

சமீபத்தில் புலனத்தில் (வாட்ஸ்-அப்) ஒரு செய்தி வந்தது. ஆதாரமற்ற செய்திகள் பெருமளவில் உலவி வரும் இக்காலத்தில், இந்தச் செய்தியும் அப்படி இருந்துவிட்டுப் போகக் கூடாதா என்று மனம் துடிக்கிறது. 1990களில் எங்களுடைய ஆப்செட் அச்சகத்தில், போற்றத்தக்க அறிஞர்களில் ஒருவரான யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியர் மணவை முஸ்தபா தன்னுடைய புத்தகங்களை அச்சடித்து வந்தார்.
அவரது கம்பீரமான தோற்றம், வெண்ணிற சபாரி சூட், கணீர்க் குரல் காண்போரை வசீகரிக்கும். அத்தகைய ஆளுமையின் தமிழ்ப் பற்றையும் தமிழில் கலைச் சொற்களை உருவாக்க வேண்டும் என்ற அவர்தம் தாகத்தையும் கண்டு வியந்திருக்கிறோம்.
இப்போது முதல் பத்தியில் குறிப்பிட்ட புலனச் செய்திக்கு வருவோம். சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசு நூலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகங்களில் மணவை முஸ்தபாவின் உயரிய படைப்புகள், வெவ்வேறு நபர்களின் பெயர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்களுக்குப் புத்தகங்களாகச் சென்றுள்ளன என அச்செய்தி ஒளிப்பட ஆதாரங்களுடன் கூறுகிறது.
இது ஓர் உதாரணம். இதுபோல ஏராளமான நாட்டுடைமையாக்கப்பட்ட அறிஞர் பெருமக்களின் புத்தகங்கள் போலி பெயர்களில் புதிய படைப்புகளாக நூலகங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக அச்செய்தி சொல்கிறது. இது மட்டும்
உண்மையாக இருந்து: விட்டால், வருங்காலச் சந்ததியினருக்குப் பெரும் அறிஞர்கள் பலரின் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, போலிகளை ஆய்வாளர்களாகவும் அறிவாளிகளாகவும் பரவலாக்கியதாக மாபெரும் பழி நம் மீது விழும் ஆபத்து உள்ளது. இது உண்மையா என்பதை அறிய, அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, 2020க்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் வாங்கப்பட்ட புத்தகங்களை ஆராய்ந்து, அறிஞர்களின் பெயர்களுக்குக் களங்கம் விளைவிக்கும் புத்தகங்களை உடனடியாக நூலகங்களிலிருந்து அகற்ற வேண்டும். நூலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகங்களைக் குறித்த உண்மைகளைக் கண்டறிந்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.
நூலகங்களுக்குப் புத்தகம் வாங்குவதில் எல்லாக் காலத்திலும் குறைபாடுகள் உள்ளது அனைவரும் அறிந்ததே. இதனாலேயே மூத்த பதிப்பாளர்கள் பலரும், தலைசிறந்த நூல்களும் நூலகங்களுக்குள் செல்லவே முடிவதில்லை. இந்தக் குறைகளைக் களைந்தெறிந்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இனிவரும் காலத்தில், கற்றறிந்த அறிஞர் பெருமக்கள், பேராசிரியர்கள், தேர்ந்த வாசகர்கள், மாணவர்கள் கொண்ட குழுக்கள் அமைத்துப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரிடமிருந்து புத்தகங்கள் பெறப்பட்டு, அவை முறைப்படி பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பின் நூலகங்களுக்கு வாங்குவதற்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் வலைதளத்தில் யார் யாரிடமிருந்து என்னென்ன புத்தகங்கள் பெறப்பட்டன என்ற பட்டியலையும் அதில் எந்தப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்கிற விவரத்தையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
ஒரு சிலருக்கு மட்டுமில்லாமல், எல்லாப் பதிப்பாளர்களுக்கும் வாய்ப்புக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுபோல வாங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் வலைதளத்தில் நிரந்தரமாக இடம்பெற வேண்டும். இப்படியாக வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும்போது போலிகள், தரமற்ற புத்தகங்கள் திருட்டுத்தனமாக நூலகத்தில் நுழைவதைத்தடை செய்ய முடியும்.
இந்தியாவிலேயே நூலகத் துறைக்கு முன்னோடி தமிழ்நாடுதான். மதராஸ் மாகாணமாக இருந்தபோதே நூல்கள் வாங்குவதற்காகச் சொத்து வரியில் 10 சதவீதத்தை ஒதுக்கும் வகையில் நூலகச் சட்டம் கொண்டு வந்த பெருமை நமக்கு உண்டு. இந்தியாவில் அதிக எண்ணிக்கை கொண்ட நூலகங்களும் உலகத் தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் கொண்ட சிறப்பு நமக்கு மட்டுமே. ஆனால் முரண்நகையாக எழில்
கொஞ்சும் கட்டிடங்களுக்குள் தரமற்ற புத்தகங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வது நமது கடமைதானே. தமிழ் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் பெருமளவில் நம்பிக்கொண்டிருப்பது, நூலகங்களுக்குப் புத்தகங்களை விற்பனை செய்வது மட்டுமே. 2020க்குப் பிறகு நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கப்படாமல் இருப்பது, பல பதிப்பாளர்களின் இருப்பையே ஆட்டம் காணச் செய்துள்ளது.
அரசாங்கம் புத்தகங்களை வாங்குவதற்கு, தக்க குழு ஒன்று அமைத்து வழி காண வேண்டும். சில நாள்களுக்கு முன்பு புது டெல்லியில் இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்பின் 50ஆவது ஆண்டு பொன்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பல்வேறு பதிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.
அந்த மாநாட்டில் கலந்துகொண்ட சிலர், தமிழ்நாடு போலச் சிறப்பான நூலகச் செயல்பாடுகள் மற்ற மாநிலங்களுக்கும் தேவை என்ற வகையில் பேசினார்கள். கேட்கும்போது பெருமையாகவும் பெருமிதமாகவும் இருந்தது. அந்த நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்ள நாம் இன்னும் தீவிரமாகச் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இன்றைக்குப் பதிப்புத் துறை மிக உயர்ந்த இடத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டிருந்தாலும் அச்சுப்புத்தகங்களுக்குரிய தேவை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. புது டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் அதிகம் பேசப்பட்ட இன்னொரு பொருள், ‘வளமான எதிர்காலத்தை இளைஞர்களுக்கு அளிக்க வேண்டுமெனில், அவர்கள்தம் கற்பனை வளத்தையும் படைப்பாற்றலையும் பெருக்குதல் அவசியம்’ என்பதாகும்.
அதற்குப் பரிந்துரைக்கப்பட்ட முக்கியத் திட்டம், ‘நூலகங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதும், புத்தகங்கள் வாங்குவதும்’ ஆகும். இதிலெல்லாம் ஏற்கெனவே முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு அரசு, இப்போது புதிதாக ஒரு மாபெரும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. கல்லூரிகளில் மாணவர் வாசிப்பு மன்றங்கள் தொடங்கப்பட்டு முதற்கட்டமாகச் சென்னையிலுள்ள எல்லா கல்லூரிகளிலும் தொடங்கி, பின்பு தமிழ்நாடு எங்கும் கொண்டுசெல்லத் திட்டமிட்டுச் செயல்படுத்திவருகிறது.
மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலம், தங்கள் மொழியில் படைக்கப்பட்ட இலக்கியங்கள், பிற மொழிகளுக்குச் செல்ல வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில் ‘மொழிபெயர்ப்பு நிதிநல்கை’ வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு தொடங்கி முன்மாதிரியாக விளங்குகிறது தமிழ்நாடு அரசு.
அதே நேரத்தில், நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் உள்ள தவறுகள் களையப்பட வேண்டியதும் அரசின் கடமை மாநிலங்களிடம் உள்ள நூலகத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதுஎன சமீப காலமாக இன்னொரு செய்தியையும் அறிகிறோம்.
ஏற்கெனவே கேரளம், தமிழ்நாடு அரசாங்கங்கள்இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாம்நூலகத்துறையைச் செம்மைப்படுத்திச் சரியான வழிமுறைகளை மேற்கொள்ளாவிட்டால் ‘நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று நாமேஅவர்களிடம் தாரை வார்த்துக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.
- தொடர்புக்கு: olivannang@gmail.com