

உலகின் முதல் மிகப் பெரிய போராகக் கருதப்படும் முதல் உலகப் போர் குறித்த விரிவான பதிவு இந்நாவல். நோபல் பரிசுபெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய முக்கியமான நாவல் இது. ஹெமிங்வே தமிழ் இலக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்திய எழுத்தாளர். அவரது புகழ்பெற்ற ‘கடலும் கிழவனும்’ நாவல் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு நாவல்களுள் ஒன்று.
‘போர்கொண்ட காதல்’ அவரது ‘A Farewell to Arms’ என்கிற நாவலின் மொழிபெயர்ப்பு. முதல் உலகப் போர் காலகட்டத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தில் ஓட்டுநராகச் சேவையாற்றியுள்ளார் ஹெமிங்வே. அந்த அனுபவத்தின் அடிப்படையில் போரின் கொடூரத்தை அருகிலிருந்து பதிவுசெய்துள்ளார்.
இந்த நாவலின் நாயகி கேதரின் பாக்லி, நாயகன் ஹென்றி இவர்களுக்கு இடையிலான காதலை ஹெமிங்வே அற்புதமாக விவரித்துள்ளார். காதலின் அழகான நாடகத்தை ஹெமிங்வே நிகழ்த்திக் காட்டியுள்ளார். முதலில் நாயகியின் அழகுக்காகக் காதலிப்பதாகப் பொய்யுரைத்து, அவளை அடைய நினைக்கும் அவன், அந்தக் காதலின் உன்மத்தத்தில் கரைந்துபோய் அவளே கதி என்று ஆகிறான்.
போர்ச் சூழலின் நடுவில் இந்தக் காதல் உணர்வுபூர்வமாக நாவலில் அரும்பியுள்ளது. போரையும் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு ஹெமிங்வே மனித சமூகத்தின் பக்கம் நின்று பார்த்துள்ளார். இதுவரை எழுதப்பட்ட போர் குறித்த நாவல்களில் சிறப்பானது இது என்பதற்கு இந்த அம்சம் சிறந்த உதாரணமாகும். - விபின்
போர்கொண்ட காதல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில்: ஆயிரம். நடராஜன்)
தடாகம் வெளியீடு
விலை: ரூ.570
தொடர்புக்கு: 9840070870
நலம் கெடுக்கும் மது: மதுவுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீளவே முடியாது என்ற ஆண்டாண்டுக் காலமாக நிலவிவரும் கட்டுக்கதையை ஆலன் காரின் எழுதியுள்ள ‘மதுவைக் கட்டுப்படுத்த எளிய வழி’ என்கிற புத்தகம் உடைக்கிறது. மது அதனை அருந்துபவர்களுக்குத் துணிவைத் தருகிறது; தயக்கத்தை நீக்குகிறது என்பதெல்லாம் வெறும் மாயையே. மாறாக, மன அமைதியைக் குலைப்பதில்தான் மது முக்கியப் பங்காற்றுகிறது.
அது ஒருபோதும் மகிழ்ச்சியைத் தருவதில்லை. அது நமது குடும்பத்தையும் உடல் நலத்தையும் கெடுக்கிறது என்பதையும் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. குடிப்பழக்கத்தைக் கைவிடுவதற்கான காரணத்தைப் பொதுஅறிவின் அடிப்படையில் இப்புத்தகம் விளக்குகிறது; மேலும், குடிப்பதற்குச் சொல்லப்படும் சாக்குபோக்குகளை இந்நூல் ஆழமான கேள்விக்குள்ளாக்குகிறது.
மதுவைக் கைவிடுவதில் அச்சமோ, பதற்றமோ தேவை இல்லை. வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக்கொள்ளுங்கள். அது இயல்பாக நிகழும் என்பதை உதாரணங்களுடன் இப்புத்தகம் விவரித்துச் செல்கிறது. - இந்து குணசேகர்
மதுவைக் கட்டுப்படுத்த
எளிய வழி
ஆலன் கார் (தமிழில்: பிரின்ஸ் கென்னட்)
பாபு அச்சகத்தார்
விலை: ரூ.270
தொடர்புக்கு: 04146228509
தமிழ்ச் சமூகம் குறித்த பதிவு: வேளாண்மை, பொருள் உற்பத்தி, தொழில்நுட்பம், வணிக மேலாண்மை போன்றவற்றில் பொ.ஆ.மு. (கி.மு.) 500 முதல் பொ.ஆ. (கி.பி.) 150 வரை சுமார் 750 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகம் ஒரு மேன்மையான உயர்நிலையைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது. சங்க காலம் என்பது பொ.ஆ.மு. 750 முதல் பொ.ஆ.மு. 50 வரை என்பதும், சங்க கால ஆட்சியாளர்களின் ஆண்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. பொ.ஆ.மு. 750இல் எண்ணியம் என்கிற சாங்கியத்தைத் தோற்றுவித்த தொல் கபிலர் ஒரு தமிழர். வியப்பூட்டும் இத்தகைய விஷயங்கள் இந்நூலில் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளன. பழம்பெரும் தமிழ்ச் சமூகம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை இந்நூல் நமக்கு அளிக்கிறது. - ஹுசைன்
பழம்பெரும்
தமிழ்ச் சமூகம்
கணியன் பாலன்
தொல் கபிலர் பதிப்பகம்,
விலை: ரூ.290
தொடர்புக்கு: 98427 29157
நம் வெளியீடு: மோடி என்னும் சிற்பி: சுவாரசியமான இந்தப் புத்தகத்தில் நரேந்திர மோடி எப்படிக் கட்சியைக் கட்டமைத்தார், அசாதாரண முறையில் கட்சியின் தலைமைப் பதவிக்கு எப்படி உயர்ந்தார் என்று அஜய் சிங் விவரித்திருக்கிறார். குஜராத்தில் மச்சு அணை உடைந்து மோர்வி நகரை வெள்ளம் சூழ்ந்தபோது மீட்பு, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது மட்டுமல்லாமல் தன்னுடைய நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியதில் தொடங்கி மோடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் விவரித்து இறுதியில் இந்திய அரசியலிலும் பொருளாதார வளர்ச்சியிலும் அவர் ஏற்படுத்திவரும் மாற்றங்களையும் கூறுகிறார். - பேராசிரியர் அரவிந்த் பனகாரியா
பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி
அஜய் சிங்
(தமிழில்: சாரி)
இந்து தமிழ் திசை
விலை: ரூ. 350
தொடர்புக்கு: 7401296562