

எண்பத்து மூன்று வயதான ஜெஃப்ரி ஆர்ச்சர், விறுவிறுப்பாக எழுதும் ஆங்கில எழுத்தாளர். இவரது நூல்கள் இதுவரை முப்பது கோடிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளன. அவரது சொந்த வாழ்க்கை குறித்துப் பல கருத்துகள் இருந்தபோதிலும், இன்று எழுதுபவர்களில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் என்பது ஒருமித்த கருத்தாக இருக்கும்.
புலனாய்வு அதிகாரியான வில்லியம் வார்விக் தலைமையிலான குழு பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு பரபரப்புக் கதை இது. டயானா ஒரு ஆச்சரியத்துக்குரிய பெண். டயானாவைச் சுற்றி எத்தனை புகார்கள்? எத்தனை காதலர்கள்? இருந்தும் இன்றும் மக்களால் விரும்பப்படும் மக்களின் இளவரசி அவர்.
இங்கிலாந்தில் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள மக்கள் தங்கள் வீட்டுப் பெண் செய்த தவறுகளாகக் கருதி, அவர் மீது சொல்லப்பட்டவற்றை மறந்துவிட்டனர். அப்படிப்பட்ட டயானா தீவிரவாதிகளால் கடத்தப்படுவதை மையமாகக் கொண்ட நாவல் இது.
டயானாவின் குணாதிசயங்களை இந்த திரில்லர் நாவலில் அழகாகக் கொண்டுவந்திருக்கிறார் ஆர்ச்சர். நைட் கிளப்புகளுக்குச் செல்வது, பாப்பரஸிகளால் சூழப்பட்ட ஒருவர் எதையும் யோசிக்காது காதலர்களுடன் பொது இடங்களில் காணக்கிடைப்பது, மெல்லிய குறும்புத்தனம், கற்பூரபுத்தி, சாமானிய மக்களிடம் காட்டிய உண்மையான அன்பு, தன் உயிருக்கு ஆபத்து இருக்கும்போதும் விக்டோரியாவையும் காப்பாற்ற வேண்டும் என்று ஆணையிடுவது ஆகிய அம்சங்கள் இதற்கான உதாரணங்கள்.
காரைச் சட்டென்று நிறுத்திக் கடையில் கைப்பையை வாங்கும் இடத்தை வைத்து, எதனால் டயானா அவ்வளவு பிரபலமானார் என்பதை உணர்த்தியிருக்கிறார். இந்த நாவலில் ஓவியங்கள் குறித்து அதிகமான விவரிப்புகள் வருகின்றன. ‘எழுதுவதில் கிடைக்கும் இன்பங்களில் ஒன்று, அந்தந்த நாவலுக்குச் செய்யும் விரிவான ஆராய்ச்சி. அதுவே நாவலுக்குக் கூடுதல் நம்பகத்தன்மையை அளிக்கும்’ என இந்த நாவலின் முடிவுரையில் ஆர்ச்சர் எழுதியிருக்கிறார்.
அதுபோல் நாவலின் விவரிப்புகள் நம்பகத்தன்மையை அளிக்கின்றன. ஆங்கிலத்தில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் ஆர்ச்சர். அதை இந்த நாவலும் உறுதிசெய்துள்ளது.
நெக்ஸ்ட் இன் லைன் (Next in Line)
ஜெஃப்ரி ஆர்ச்சர் (Jeffrey Archer)
ஹார்ப்பர் காலின்ஸ்
விலை: ரூ.310