

இலக்கிய வளமும் தொன்மையும் கொண்டது அரபி மொழி. 21 நாடுகளில் ஆட்சி மொழியாகவும் அரபி மொழி உள்ளது. இந்தியாவை ‘அல் ஹிந்த்’ என்று அரபி மொழியில் அழைக்கிறார்கள். இஸ்லாமிய சமயத்துடன் தொடர்புடைய மொழியாக இருப்பதால், உலகெங்குமுள்ள முஸ்லிம் சமூகத்தினரால் இம்மொழி விரும்பிக் கற்றுக்கொள்ளப்படுகிறது. அரபி மொழி மற்றும் அதன் இலக்கியம், கலாச்சாரம் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய 17 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. நூல் வடிவமைப்பில் இன்னும் கவனமெடுத்திருக்கலாம்.
அரபிப் பிறை நிலா | க.மு.அ.அஹ்மது ஜுபைர் விலை: ரூ. 90. | டாக்டர் அஹ்மது ஜுபைர் வெளியீடு, சென்னை-14. |
வெள்ளை நிறப் பெண்தான் தேவை என்று விளம்பரம் தந்து மணப் பெண்களைத் தேடும் இக்காலத்தில் கறுப்பு நிறப் பெண்ணைக் கதாநாயகன் சுபத்திரன் ஏன் மணக்கிறான் என்பதுதான் கதை. மருத்துவச்சியின் மகனாகப் பிறக்கும் சுபத்திரன், சாதிய ஒடுக்குமுறைக்கும் ஏச்சுக்கும் ஆளாகும் தாயையும் தங்கையையும் தன்னுடன் நகருக்குக் கூட்டிவந்து வாழவைப்பதுடன் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து கறுத்த பெண்ணைத் தேர்வு செய்துகொண்டு மணக்கிறார். சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாவோர் தங்களுடைய படிப்பு, வேலைக்காக மட்டுமல்லாமல் சமூக சம அந்தஸ்துக்காகவும் மதம் மாறும் கள யதார்த்தம் வெகுசில வரிகளில் உணர்த்தப்படுகிறது.
கறுப்பும் வெள்ளையும் | செ.கணேசலிங்கன், விலை: ரூ.70 | குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை-26. தொடர்புக்கு: 9444808941. |
அறிவியல் என்பது வெறும் புதிர்களாலான அதிசயமல்ல. அது ஒரு தொடர் அறிவுச் செயல்பாடு. தேடுதலோடு இயங்குபவர்களுக்கே அறிவின் கதவுகள் திறக்கும். 1907-ல், ‘அந்தரத்திலிருந்து விழுந்துகொண்டிருப்பவரால், தன் உடலின் எடையை உணர முடியாது’ எனும் ஒற்றை வரி உண்மையிலிருந்தே பொதுச் சார்பியல் விதியை உருவாக்கும் பணிகளைத் தொடங்கினார் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். இயற்கையின் ஆதார உண்மையைத் தேடி, ஐன்ஸ்டைன் செய்த பிழைகள், சார்பியலின் விளைவுகள் என 12 அறிவியல் கட்டுரைகள் அடங்கியுள்ள இந்நூல் சார்பியல் நூற்றாண்டு குறித்த கேள்விகளுக்கு எளிய பதில்களைச் சுருக்கமாகத் தந்துள்ளது.
100 ஆண்டுகளாக பொதுச் சார்பியல் | பேரா. க.மணி விலை: ரூ.100. | அபயம் பதிப்பகம், கோயமுத்தூர்-641015 9095605546 |
தொடர்ந்து கவிதைத் தளத்தில் இயங்கிவரும் இளங்கவிஞரின் மூன்றாவது கவிதை நூல். கவித்துவத்துடன் கூடிய சமூக அரசியல் விமர்சனங்களை முன்வைக்கும் கவிதை மொழி ரகசியனுடையது. ஒற்றை நேர்க்கோடாய் தொடங்கும் இவரது கவிதைகளில், பல கிளைகளாகப் பிரிகின்றன வாழ்க்கைச் சிக்கல்கள். பாலாற்றில் புதைக்கப்பட்ட ஏசு, சேரியில் பிறந்ததனால் ஆன பகை, கருநிறக் கல்லில் இருந்த சாமிகளும், எச்சில் உணவு உண்ணும் கடவுள் ஆகிய கவிதைகள் பூடகத்தன்மையற்ற நேரடி அரசியல் குரலில் பேசி, கவனிப்பை ஏற்படுத்துகின்றன.
காற்றில் கூனும் கிளை | ரகசியன் விலை: ரூ.80 | சமன் வெளியீடு, பேரணாம்பட்டு-635810 9442413618 |
தனது ஆய்வு மூலமாக வைகுண்ட சுவாமிகள் பற்றிய வரலாற்றுச் செய்திகளை வெளிக்கொணர்ந்த இந்நூலாசிரியர், காந்தியச் சிந்தனைகளால் பெரிதும் கவரப்பட்டவர். இன்றைக்கு காந்தியம் உலகளவில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை வெளிக்கொண்டுவரும் முயற்சி யின் ஒரு பகுதியாக இந்நூலை எழுதியுள்ளார். காந்தியத்தால் தாக்கம் பெற்ற ஆளுமைகளான கான் அப்துல் கஃபார் கான், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, ஆங் சான் சூச்சி உள்ளிட்ட 8 ஆளுமைகளின் வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. நூலின் உள்ளே இடம்பெற்றிருக்கும் படங்களைச் சற்றே பெரிதாகத் தந்திருக்கலாம்.
காந்தி வழியது உலகம் | பேரா. இராம் பொன்னு விலை: ரூ.150. | சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை-625001 0452-2341746 |
வெள்ளை நிறப் பெண்தான் தேவை என்று விளம்பரம் தந்து, மணப் பெண்களைத் தேடும் இக்காலத்தில் கறுப்பு நிறப் பெண்ணைக் கதாநாயகன் சுபத்திரன் ஏன் மணக்கிறான் என்பதுதான் கதை. மருத்துவச்சியின் மகனாகப் பிறக்கும் சுபத்திரன், சாதிய ஒடுக்குமுறைக்கும் ஏச்சுக்கும் ஆளாகும் தாயையும் தங்கையையும் தன்னுடன் நகருக்குக் கூட்டிவந்து வாழவைப்பதுடன், ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து கறுத்த பெண்ணைத் தேர்வு செய்துகொண்டு மணக்கிறார். சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாவோர் தங்களுடைய படிப்பு, வேலைக்காக மட்டுமல்லாமல் சமூக சம அந்தஸ்துக்காகவும் மதம் மாறும் கள யதார்த்தம் வெகுசில வரிகளில் உணர்த்தப்படுகிறது.
கறுப்பும் வெள்ளையும் | செ.கணேசலிங்கன், விலை: ரூ.70 | குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை-26. 9444808941. |
- தொகுப்பு மு.முருகேஷ்