நூல் வெளி: மயில் தோகைக் கதைகள்

வண்ணதாசன்
வண்ணதாசன்
Updated on
3 min read

போட்டிகள் நிறைந்த நவீன சமூக வாழ்க்கை ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் தனக்கான அடிமையாக்கிக்கொள்ளவோ அல்லது எதிரியாக்கிக்கொள்ளவோ பழக்கிவைத்திருக்கிறது. அல்லது பாசாங்காகவேனும் இணங்கிச் செல் என்கிறது. இதற்கு நேர்மாறான திசைகளில் நம்மை அழைத்துச் செல்பவைதான் வண்ணதாசனின் கதைகள்.

நட்பாக இரு, அனைவரையும் நண்பராக்கிக் கொள், ஒரு படி மேலே போய் உண்மையாக இருக்கப் பழகு என்கின்றன அவரது கதைகள். உள்ளிருந்து பேசும் ஓர் ஆத்மாவின் குரல் அது. அவ்வகையில் அவரது சிறுகதையின் உருவமும் குணமும் ஓர் ஆக்கபூர்வமான சமூகக் கருவி என்பதாகவே வண்ணதாசன் பயன்படுத்திவருகிறார்.

எல்லாம் சரி; இது அவரது இலக்கியத்தை அறிமுகப்படுத்திக்கொள்வதற்கான ஒரு அடிப்படை வரையறைதான். ஆனால், அதையும் தாண்டி வண்ணதாசன் படைப்புகள் மீது இரண்டு கேள்விகள் முன்வைக்க வேண்டியுள்ளதைத் தவிர்க்க முடியவில்லை.

1. மிகமிகச் சாதாரணர்களை, உதிரிகளைப் பேசும் அவரது கதைகள் சாதாரணக் கதைகள்தானா? 2. வண்ணதாசனுக்கு (கல்யாணி அண்ணாச்சிக்கு) வேண்டுமானால் வாழ்க்கையில் புகார் இல்லாமல் இருக்கலாம். அவர் பார்க்கும் மனிதர்களுக்கும் அந்த மனிதர்கள், கதாபாத்திரங்களுக்கு எந்தப் புகாரும் இல்லையா என்பனதான் அவை.

இந்தத் தொகுப்பிலிருந்தே இதற்கான விடைகளைத் தேடி வண்ணதாசனை மேலும் புரிந்துகொள்ள முயலலாம். இத்தொகுப்பில்கூட நெல்லை நகரைச் சுற்றியுள்ள வாழ்க்கைதான் பல கதைகளிலும் சுழன்று வருகிறது. அக்காலத்தில் வண்ணதாசன் எழுதிய பல கதைகளில் எளிய மனிதர்கள் வருவதைப் போல இதிலும் ஜவுளிக்கடையில் வேலை செய்பவர்கள், பள்ளிக்கூடத்தில் வேலை செய்பவர்கள், தச்சு வேலை பார்ப்பவர்கள், கோஆபரேட்டிவ் வங்கியில் பணியாற்றுபவர்கள், மெஸ் சமையல்காரர், சைக்கிள் பால்காரர் என உதிரி மனிதர்களாக இருக்கிறார்கள்.

இதெல்லாம் சக உலகத்தைக் கணக்கில் கொண்ட, சக மனித நேசம் கொண்ட ஓர் உள்ளார்ந்த படைப்பாளியால் மட்டுமேதான் சாத்தியப்படக்கூடிய ஒன்று. உதாரணத்துக்கு ஒரு கதையில், மழையில் நனைந்து வந்து தலையைத் துவட்டி முடிவதற்குள்ளாகவே பழைய ஞாபகங்கள் அலை அலையாய் வருவதும், இன்னொரு கதையில் சைக்கிள் சீட்டின் மீது வந்து அமர்ந்த ஊசித்தட்டானைப் பிடித்துத் தரச்சொல்லி தனது புதிய கணவரிடம் மனைவி கேட்பதும், அப்பெண்ணிடம் அந்த சைக்கிள் பழைய நினைவுகளைக் கிளறி விடுவதும், மற்றுமொரு கதையில் இங்கு பியானோ கற்றுத்தரப்படும் என குறுக்குத் தெருவில் பலகை வைக்கப்பட்டிருந்த முதல் வீட்டு வாசலில் மலைஅரளி பூத்துக் குலுங்கி வாசனை வீசுவதும், அங்கிருந்து வானில் நிலவைப் பார்க்க விழைவதும் என அன்றாட வாழ்வோடு உறவாடும் நினைவுகளாகவே சம்பவங்களைப் பின்னும் விதத்தில் தனக்கென ஒரு பாதையைச் செப்பனிட்டு வைத்திருக்கிறார் வண்ணதாசன்.

இத்தொகுப்பில் பல கதைகளிலும் நுண்மையான அழகிய உறவுகளைக் காண்கிறோம். அதில் உணர்வுபூர்வமாக வாழ்க்கையை நேசிக்கும் யாவரும் பயணிக்கலாம். வழியில் பார்க்கும் சிலரிடம் அறிமுகம் இல்லையென்றாலும், எந்தவித விகல்பமும் இன்றிச் சட்டென்று வெகு எளிதாகப் பரிச்சயப்படுத்திக்கொண்டு நெருக்கமாகப் பழகிவிடக்கூடிய மனிதர்கள் ‘பார்த்திருத்தல்’, ‘புற்களைப் புற்களாகவே’ போன்ற கதைகளில் வருகிறார்கள். ‘தூறலில் நனைதல்’, ‘விதைகள் அப்படியே இருந்தன’, ‘யானை’ போன்ற கதைகள் அடுத்தவர் மீதான அக்கறை, நேசம், அன்பை வெளிப்படுத்தி நிற்கின்றன.

‘செல்லம்’ கதையில் வெற்றிலைச் செல்லத்தைத் தனது இன்னொரு அங்கம்போலக் கையிலேயே வைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெரியவர் ஒருநாள் தன் வீட்டுக்கு வந்து பேசிவிட்டுப் போகும்போது, அதை மறந்துவிட்டுப் போய்விடுகிறார். அதைக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வரச்சொல்கிறார்களே என்று பெரியவர் வீட்டுக்கு வெற்றிலைச் செல்லத்தை எடுத்துச் சென்று போய்ப் பார்க்க, அங்கே பட்டாளையில் அவர் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருக்கவும் ஆள்கள் வரத் தொடங்கியதும் தெரிகிறது. இந்தக் கதை எவ்வளவு ஆயிரம் விஷயங்களை உள்ளுக்குள் வைத்திருக்கிறது. இரண்டு பக்கங்கள்கூட இல்லாத இந்தக் கதை மிகவும் கனமாக இருக்கிறது.

‘அமிர்தம்’ கதை நடுத்தர வயதுப் பள்ளி ஆசிரியை ஒருவரைப் பற்றியது. அவர் குருமணி டீச்சர் என்றே அழைக்கப்படுபவர். அந்த ஆசிரியையின் அன்றாடங்களை, மாறுபட்ட நினைவுகளைக் கிளறிவிடுகிற கதை இது. அவரது கணவர் பெரும்பாலும் நினைவுகளில் மட்டுமே வருபவராக இருக்கிறார்.

கணவர் பணியாற்றும் பள்ளியில் உடன் பணியாற்றிய என்ஜேபி சார் வரைந்து தந்த ஓவியத்தில் அசல் குருமணி டீச்சர் சாயல்தான். குருமணி டீச்சருக்கு அன்று பாடத் தோன்றிய இரண்டு பாடல்களுமே சௌகார் ஜானகி திரையில் தோன்றிப் பாடுவதாக வரும் பாடல்கள்தான்.

மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ பாடல் நான்காவது வரி பாடும்போது அவருக்கு அழுகை வந்துவிடுகிறது. மேலும் இக்கதையில் டீச்சரின் விளையாட்டுத்தனம் நம்மை அழகாகச் சிரிக்க வைக்கும். சிரிக்கவைத்துவிடும் அதேநேரம், ஆழ்ந்து வாசிக்கும்போதுதான் நம்மை ஆகர்ஷிக்கத் துடிக்கிறது என்பதை உணரத் தலைப்படுகிறோம். இக்கதையில் அதன் மையம் முற்றிலுமாக ஒளித்து வைக்கப்பட்டுள்ளதையும் உணர முடிகிறது. வண்ணதாசனின் சிறுகதை உருவம் மயில்தோகையைப் போன்றது.

அதன் குணத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை, மிகவும் மென்மையானது. அவரது கதைகளின் உள்ளடக்கமோ, அதன் சோதனை முயற்சிகளோ காலந்தோறும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ‘அகிலம்’ தொகுப்புக் கதைகளை ஆழ்ந்த வாசிப்புக்கு உட்படுத்தும்போது, இதனை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. நம் காலத்துப் படைப்பாளிகளில் முன்னோடியாகத் திகழும் வண்ணதாசன் இன்னமும் நம்பிக்கொண்டிருப்பது மனிதர்கள் எவ்வளவு வீழ்ச்சிகளைச் சந்தித்தபோதும், தங்கள் மீதான சுயவிமர்சனமும் பிறத்தியார் மீதான அக்கறையும் இந்த உலகை அழகாக்கிவிடும் என்பதுதான்.

அகிலம்
வண்ணதாசன்,

சந்தியா
பதிப்பகம்,
விலை: ரூ.170
தொடர்புக்கு: 044 24896979

- தொடர்புக்கு: sridharan.m@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in