Published : 16 Dec 2017 10:32 AM
Last Updated : 16 Dec 2017 10:32 AM

புது வேகம் கொள்ளட்டும் பபாசி!

பாசி என்று அழைக்கப்படும் ‘தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க’த்தின் தேர்தல் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்! தென்னிந்தியாவின் பெரிய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமாக இருப்பது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பபாசி. 1976 ஆகஸ்ட் 24-ம் தேதியன்று பி.ஐ. பதிப்பகத்தின் உரிமையாளர் மாத்யூவின் முன்முயற்சியில் சில பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் சேர்ந்து தொடங்கிய பபாசி, 41 ஆண்டுகளைக் கடந்த மூத்த சங்கமாக உள்ளது.

இச்சங்கத்தில் 433 புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பபாசியின் புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள். கடந்த வாரம் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவர் - வைரவன், செயலாளர் - வெங்கடேசன், பொருளாளர் - சீனிவாசன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பபாசி நிர்வாகிகளுக்கு முன்னவர்களுக்கு இருந்ததைவிட அதிகப் பொறுப்புகள் கண்முன்னே குவிந்திருக்கின்றன. நல்ல நூல்களை வெளியிடுவது, அவற்றை விற்பனை செய்வது என்பதோடு மட்டுமின்றி, புத்தக வாசிப்பைப் பரவலாக்குவதும் இந்த சங்கத்தின் நோக்கங்களில் முக்கியமானது. அதற்காகவே, கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் ‘புத்தகக் காட்சி’யை பபாசி தொடர்ந்து சிறப்பாக நடத்திவருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல முக்கிய நகரங்களிலும் புத்தகக் காட்சிகளை நடத்தத் தொடங்கியுள்ளது பபாசி. இப்படி, சில நகரங்களில் மட்டும் நடைபெறும் புத்தகக் காட்சியைத் தமிழகம் முழுவதற்கும் கொண்டு செல்ல வேண்டியது பபாசியின் முன்னுள்ள பெருங்கடமை.

ஷார்ஜாவில் சமீபத்தில் நடைபெற்ற புத்தகக் காட்சியில் தமிழகத்திலிருந்து பதிப்பாளர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இது போன்ற வாய்ப்புகளை பபாசி தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் நூலக ஆணை தவறாமல் எல்லா பதிப்பாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் பபாசி அரசுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யின் பாதிப்பிலிருந்து பதிப்பாளர்களைக் காக்க உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும். முக்கியமாக, பதிப்பாளர்களின் பிரச்சினைகள் குறித்து அரசுடன் பேசுவதற்கு பபாசி சுணங்கவே கூடாது.

சென்னையில் 41-வது புத்தகக் காட்சியை வரும் 2018 ஜனவரி-10 முதல் 22-ம் தேதிவரை நடத்தவுள்ளதாக பபாசி அறிவித்துள்ளது. இந்தப் புத்தகக் காட்சியில் மாறிவரும் சூழலுக்கேற்ப, புதிய அணுகுமுறையைக் கையாள்வது குறித்து பபாசி சிந்திக்க வேண்டும். இளைய தலைமுறையினரைப் புத்தகக் காட்சியை நோக்கி ஈர்க்கும் வகையிலான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். பபாசியின் நிர்வாகக் குழுவில் புது ரத்தம் பாய்ந்திருப்பதுபோல், பதிப்புத் துறையிலும் இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய புத்தகத் தயாரிப்பு முயற்சிகளைத் தொடங்க வேண்டியது அவசியம். கடந்த 6 ஆண்டுகளாக பபாசியில் புதிய உறுப்பினர் சேர்க்கை என்பதே நடைபெறவில்லை. பபாசிக்குள் புதிய உறுப்பினர்களின் வருகை, பதிப்புத் துறையிலும் புதிய வரவுகளுக்கு வித்திடும் செயலின் தொடக்கமாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x