

சமூகத்தைப் படிப்பதும் எழுதுவதும்தான் என் உயிர்மூச்சு என்று சொல்லும் இமையத்தின் எட்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘திருநீறு சாமி’. தலித்எழுத்து, நடுநாட்டு எழுத்து என்றெல்லாம் இமையத்தின் கதைகள்மீது வைக்கப்படும் பார்வைகளைத் தகர்த்து,நடுத்தர மக்களின் வாழ்க்கைமுறையை, நகர்ப்புறத்து மக்களின் சிக்கல்களை, கல்விப்புலம், சமூக ஊடகம், மருத்துவம், அரசியல் சார்ந்து நவீனச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அணுகுகின்ற எழுத்துகளாக இக்கதைகளைக் காண முடிகிறது.
தலைப்புக் கதையான ‘திருநீறுசாமி’ கிராமம்-நகரம், தமிழ்நாட்டுக் கணவன் - டெல்லி மனைவி, மரபு-நவீனம், சித்தர் மரபு-நிறுவனமயப்பட்ட கோயில் மரபு உள்ளிட்ட முரண்களில் பின்னிப் பிணைந்த செழுமையோடு நகரும் கதை. தமிழ்நாட்டுக் கிராமத்தில் பிறந்து டெல்லிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அங்கேயே வசிக்கும் அண்ணாமலையின் குலசாமி கோயில் விருப்பத்துக்கும் அதை அலட்சியமாக நிராகரிக்கும் மனைவிக்குமான உரையாடலும் விவாதமும்தான் கதை. இதன் வழியே தமிழ் சித்தர் மரபின் செழுமையையும் கோயில் நிறுவனங்களின் வணிகச் செயல்பாட்டையும் ஆசிரியர் விவரித்துச் செல்கிறார்.
குழந்தை பெற இயலாத ஆணின் வலியை, பெண்ணின் துயரத்தை, ‘மனமுறிவு’, ‘ஆண்டவரின் கிருபை’ ஆகிய கதைகள் மிக நுட்பமாகப் பேசுகின்றன. திருமணமான ஆணையோ பெண்ணையோ பார்த்து நாம் இயல்பாகக் கேட்கும், ‘விசேஷம் எதுவும் இல்லையா?’ என்கிற கேள்வி அவர்கள் மனதை எப்படி நொறுங்கச் செய்கிறது என்பதை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் வெளிப்படுத்தும் இக்கதைகள், பல இடங்களில் வாசகரின் மனசாட்சியையும் அசைத்துப் பார்க்கின்றன.
ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால்கூடப் போதும் என்கிற ஆசையில் தொடங்கி, குழந்தை ஊனத்துடன் பிறந்தால்கூடச் சரிதான் என்கிற நிலைக்கு நகர்ந்து, குழந்தை இறந்தாவது பிறந்தால் போதும் என்று ஏங்கும் பெண்ணின் துயர் நிரம்பி வழியும் தருணங்களை, கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்கிற நிலையில், கடைசி நம்பிக்கையும் இழந்து நிற்கும் கையறுநிலையைக் கூர்மையான மொழியில் இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன.
‘வீட்டை எரிக்கும் விளக்கு’, ‘காதல்’ ஆகிய கதைகள் கல்விப்புலத்தில் மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுகின்றன. காம இச்சை கொண்ட ஒரு சில கல்லூரிப் பேராசிரியர்களிடமும் முனைவர்பட்ட நெறியாளர்களிடமும் மாட்டிக்கொண்டு, அவர்களின் ஆசைகளுக்கு இணங்கவும் முடியாமல் வெளியேறவும் முடியாமல் திணறும் மாணவிகளின் மனத்தவிப்பைப் பதிவுசெய்வதுடன், கல்வி நிலையங்களின் மீதான விசாரணையாகவும் இக்கதைகளைக் காண முடிகிறது. ஒவ்வொரு முனைவர் பட்ட நெறியாளரும் தன்னைச் சுயமதிப்பீடு செய்துகொள்வதற்கான பார்வையை இக்கதைகள் வழங்குகின்றன.
மூன்றாண்டுகளுக்கு முன்பு சீன அதிபரும் இந்தியப் பிரதமரும் மாமல்லபுரத்துக்குச் சென்று சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அங்கு அமைக்கப்பட்டிருந்த பலத்த காவல் அரண்களையும் மீறி, உள்ளே வந்த ஒரு நாய் பற்றிய செய்தி அன்றைக்குப் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டு, “நாய்க்குத் தெரியுமா இவர் பிரதமர், இவர் ஜனாதிபதின்னு, அதிகாரமெல்லாம் மனுஷனுக்குத்தான்” என்று அதிகாரக் கட்டமைப்பைப் பகடி செய்கிறது ‘எஸ் சார்’ கதை.
சமகாலத் தனிமனித, குடும்ப, சமூகச் சிக்கல்களை மட்டும்தான் இமையம் எழுதுவார் என்றில்லை. புராண, இதிகாசக் கதைகளிலிருந்தும் ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு தன்னால் சிறந்த கதையை எழுத முடியும் என்பதை ‘சாம்பன்’ கதையில் நிரூபித்திருக்கிறார்.
தனக்குத்தானே சவால்களை உருவாக்கிக்கொண்டு எழுதுகிற இயல்பு இமையத்திடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. மருத்துவம், உயர்கல்வி, ஆன்மிகம், அரசியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் மட்டுமே அறிந்திருக்ககூடிய நுட்பமான செய்திகளை ஆய்வாளனுக்குரிய கவனத்துடன் திரட்டித் தன் கதைகளில் இமையம் கையாண்டிருப்பது வியப்பளிக்கிறது.
சமூகத்திலிருந்து கதைகளை எழுதினாலும் எந்தக் கதையிலும் பிரச்சாரமோ போதனையோ செய்ய முற்படவில்லை இமையம். தான் படைக்கும் கதை மாந்தர்களின் வாழ்க்கை முறையிலோ உரையாடல்களிலோ குறுக்கிடுவதில்லை. தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் நம் மனதோடும் உணர்வோடும் பேசுகிறது. கதை எழுதப்படுவதன் நோக்கம் இதுதானே!
- தொடர்புக்கு: sudaroviya@gmail.com
திருநீறு சாமி (சிறுகதைகள்)
இமையம்
க்ரியா
விலை: ரூ.450
தொடர்புக்கு: 9789870307