Published : 02 Dec 2017 10:40 AM
Last Updated : 02 Dec 2017 10:40 AM

தொடுகறி: ஜீரோ டிகிரி பெயரில் பதிப்பகம்

சாரு நிவேதிதாவுக்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கொடுத்த நாவல் ‘ஜீரோ டிகிரி’. அந்தப் பெயரிலேயே சாரு நிவேதிதாவின் நண்பர்கள் காயத்ரி ஆர், ராம்ஜி நரசிம்மன் இருவரும் சேர்ந்து ‘ஜீரோ டிகிரி பப்ளிஷிங்’ என்ற ஆங்கிலப் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். சாரு நிவேதிதாவின் சமீபத்திய நாவலான ‘எக்ஸைல்’ நாவல் 'தி மார்ஜினல் மேன்’ என்ற பெயரில் வெளியாகிறது. சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், கு.ப. ராஜகோபாலன், கு. அழகிரிசாமி உள்ளிட்ட சிறந்த தமிழ் சிறுகதைக் கலைஞர்களின் சிறுகதைகள் பன்னிரண்டை சாரு நிவேதிதா ‘பவுண்ட்லஸ் அண்டு பேர்’ என்ற தலைப்பில் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலைக் கொண்டுவருகிறார்.

அமேஸான்.இன்னில் எஸ்.ரா.

பலரும் அமேஸான்.இன்னில் தங்கள் புத்தகங்களைப் பதிப்பிப்பது குறித்து ஆர்வம் காட்டிவருகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணனும் களத்தில் இறங்கியிருக்கிறார். விமலாதித்த மாமல்லனின் முயற்சியில் ரமேஷ் பிரேதனின் புத்தகமும் அமேஸான்.இன்னில் வெளியாகியிருக்கிறது. தமிழின் முக்கியமான பதிப்பாளராக அமேஸான்.இன் உருவாகிக்கொண்டிருக்கிறது, கவனியுங்கள் பதிப்பாளர்களே!

ஸ்பாரோ இலக்கிய விருது- 2017

2017-ம் ஆண்டுக்கான ஸ்பாரோ இலக்கிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் இரு விருதுகளும் வேறு மொழிகளில் ஒரு விருதும் வழக்கமாக வழங்கப்படுகின்றன. தமிழில், இந்த ஆண்டின் விருதுக்கு ‘லட்சுமி எனும் பயணி’ என்ற சுயசரிதை நூலை எழுதிய லட்சுமியும், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்திவரும் ஸ்டாலின் ராஜாங்க மும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். வேறு மொழிக்கான விருது வங்க மொழி எழுத்தாளர் கல்யாணி தாகூர் சராலுக்கும் மராட்டி எழுத்தாளர் ஆஷாலதா காம்ப்ளேவுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எழுத்தாளர் அம்பை, கவிஞர் நா.சுகுமாரன், ‘காலச்சுவடு’ கண்ணன் ஆகியோர் அடங்கிய குழு இவர்களைத் தேர்ந்தெடுத்தது. விருது வழங்கும் விழா டிசம்பர்-9 அன்று நடைபெறவிருக்கிறது. விருதாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

‘படைப்புலக’ சர்ச்சை!

கலைஞன் பதிப்பகத்தின் முன்முயற்சி யில் கவிஞர் முபீன் சாதிகாவின் பொறுப்பில் 38 பெண் கவிஞர்களைப் பற்றிய புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்! ஆயினும், இந்தப் புத்தக வரிசையின் தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ‘முபீன் சாதிகா படைப்புலகம்’, ‘சாய் இந்து படைப்புலகம்’, ‘ரத்திகா படைப்புலகம்’ என்ற பாணியில் 38 புத்தகங்களுக்கும் தலைப்பிடப்பட்டிருக்கின்றன. குறைந்தபட்சம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்புச் செயல்பாடு கொண்டிருப்பவர்களுக்குத்தான் ‘படைப்புலகம்’ என்று தலைப்பிட்டுப் புத்தகங் கள் கொண்டுவருவார்கள். இலக்கிய உலகத்துக்கே பரிச்சயம் இல்லாத பலருக்கும் இந்த ‘படைப்புலகம்’ நூல்வரிசையில் புத்தகம் கொண்டுவந்திருக்கிறார்கள் என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது. ‘படைப்புலகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் ‘அறிமுகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்திருந்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறுகிறார்கள். கூடவே, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி, சல்மா, அனார் போன்ற, இலக்கிய வாசகர்களுக் குப் பரிச்சயமான பெண் கவிஞர்களைத் தவிர்த்திருப்பதும் தற்செயலானது அல்ல என்றும் விமர்சிக்கப்படுகிறது. நாலு புத்தகம்… நாற்பது சர்ச்சைகள்… இப்படியெல்லாம் இருந்தால் தான் இலக்கிய உலகம் சுவாரசியமாக இருக்கும் போல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x