங்கை’ நாவல் தகர்த்தெறிவது மட்டுமல்லாமல், கனவுலகத்தில் உலாவுதல், இயல்பினை மீறிய அதீதக் கற்பனைக் கதாபாத்திரங்கள் அற்றதாகவும் இருப்பது இந்நாவலின் ஒரு சிறப்பம்சம்.
இந்த நாவலை இரு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம். பலதரப்பட்ட லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள், அவர்தம் குடும்பப் பின்னணி, பொருளாதாரச் சூழல், திருட்டு, ஆள்கடத்தல், கொலை, பாலியல் தொழில், வழிப்பறி, விபத்து, லாரி ஏஜென்சிகள், அதிக வட்டி, தொழிற்சாலை ஏற்றுமதி/இறக்குமதியில் நடக்கும் உழைப்புச் சுரண்டல், தந்திரங்கள், போக்குவரத்துத் தடத்தில் நடக்கும் அவஸ்தைகள், இழப்புகள் போன்றவை குறித்து மணி என்கிற நபரின் வழியாக முதல் பகுதியைப் பேசுகிறார் நாவலாசிரியர்.
மற்றொரு முக்கிய நபரான சுந்தர் மூலம், நாவலின் இரண்டாம் பகுதியில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த குடும்பங்களின் அன்றாடப் பாடுகள், பொருளாதார நிலை, பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல், ஏமாற்றுதல், அதிகாரத்திற்கு எதிராகத் துளியும் எதிர்க்குரல் எழுப்ப முடியாத சமூகக் கட்டுப்பாடு, முறைப்படி, சட்டப்படி எல்லாம் நடந்துகொள்ள முடியாத சூழல் - இவற்றை மிகச் சரியாக ஒரு பட்டியல் இனப் பிரதிநிதியாகப் பெருங்குரலெடுத்துச் சொல்கிறார்.
இவ்விரு பகுதிகளின் ஊடாகப் பல கிளைக் கதைகளை உள்ளடக்கிய, ஒரு வகையில் பெருங்கதையைக் கோருவதாகவும் உள்ளது இந்நாவல். ‘சேங்கை’ என்றால் பாழடைந்த நீர்நிலை என்று பொருள். இங்கு ஒரு வகையில் லாரிப் போக்குவரத்தில் ஈடுபட்டவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பாழடிக்கப்பட்ட நீர்நிலைக்கு ஒப்பானவர்களாக ஒரு புள்ளியில் இணைக்கிறார் கவிப்பித்தன். இவரின் ‘நீவா நதி’, ‘மடவளி’, ‘ஈமம்’ ஆகிய நூல்கள் தமிழ் இலக்கிய வாசகப் பரப்பில் பரவலாகப் பேசப்பட்டவை.
நாவலில் படித்த பட்டதாரி இளைஞர்கள் மணி - சுந்தருக்கு இடையே நடக்கும் உரையாடலும், சிறு வயது சுந்தருக்கும் வாடானுக்கும் இடையே நடக்கும் கேள்வி - பதில் பகுதியும் ஆண்டாண்டு காலமாக இந்த உலகில் நடந்துகொண்டிருக்கும் சாதியப் பிற்போக்குத்தனம், அதை வெளிப்படுத்தும் மக்களின் மனோபாவத்தைப் படம்போட்டுக் காட்டுகிறது.
நாவல் நடைபெறும் காலகட்டத்தை, குறிப்பாக வருடத்தை எண்களாகக் குறிப்பிடாமல் பேஜர், சாராய உறை, பெரிய சைஸ் செல்லுலார் போன், ‘காதல் கோட்டை’ திரைப்படம் என்று குறிப்பாக உணர்த்துவது நல்ல உத்தி. ஆங்காங்கு நான் லீனியர் முறையில் சொல்லப்படும் சம்பவங்கள் இறுதியில் இணைவதும், திடீரென அதிர்ச்சியான ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டுப் பின் அதைப் பற்றி விரிவாகப் பேசுவதும் விறுவிறுப்புடன் வாசிக்க முடிவதற்குக் காரணமாகிறது.
கணிசமாகப் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் வட ஆர்க்காடு வட்டார மொழியில் கவிப்பித்தனின் எழுத்து தனித்துவமானது. தகவல்களைச் சரியாக அலங்காரப் பூச்சு இல்லாத தன்மையுடன், அதே சமயத்தில், சுவாரசியம் குறையாமல் இலக்கிய நயத்துடன் கதைகளாக மாற்றக்கூடிய எழுத்தாளர் என்பதற்கு இந்நாவல் சான்றாகிறது.
கிராமப்புறங்களில் சாதியினைக் காரணமாகச் சொல்லி ஒடுக்கப்பட்டவர்களின் வலியை எடுத்துக்காட்டுவதாக இருப்பதால் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.
சேங்கை, கவிப்பித்தன்
நீலம் பதிப்பகம்,
விலை: ரூ.400
தொடர்புக்கு: 63698 25175
- தொடர்புக்கு: velkannanr@gmail.com