Published : 02 Dec 2017 10:41 AM
Last Updated : 02 Dec 2017 10:41 AM

சிற்றிதழ் பார்வை: சோவியத் தோற்றது! சே வென்றார்?

 

சே

குவேராவின் 50-வது நினைவு தினத்தையொட்டி அவரைப் பற்றி உலகின் பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டன. தமிழில் வெளிவந்துள்ள கட்டுரைகளில் ‘காக்கைச் சிறகினிலே’ நவம்பர் இதழில் வெளிவந்துள்ள அமரந்த்தாவின் கட்டுரை முக்கியமானது. சே குவேராவை ஒரு புரட்சியாளராக எல்லோரும் அறிவார்கள். ஆனால், அவர் மிகச் சிறந்த வகையில் பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கியவர் என்பதை விளக்குகிறது அமரந்த்தாவின் கட்டுரை. சோவியத் ரஷ்யாவில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதாரத் திட்டங்களில் சே குவேராவுக்கு உடன்பாடில்லை.

சோவியத் அரசியல் பொருளாதாரக் கையேட்டை வேதப் புத்தகத்தைப் போலவே வழிபடும் மனப்பாங்கைக் கைவிட வேண்டும் என்று விரும்பினார். அவரே, மார்க்சிய அடிப்படைகளின் துணைகொண்டு ஒரு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்கினார். அதைப் பின்பற்ற கியூபாவும்கூட முயற்சிக்கவில்லை. சோவியத் ஒன்றியம் முன்னெடுத்த திட்டங்கள் தோல்வியடைந்து, அவற்றைப் பின்பற்றிய கியூபா பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்த சூழலில்தான் சே குவேராவின் திட்டங்கள் தூசு தட்டப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன.

தற்போது வெனிசுலாவில் முழுமையாகவும் மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் பகுதியளவிலும் சே வகுத்த பொருளாதாரத் திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன என்பதை விரிவாகப் பேசியிருக்கிறது அமரந்தாவின் கட்டுரை. ‘காக்கைச் சிறகினிலே’ தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளைப் பிரசுரிக்க வேண்டும்!

-புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x