

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அடுத்து தமிழ்நாட்டின் பெரிய நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம். அரசு நூலகம் என்றால் எழும் நம் கற்பனையைப் பொய்யாக்குகிறது இந்த நூலகம். மதுரைக்குப் பல அடையாளங்கள், பெருமைகள் இருக்கின்றன. இவற்றுடன் மற்றுமொரு அறிவுசார் அடையாளமாகச் சேர்ந்திருக்கிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
இந்நூலகத்தின் பிரம்மாண்டக் கட்டிடம், நுழைவாயிலில் எழுதப்பட்டிருக்கும் தமிழ் மொழியின் அடையாளங்களான பழந்தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காகவும் திருநர்களுக்காகவும் செய்யப்பட்டிருக்கும் வசதிகள், பார்வைக் குறைபாடு உடையவர்கள் படிப்பதற்காகச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள், சிறார் பிரிவு, அறிவியல் பிரிவு, தமிழ், ஆங்கில இலக்கிய நூல்களின் பிரிவு, கலைஞர் பிரிவு, போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கான பிரிவு, அரிய நூல்கள், கூட்ட அரங்கம், ஆய்வரங்கம், வாசகர்களுக்கான வசதிகள், வெளிச்சம், முழுமையான குளிர்பதன வசதி, நகரும் படிக்கட்டுகள் என ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியப்படுத்தினாலும் எல்லாவற்றையும்விட எனக்கு முக்கியமானதாக இருந்தது வேலை நாள்களில் மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் பேர் வருகை தருகிறார்கள் என்பதும் சனி, ஞாயிறுகளில் ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் பேர் வருகை தருகிறார்கள் என்பதும்தான்.
ஒரு நூலகக் கட்டிடத்துக்குள் வாழ்நாளில் ஒரு முறைகூடச் செல்லாதவர்கள் தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் பேர் இருப்பார்கள்? நூலகம் என்கிற ஒன்று இருக்கிறது என்பதுகூடப் பலருக்கு இன்றுவரை தெரியாது. அதிசயமாகச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு நூலகத்துக்குள் மூன்று மணி முதல் நான்கு மணி நேரம்வரை செலவிடுவது, புத்தகங்களைக் கண்குளிரப் பார்ப்பது என்பதெல்லாம் அதிசயம்.
அந்த அதிசயம் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்கிறது. வேடிக்கை பார்ப்பதற்காகவாவது நூலகத்துக்குள் மக்கள் வருகிறார்களே.. ஆச்சரியம்தான். இப்போது நூலகத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
நாளை நூலகத்தைப் பயன்படுத்துவார்கள். போட்டித் தேர்வு எழுதுகிறவர்கள் நூலகத்தைச் சௌகரியத்துடன் பயன்படுத்திவருவதைப் பார்த்தேன். புதுக்கோட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒரு நாளைக்குச் சராசரியாக ஐந்து கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், பத்துக்கும் அதிகமான பள்ளிகளிருந்தும் மாணவர்கள் பேருந்துகள், வேன்களில் வந்துபோகிறார்கள். நூலகத்தை, புத்தகங்களை வேடிக்கை பார்ப்பதற்காக மக்கள் வருவது முக்கியமான ஒரு பண்பாட்டு மாற்றம்.
படிப்பும் நூலகமும் ஒரு நாளில் பலன் தருவதில்லை. அறிவு வளர்ச்சி, பண்பாட்டு மாற்றம் ஒரு நாளில், ஒரு மாதத்தில் ஏற்பட்டுவிடுவதில்லை. ஒரு நாட்டுக்கான வரலாறு மட்டுமல்ல; கல்வியும் அறிவும் நூலகத்துக்குள்தான் இருக்கிறது. மனிதர்கள் இறந்துவிடுவார்கள். நல்ல புத்தகங்களுக்கு என்றுமே மரணமில்லை. மரணமில்லாப் பெருவாழ்வைப் பாதுகாக்கிற நூலகத்துக்கும் பெருவாழ்வுதான். அதைப் பயன்படுத்த வைப்பதும்தான் அரசின், சமூகத்தின் கடமை.
நூலகம் கட்டுவது பெரிதல்ல, அதைப் பராமரிப்பதுதான் பெரிது. சவாலானது. தமிழ்நாடு அரசு நூலகத்தை நன்றாகப் பராமரிக்கிறது என்றால் தமிழ்ச் சமூகப் பண்பாட்டை, அறிவைப் பாதுகாக்கிறது என்று அர்த்தம். சென்னை, மதுரை என்று மேம்பட்ட நூலகத்தை உருவாக்கிய தமிழ்நாடு அரசு, கோவையிலும் இதுபோன்ற ஓர் அதிசய நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு வாசகனாக, ஒரு எழுத்தாளனாக என் கோரிக்கையை முன்வைக்கிறேன். ‘அறிவிற் சிறந்த தமிழ்நாடு’, ‘நூலகத்தில் சிறந்த தமிழ்நாடு’ என்பதற்கு நூலகமே சாட்சியாக இருக்க வேண்டும்.
- தொடர்புக்கு: imayam.annamalai@gmail.com