

சமீபத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் ‘பங்குடி’. இதன் ஆசிரியர் க.மூர்த்தி. முதல் நாவல் என்றால் நம்ப முடியவில்லை. அப்படியொரு செழுமையான மொழியும் நடையும் வாசிப்பவரை அலுப்புத்தட்டாமல் நூல் முழுமையும் அழைத்துச் செல்கின்றன. எசனை, செருநெலா என்ற ஊர்களில் வாழும் அசல் மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் துக்கமும் இழப்பும் கலந்து வாழ்வின் ஓட்டத்தோடு ஓடுகிற நிதர்சனங்கள் எழுத்துகளாக மிளிர்கின்றன.
கம்பெருமாமலையை நம்பி வாழும் மக்களாக ஒட்டர் குடியினர் அறிமுகமாகின்றனர். மலையிலிருந்து அம்மி, திருவை போன்ற பொருள்களைக் கொத்தி விற்றுப் பிழைப்பு நடத்தி வருபவர்களோடு, அண்டையில் பல்வேறு அடித்தட்டு மக்கள் இணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடுகிறான் மநுகோபால்.
வடக்குச் சீமைத் தலைவனின் ஆணைப்படி கம்பெருமாமலை பாறைகளை உடைத்துக் கோயில் கட்டுவதற்காக ஈவிரக்கமின்றி மலையைச் சிதைத்து, அருகிருக்கும் விவசாயம் உள்ளிட்ட தொழில்களை நசித்து, அவர்களைத் திசைக்கு ஒருவராய் விரட்டுவது கதை முழுவதும் விரிந்து செல்கிறது.
கதையின் ஆணிவேராக நின்று தூக்கி நிறுத்தும் மற்றொரு பாத்திரம் பேரிங்கையும் அவளைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளும். சாமிக்கண்ணுவுக்கு வாழ்க்கைப்பட்டு ஒரு ஆண் குழந்தையையும் பெறுகிறாள். அவன் இறந்து போகிறான். அதனால் அங்கு வாழ முடியாத நிலைக்கு உள்ளாக்கப்படுகிறாள் பேரிங்கை. அவளின் மாமியார் மஞ்சகுட்டிக்கிழவி பல நிலைகளில் கொடுமைகள் செய்கிறாள்.
உடுக்காட்டி அசரக்குஞ்சி குறி சொல்ல ஊர் ஊராக அலைந்து திரிகிறார். அவர் தன் தம்பி பொக்காளிக்கு சோறுதண்ணி ஆக்கிப் போடவெனப் பேரிங்கையை மறுமணம் செய்து வைக்கிறார். பேரிங்கை, பொக்காளியிடம் தனது இழந்த வாழ்வின் சுகதுக்கங்களை எதிர்பார்க்கிறாள்.
பொக்காளி கண்டுகொள்ளாமல் இல்லற வாழ்வில் ஆர்வமில்லாமல் இருக்கிறான். வாழ்நாள் சண்டையும் சச்சரவுமாகக் கழிகிறது. மிளகாய் வியாபாரத்துக்கு வரும் காண்டீபனிடம் தன்னை இழக்கிறாள் பேரிங்கை. இரண்டு பெண் குழந்தைகளையும் பெறுகிறாள். இந்த வாழ்க்கைச் சுழலில் சிக்கி பேரிங்கை என்னவாகிறாள் என்பதை மீதிக் கதை சொல்லிச் செல்கிறது.
கதை நெடுகிலும் பேரிங்கை கதாபாத்திரம் மனதை நெருடிக் கொண்டேயிருக்கிறது. கதாபாத்திரங்களின் வட்டார வழக்கு உரையாடல்கள்தான் கதையின் ஆன்மாவாகத் திகழ்ந்து,மண் வாசனையை நமக்குள் கடத்துகின்றன. கதை நெடுகிலும் பேரிங்கை படும் துயரம் நம்மை அறியாமல் அவளுக்காகப் பரிதாபப்படச் செய்வதுஎழுத்தின் வெற்றி. மாடும் பன்றியும்பேசாத கதாபாத்திரங்களாகவே உலவுகின்றன.
கோண மூஞ்சி என்ற பதம் பன்றிக்கு வழங்குவது கேட்டறியாத ஒன்று. சில கதாபாத்திரங்களைத் தவிரஅனைவருமே பசி, பட்டினி, ஓலம், பரிதவிப்பு, ஆற்றாமை, காமம், குரோதம் எனக் கதையில்உழல்கின்றனர். வேட்டைத்தாய், வடுவத்தாய், பட்டக்கருப்பன் உள்ளிட்ட குலதெய்வங்கள் உள்ளீடாகப் பல செய்திகளைச் சொல்கின்றன. வாயில் மலம் திணித்தல் போன்ற சமகாலத்திய பல பிரச்சினைகள் கதையுடன் இணைத்துப் பேசப்படுவது கவனிக்கத்தக்கது.
ஒரு தலைவன், அவனது கொள்கை, அவற்றால் மக்கள் படும் அவதி, வடக்குச் சீமையில் கட்டப்படும் கோயில், அடித்தட்டு மக்கள் மீதான சுரண்டல் போன்றவற்றைச் சொல்லி, கதையாளர் காத்திரமான அரசியலைப் பேசியிருப்பது நூலின் பெருவெற்றி. ஆசிரியர் யாரைச் சுட்ட வருகிறார் என்பதை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையைப் பேசும் புனைவாளர்கள் வரிசையில் க.மூர்த்தியும் பேசப்படுவார் என்பது உறுதி.
- தொடர்புக்கு: meenaasundhar@gmail.com
பங்குடி (நாவல்)
க.மூர்த்தி
வெளியீடு: வெற்றிமொழி வெளியீட்டகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9715168794