Last Updated : 16 Dec, 2017 10:39 AM

 

Published : 16 Dec 2017 10:39 AM
Last Updated : 16 Dec 2017 10:39 AM

நினைவுகளின் தஞ்சை!

கா

விரிப் படுகை மனிதர்களின் பண்பாட்டு விழுமியங்களை மொழி செல்லும் தடத்தினூடாகப் பயணித்துக் கட்டுரை விருந்தொன்றை மணக்க மணக்கப் படைத்திருக்கிறார் பேராசிரியர் தங்க.ஜெயராமன். இக்கட்டுரைகள் ‘தி இந்து’ நாளேட்டில் வெளிவந்தபோது, பெரும் வரவேற்பைப் பெற்றவை. இந்தக் கட்டுரைகளின் மூலம் மிக முக்கியமான மொழிநடையாளராக தங்க.ஜெயராமன் வெளிப்பட்டிருக்கிறார்.

இனி ஒருபோதும் திரும்பி வராதவற்றைப் பற்றி எழுதும்போது, அவை நெஞ்சிலிருந்து உரித்துப் பிரித்த சொற்கள் என்கிறார் தங்க.ஜெயராமன். சென்றவை என்னென்ன, இழந்தவை என்னென்ன என்பதைப் பற்றி எழுதும்போது, அவை பழைய நினைவுகளின் வாசம் மட்டுமல்ல, மாற்றத்துக்கு உட்பட்டுவிட்ட சமுதாயத்துக்கான நினைவூட்டல் என்கிறார். பெருங்காயம் இருந்த பாண்டத்தில் பெருங்காயம் தொலைந்துபோயிருக்கலாம். ஆனால், அதன் வாசனை ஒட்டிக்கொண்டிருக்கிறது. புறப்பொருட்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை மீறி நெஞ்சைப் படபடக்கச் செய்துவிடுகிற இத்தகைய நினைவுகளைத் தூண்டிவிடுவதில் தங்க.ஜெயராமனின் எழுத்து பெரிய மாயாஜாலத்தையே நிகழ்த்திவிடுகிறது.

தி.ஜானகிராமனும் கு.ப.ரா.வும் பிச்சமூர்த்தியும் எழுதிக் காட்டிய தஞ்சை அல்ல தங்க.ஜெயராமன் எழுதிக் காட்டியிருப்பது! உழைக்கும் மக்களின் வாழ்க்கையை, எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டுமெனில், அந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும். தங்க.ஜெயராமன் அப்படியான வாழ்க்கை யில் பங்கெடுத்திருக்கும் வாழ்வனுபவத்தில் விழாக்களையும் வேறுவகையான பண்பாட்டு நிகழ்வுகளையும் பதிவுசெய்கிறார். கீழத் தஞ்சையின் சித்திரம் இதுவரை இவ்வளவு அழகாக வேறெந்தப் படைப்பாளியின் எழுத்திலும் வெளிப்பட்டதில்லை. ‘ஊடகங்கள் காணாத காவிரி’ என்ற கட்டுரை இந்தத் தொகுப்பின் மகுடம். காவிரியின் பாசாங்கு, காவிரியின் வர்ணஜாலம் என்று குறுந்தலைப்புகளில் ஆசிரியர் எழுதியிருப்பவை அலாதியான பதிவுகள். பகட்டாக மினுக்கிவரும் தீபாவளிப் பண்டிகையை வியப்பதா, வெறுப்பதா என்று ஏழைக் குடியானவன் திகைப்பதை ஒரு கட்டுரையில் தங்க.ஜெயராமன் சுட்டிக்காட்டுகிறார். கவித்துவமும் உள்ளிழைவுகளும் ஒருங்கே கொண்ட மொழி தங்க.ஜெயராமனுடையது. மின்விளக்கைப் போல் இருளை அழித்துத் துடைத்துவிடாமல், அதைப் பின்னணியாக வைத்துக்கொண்ட ஓவியமாக அகல்விளக்கு எரிகிறதாம்! கிராமத்து வாழ்க்கையின் சுழற்சியானது தண்ணீர்வரத்துக் காலத்து வயல்வேலை, சித்திரைக் கோடையின் மராமத்து வேலை ஆகிய இரண்டு சலனங்களில் அடங்கும் என்று பறவைப் பார்வையாகக் கிரமத்தைப் பார்ப்பது நயம்.

ஆற்றோரம் வெள்ளம் அரிக்காமல் இருக்க நாணல்களை வளர்த்தார்கள். சோழர் காலத்திலேயே இப்பணியைச் செய்ய நாணல்காரர்கள் இருந்திருக்கிறார்கள். பிற்பாடு பொதுப்பணித் துறை கரைக் காவலர்களை ‘நாணல்காரர்கள்’ என்று அழைத்ததற்கான பெயர்க் காரணம் தங்க.ஜெயராமன் வழியாக நமக்குத் தெரியும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. கிராமத்துக் கட்டை வண்டிகளையும் காளை மாடுகளையும் பற்றிய குறிப்புகள் அற்புதமானவை. வாழைத்தார்கள் ஏற்றிக்கொண்டு இரவில் வரும் கட்டை வண்டிகளில் இருட்டைக் கலைக்க மருகிச் சிணுங்கிக்கொண்டு மூக்கணையிலிருந்து ஒரு லாந்தர் தொங்கும்! வண்டிகள், மாடுகள், அவற்றுடன் மனிதர்கள் கொண்ட உறவு பற்றியெல்லாம் எழுதிச் செல்லும் கட்டுரையாசிரியர், வாசகர்களை மோகனமான ஒரு காலத்தின் மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறார். ‘உப்புக் கழுதைகள் எப்போது தொலைந்தன?’ என்ற கட்டுரை, உப்புச் செட்டியாருடன் உப்புக் கழுதைகளும் சேர்ந்து தொலைந்துபோனது குறித்த அரிய சமூக வரலாற்றுப் பதிவு. வியர்வையும் ரத்தமும் சிந்தி உழைத்த பண்ணையாட்கள் இல்லாமல் தஞ்சைக்கு வளமும் அழகும் ஏது? ‘நாற்றுப் பறிக்கும்போதே ஒரு சரசரப்பு. தூர் அலசும்போது நீரின் ஓசை. பறித்த நாற்றை முடியாக முடிந்து புறத்தே வீசினால் இன்னொரு ஓசை’ என்று தஞ்சையைக் காட்சி, மணம், ஓசை என்று பல வகைகளிலும் அணுகுகிறார் தங்க.ஜெயராமன். மானாவாரியான சோழநாடு குறித்த பதிவுகளும் மனதைக் கசியச்செய்கின்றன. நூலின் பிற்சேர்க்கையாக தஞ்சைப் பகுதியில் புழங்கும் சொற்களுக்குப் பொருள் தரப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

தங்க.ஜெயராமன் தஞ்சையின் உன்னதங்களைத் தன் மனதில் விதைநெல்லைப் போல் பாதுகாத்து வைத்திருக்கிறார். அவரது ஒவ்வொரு கட்டுரையும் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் எளிய மனிதரின் இனிய நினைவாகக் காட்சியளிக்கிறது. கீழத் தஞ்சையை மையமாக வைத்துப் பெரும் நாவல் ஒன்றை எழுதக்கூடிய வல்லமை தங்க.ஜெயராமனுக்கு இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

- கோபாலி,

தொடர்புக்கு:

thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x