Published : 05 Dec 2017 11:00 AM
Last Updated : 05 Dec 2017 11:00 AM

கடவுளின் நாக்கு 73: மனிதர்கள் பலவிதம்

மனிதர்கள் பலவிதம்!

னிதர்கள் யாவரும் ஏன் ஒன்றுபோல இருப்பதில்லை?

ஒருவர் அற்ப ஆயுளில் இறந்து விடுகிறார். இன்னொருவரோ 100 வயதைத் தொட்டு ஆரோக்கியமாக இருக்கிறார். ஒருவருக்கு உழைத்தால் மட்டுமே சாப்பாடு. இன்னொருவருக்கோ உட்கார்ந்து சாப்பிட்டாலும் ஏழு தலைமுறைக்குத் தேவையான சொத்து இருக்கிறது. ஒருவர் படித்துக்கொண்டே இருக்கிறார்.

வேறு ஒருவர் எதையும் படிக்காமல் லட்ச லட்சமாக சம்பாதிக்கிறார். இப்படி ஆயிரமாயிரம் வேறுபாடுகள். மனிதர்களை எப்படி புரிந்துகொள்வது?

இந்த சந்தேகத்துக்கு ஆட்பட்ட மிலிந்தா என்ற மன்னன் இது பற்றிய விளக்கம் வேண்டி ஒரு பவுத்த ஞானியிடம் கேட்கிறான்.

அவர் பதில் சொல்வதற்கு மாறாக இன்னொரு கேள்வியை அவனிடம் கேட்கிறார்:

‘‘ஏன் ஒரு மரம் இனிப்பான கனியைத் தருகிறது? வேறு ஒரு மரம் கசப்பு கனியை ஏன் தருகிறது? ஒரு செடியோ முள்ளாக இருக்கிறது. வேறு ஒரு மரமோ வான்நோக்கி மிக உயரமாக வளர்கிறது. ஒரு மலர் சிவப்பாக இருக்கிறது. வேறு மலர் மஞ்சளாக இருக்கிறது...’’

அதற்கு மிலிந்தா ‘‘இயற்கையின் நியதி அப்படிப்பட்டது’’ என்று பதில் சொன்னார்

அதைக் கேட்டு ஆமோதித்த ஞானி. ‘‘அது மனிதர் களுக்கும் பொருந்தக்கூடியது. ஒரே வேறுபாடு, மனிதர்கள் தனது நற்செயலால், நற்சிந்தனையால் மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவர்கள். வறுமையான வாழ்க்கையில் நீங்கள் இருந்தாலும் உங்களது நற்செயல்கள் வழியாக மேன்மையை அடைய முடியும். எந்த மரமும் தனது கனிகளைத் தானே புசித்துக்கொள்வது இல்லை. ஆகவே கொடுப்பது இயற்கையின் இயல்பு!’’`

நம் காலத்திய பிரச்சினை

நம்காலத்தின் மிகப்பெரிய பிரச்சினை மிதமிஞ்சிய சுயநலம்.

சுயநலம் கூடாதா? ‘எல்லாக் காலங்களிலும் சுயநலத்தை பேணித்தானே வந்திருக்கிறார்கள்’ என்ற கேள்வி எழக்கூடும். உண்மை. சுயநலம் தேவைதான். ஆனால், அது பொதுநலனுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும். அடுத்தவர் வாழ்க்கையை அடித்து பறிக்காமல் இருக்க வேண்டும். சுயநலம் பெருகுவதற்குப் பேராசையே முதற்காரணம்.

‘எல்லோரும் வாழவேண்டும்...’ என்று நினைத்தால், அதில் உங்கள் வாழ்க்கையும் அடங்கிவிடும்தானே. இன்று பொதுநலனில் ஈடுபடுவதாகக் கூறும் பலரும் அதைக்கொண்டு சுயநலனைப் பெருக்கிக்கொள்கிறார்கள். சுயநலத்தின் வரம்புகள் மற்றும் அளவுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

தனது அடிப்படை தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒருவன் பாடுபடுவது சுயநலம்தான். அதே நேரம் ஆயிரமாயிரம் கோடிகளைச் சேர்த்து தன் குடும்பத்துக்கு, தனது ஏழேழு தலைமுறைகளுக்குப் பணம் சேர்ப்பதும் சுயநலம்தான். இரண்டும் ஒன்றில்லை.

இன்று சுயநலம் என்பது பூதத்தின் வயிற்றை போலாகிவிட்டது. எவ்வளவு கொடுத்தாலும் அதன் பசியைக் கட்டுபடுத்தவே முடியாது. சுயநலமிகள் உலகை பங்கு போட்டுக்கொள்ளத் துடிக்கிறார்கள். சுயநலமிகளுக்கு இரண்டு கைகள் போதவில்லை. சுயநலமிகளின் ஆசைகள் முடிவற்றது.

ஜெர்மானிய நாடகம் ஒன்றை இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில், ஒரு பணக்கார கதாபாத்திரம் மற்றொரு கதாபாத்திரத்திடம் சொல்கிறது:

‘‘ஏழைகள், நடுத்தர மக்கள் வீடு கட்டிக்கொள்வது தாங்கள் வாழ்வதற்காக. ஆனால், என்னைப் போன்ற பெரும்பணக்காரர்கள் வீடு கட்டுவது எங்களால் ஆடம்பரமாக காசை செலவழித்து கட்ட முடியும் என்பதைக் காட்டுவதற்காக.

வீடு பெரிதாக, பெரிதாக உலகம் வியந்து பார்க்கிறது. ஆனால், அந்த பெரிய வீட்டுக்குள் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. சந்தோஷம் அங்கே குடியிருப்பதில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள். பணக்காரன் இன்னொரு பணக்காரனுடன் போட்டியிடுகிறான். அதுதான் அவனது சவால். முடிவற்ற இந்தப் போட்டி அவனையும் கவலைகொள்ளவே செய்கிறது. பணத்தால் சந்தோஷத்தைத் தற்காலிகமாக அடைய முடியும். நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியாது!’’

சுயநலம் புகட்டும் கல்வி

சுயநலம் கொண்டவர்கள் அடித்தட்டு, நடுத்தரம், மேல்தட்டு என எல்லாத் தரப்பிலும் இருக்கிறார்கள். விதிவிலக்குகளும் அப்படியே. இன்றைய கல்வியும், சமூகமும் சுயநலத்தையே ஒருவனுக்குள் புகட்டுகின்றன.

தானும் தன் குடும்பமும் மட்டுமே வாழ வேண்டும், சகல இன்பங்களையும் அடைய வேண்டும் என்ற நினைப்பை அழுத்தமாக பதிவுசெய்து வருகிறார்கள். இதை அடைய அவர்கள் எந்த குறுக்குவழியிலும் செல்லத் தயராகவே இருக்கிறார்கள். வன்முறையைத் துணைக்கொள்கிறார்கள். ஒருவரது அழிவில் இருந்து தனது வளர்ச்சி தொடங்குவதாக நினைக்கிறார்கள். சுயநலம் கூடாது எனச் சொல்ல மாட்டேன். ஆனால், சுயநலம் மட்டுமே வாழ்க்கையில்லை என்று சொல்வேன். உங்களிடம் இருப்பதை பகிர்ந்து பாருங்கள். உங்களால் முடிந்ததைக் கொடுத்துப் பாருங்கள். பொது விஷயம் என்பது, யாரோ செய்ய வேண்டியதில்லை. நீங்களும் நானும் சேர்ந்து செய்யவேண்டிய பொதுப்பணி.

கடவுள் கேட்ட யாசகம்

பின்லாந்து கதை ஒன்று சுயநலத்தின் வீழ்ச்சியைப் பற்றி பேசுகிறது.

அறுவடைகாலத்தில் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள். ‘உக்கோ’ என்கிற மழைக் கடவுளைக் கொண்டாடுவார்கள். இந்தக் கொண்டாட்டத்தை ஏற்றுக்கொள்ள ‘உக்கோ’ மனித உருவம் எடுத்து பூமிக்கு வருவார். அப்படி பூமிக்கு வந்த ‘உக்கோ’ ஒரு பிச்சைக்காரனைப் போன்ற தோற்றத்தை உருவாக்கிக்கொண்டு ஒரு கிராமத்துக்குள் பிரவேசித்தார். ஒரு விவசாயி வீட்டில் ரொட்டி சுடும் வாசனை கம கமவென அடித்தது. அந்த வீட்டை தேடிப் போய் யாசகம் கேட்டார் ‘உக்கோ’.

வீட்டுப் பெண் கதவை திறந்து வெளியே வந்து “என்ன வேண்டும்?’’ என்று கேட்டாள்.

“நீங்கள் சுடுகின்ற ரொட்டியின் வாசனை கமகமவென மூக்கைத் துளைக்கிறது. பசியைப் போக்க ஒரு ரொட்டி கொடுங்களேன்...’’ எனக் கேட்டார்.

வாசலில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே போனாள். சில நிமிட இடைவெளிக்குப் பிறகு வெளியே வந்து சொன்னாள்: “உனக்கு ரொட்டி தர முடியாது. உனக்கு ரொட்டி கொடுத்தால், ஊரில் உள்ள எல்லாப் பிச்சைக்காரனுக்கும் சொல்லிவிடுவாய். அவர்கள் அத்தனை பேருக்கும் ரொட்டி கொடுக்க என்னால் முடியாது. வேண்டுமானால் ஒரு சிறிய பன் ஒன்று மட்டும் தருகிறேன். சாப்பிட்டுவிட்டுப் போ...’’ என்றாள்.

“சரி அதையாவது கொடுங்கள்’’ எனக் கேட்டார். வீட்டுக்குள் போன அவள், அடுத்த பத்து நிமிடம் கழித்து வெளியே வந்து சொன்னாள்: “பிச்சைக்காரனுக்கு யாராவது இனிப்பு பன் கொடுப்பார்களா என்ன? மீதமான பிஸ்கட் ஒன்று கிடக்கிறது. அதை வேண்டுமானால் தருகிறேன். சாப்பிட்டுத் தொலை...”

அதற்கும் ‘உக்கோ’ சரியென தலையாட்டினார். அந்தப் பெண் சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்து, “பிச்சைகாரனுக்கு எதற்காக பிஸ்கட் தர வேண்டும்? நாய்க்குப் போட்டால் கூட நன்றியோடு இருக்கும். ஒன்றும் கிடையாது போ... போ” என துரத்தினாள்.

“நான் பிச்சைக்காரன் இல்லை. மழைக் கடவுள் உக்கோ’’ என அவர் சொன்னபோதும், அவள் நம்பாமல், “பிச்சைக்காரனின் பொய்யைப் பற்றி எனக்குத் தெரியும்...’’ என அடித்துத் துரத்தினாள். கோபமடைந்த மழைக் கடவுள், “இவ்வளவு விளைச்சல் இருந்தும் ஒரு ரொட்டியைக் கூட ஏழைக்கு தர மனம் இல்லை. உன் மனதில் கருணையே இல்லை. ஆகவே உன்னை சபிக்கிறேன். என்னைப் போல நீயும் பசியில் துடித்துக் கொண்டிருப்பாய். ஒருபோதும் உன் பசியைப் போக்கிக்கொள்ளவே முடியாது’’ என அவளை ஒரு மரங்கொத்தியாக மாற்றிவிட்டார்.

அன்று முதலே மரம்கொத்தி தன் அலகால் மரத்தை கொத்தி கொத்தி அலைகிறது. மரம் கொத்தும் ‘டொக் டொக்’ என்ற சத்தம் இரக்கமற்ற மனிதர்கள் இப்படித்தான் ஆவார்கள் என்பதன் எச்சரிக்கை ஒலியாகக் கேட்கிறது என அந்தக் கதை முடிகிறது.

தன்னலத்தின் மீது காட்டும் அக்கறையை, அன்பை பொதுவிலும் எவர் காட்டுகிறாரோ... அவருக்கு சுயநலம், பொதுநலம் என்ற பேதமிருப்பதில்லை என்பதே நிஜம்.

- கதைகள் பேசும்...

எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x