Last Updated : 02 Dec, 2017 10:34 AM

 

Published : 02 Dec 2017 10:34 AM
Last Updated : 02 Dec 2017 10:34 AM

பதிப்புலகை நசுக்குகிறதா ஜி.எஸ்.டி?

தமிழகப் பதிப்பகங்களுக்குச் சோதனையான ஆண்டு இது. நேரடி, சில்லறை விற்பனை மட்டுமின்றி புத்தகக் காட்சிகளிலும் விற்பனை பாதிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலானோர் சுட்டிக்காட்டும் காரணங்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜி.எஸ்.டி.யும். பிரச்சினையையும் தீர்வையும் பற்றி பதிப்புத் துறையினரிடம் பேசியதிலிருந்து...

உஸ்மான், ரஹ்மத் பதிப்பகம், சென்னை.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை, புத்தக விற்பனைக்குப் பேரிடி. சென்னை, ஈரோடு, புத்தகக் காட்சிகளில் இந்த பாதிப்பை நேரடியாக உணர்ந்தோம். மதுரையும் அதை உறுதிப்படுத்தியது. சென்னையில் உள்ள எங்கள் புத்தகக் கடைக்குத் தினமும் குறைந்தது 20 பேர் புத்தகம் வாங்குவார்கள். இந்த ஆண்டு தினசரி 5 பேரைப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. வருகிறவர்களும் 100 ரூபாய்க்குள் புத்தகம் கிடைக்குமா என்று தேடுகிறார்கள்.

usman - kannanjpgஉஸ்மான் - கண்ணன்rightகண்ணன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு புத்தக விற்பனை 30% முதல் 40% குறைந்துவிட்டது. காரணம், பணமதிப்பு நீக்க நடவடிக்கை. கூடவே ஜி.எஸ்.டி.யும் சேர்ந்துகொண்டது. புத்தகங்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றாலும், காகிதம் மற்றும் அச்சிடலுக்கு வரிவிதித்திருக்கிறார்கள். எனவே, புத்தகத்துக்கான அடக்க விலை 15% முதல் 20% உயர்ந்துவிட்டது. புத்தகங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், ஜி.எஸ்.டி.யால் தான் புத்தக விலை உயர்ந்தது என்று சொல்லவும் முடியாது. இது ஒரு தர்மசங்கடமான சூழல். இந்த வரியை சீரமைக்க அரசு முன்வர வேண்டும்.

natrajan - purushothamanjpgநடராஜன் - புருஷோத்தமன்புருஷோத்தமன், சர்வோதயா இலக்கியப் பண்ணை, மதுரை.

வழக்கமாக ஒரு பாரத்துக்கு ரூ.10 வீதம், 160 பக்கம் கொண்ட புத்தகத்துக்கு ரூ.110 விலை நிர்ணயிப்பார்கள். ஆனால், ஜி.எஸ்.டி. வந்தபின் ஒரு பக்கத்துக்கு ரூ.1 வீதம் ரூ. 160 என்று விலை வைக்க வேண்டியதிருக்கிறது. பெரிய பதிப்பகங்கள் என்றால், அதே அளவு பக்கங்களுக்கு ரூ. 200 வைக்கிறார்கள். தரமான வழுவழுப்பான காகிதம் என்றால், ரூ.250 கூட விலை வைக்கிறார்கள். ஆக, பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் மட்டுமல்ல, வாசகர்களுக்கும் பாதிப்புதான்.

நடராஜன், சந்தியா பதிப்பகம், சென்னை.

ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறபோது பாதிப்பின் ஒரு பகுதி இந்தத் துறையிலும் இருந்தது அவ்வளவுதான். புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்கிற வாசகர்கள், வேறு செலவுகளைக் குறைப்பார்களே தவிர, புத்தகத்துக்காகச் செலவிடுவதைத் தவிர்க்க மாட்டார்கள். பதிப்புத் துறையைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி. குழப்பத்தையே ஏற்படுத்தியது. அதுபற்றிய தெளிவை பபாசியும் ஏற்படுத்தவில்லை.

வேலாயுதம், விஜயா பதிப்பகம், கோவை.

கடந்த 10 ஆண்டுகளாகப் புத்தக விற்பனை ஏறிக்கொண்டே இருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி மிகவும் வளர்ந்திருக்கிறது. விற்கும் திறமையை வளர்த்துக்கொள்ளாமல் விற்கவில்லை, விற்கவில்லை என்று கூறுவதால் என்ன பயன்? புத்தகம் விற்கவில்லை, விற்கவில்லை என்று சொல்லிக்கொண்டே இருப்பவர்கள்தான் காரணங்களையும் சொல்கிறார்கள். இப்போது பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.

சாதிக், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம்.

‘சேஷசாயி மில் லைட் வெயிட்’ பேப்பர் விலை முன்பு ஒரு கிலோவுக்கு ரூ. 69.50 ஆக இருந்தது. வாட் வரி 5%-துடன் சேர்த்து ரூ. 72.25-க்கு வாங்கினோம். இப்போது, வாட் வரி, இறக்குமதியாளருக்கான கலால் வரி எல்லாவற்றையும் சேர்த்து காகிதத்துக்கான ஜி.எஸ்.டி. 12% ஆகிவிட்டது. இதனால், ஒரு கிலோ காகிதத்தின் விலை ரூ. 64.50 ஆகக் குறைந்தாலும், ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ. 73 ஆக உயர்ந்துவிட்டது.

அச்சிடுவதற்கான ‘பிளேட் மேக்கிங்’ பணிக்கான ஜி.எஸ்.டி.யை 18% ஆக்கிவிட்டார்கள். கூடவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்பு இன்னமும் தொடர்கிறது. இப்போதுகூட மதுரையில் உள்ள மிகப் பெரிய புத்தகக் கடையினரிடம் தொலைபேசியில் பேசினேன். “காலை முதல் மாலை வரை வெறுமனே ரூ. 1,300-க்குத்தான் தோழர் பில் போட்டிருக்கிறேன். இது கடை வாடகைக்கே போதாது” என்று அவர் வருத்தமாகச் சொன்னார். இந்த நிலை மாறியாக வேண்டும்.

pugazh vedijpgபுகழேந்தி - வேடியப்பன் - வேலாயுதம்rightவேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.

திரைப்படத் துறையை ஜி.எஸ்.டி. பாதிக்கும் என்று அத்துறையைச் சேர்ந்தவர்கள் சங்கரீதியாகப் போராடி, நிவாரணம் பெற்றார்கள். இனியாவது பபாசி யும் அதுபோன்ற முயற்சியில் இறங்க வேண்டும். குறைந்தபட்சம் நூலக ஆணையாவது பெற்றுத்தர வேண்டும். ஒரு புதிய புத்தகம் வெளியான உடனே, சிங்கப்பூர் நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்காக அங்கிருந்து ஒரு குழு சென்னைக்கு வந்து 25 பிரதிகள் வாங்கிப்போகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலோ 3 ஆண்டுகளாக நூலகத்துக்கென புத்தகங்கள் வாங்கப்படவேயில்லை. முன்பு வாங்கிய புத்தகங்களுக்கான தொகையும் சில பதிப்பகங்களுக்கு வந்துசேரவில்லை. நூலக ஆணை தொடர்பாகப் பதிப்பாளர்கள் எல்லோ ரும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரை அணுகி, உடனடி நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்த வேண்டும்.

கே.எஸ்.புகழேந்தி, பபாசி செயலாளர்

நோட்டுப் புத்தகங்களுடன், குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகங்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அகில இந்திய பதிப்பாளர்கள் சங்கம் வாயிலாக மத்திய அரசிடம் பேசி, வண்ணம் தீட்டும் புத்தகங்களுக்கு வரிவிலக்கு பெற்றோம். ஆனால், இலக்கிய நூல்களுக்கு நேரடி ஜிஎஸ்டி கிடையாது என்பதால், அதுகுறித்த கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. நூலகங்களுக்குப் புத்தகங்களை வாங்குவது குறித்து வெளியில் பேசவே கூச்சமாக இருக்கிறது. நூலக ஆணை பெறுவதற்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கவும் தயார் என்று சில பதிப்பாளர்கள் செயல்படுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, எங்கள் பில்லை சீக்கிரம் நகர்த்துங்கள் என்று அதற்கும் லஞ்சம் கொடுக்கிறார்கள். இதனால், நல்ல புத்தகங்கள் போடுகிற பல பதிப்பாளர்கள் அந்தப் பக்கமே போவது கிடையாது. உதயசந்திரன் மாதிரியான அதிகாரி இருந்தால், துணிந்து முறையிடலாம். வேறு யாரிடம் முறையிடுவது? திமுக ஆட்சியாக இருந்தால் கருணாநிதியிடமே போய்ச் சொல்லலாம். இந்த அரசில் யாரைப் போய்ப்பார்ப்பது சொல்லுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x