

மனிதனை ஒரு பண்டமாக மனிதனே விற்கும் அவலம் உலகின் பல நாடுகளில் இருந்திருக்கிறது. அங்கிள் டாம்’ஸ் கேபின், ஸ்பார்ட்டகஸ் போன்று அடிமைகளின் வரலாறுகள் புதினங்களாகவும் திரைப்படங்களாகவும் ஆவணப்படங்களாகவும் வெளிவந்து, உலகத்தை உலுக்கியிருக்கின்றன. அதனால் அடிமை என்றதும் நமக்கெல்லாம் ஆப்ரிக்க அடிமைகள்தாம் நினைவுக்கு வருகிறார்கள்.
ஆனால், ஆப்ரிக்க அடிமைகளுக்குச் சற்றும் குறையாத அளவுக்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைகளாக மனிதர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது வெளியே தெரியாத விஷயமாகவே இருந்துவருகிறது. அதற்குக் காரணம், ஆப்ரிக்க அடிமை வரலாறுகளைப் போல் அபுனைவோ புனைவோ திரைப்படங்களோ வராததுதான்.
இன்று தமிழர்கள் உலகின் பல நாடுகளிலும் வாழ்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். அவர்களில் ஏராளமானோர் ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டவர்களின் வாரிசுகளாக இருக்கலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பிரித்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்பட்டு, அயல்நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அடிமை வணிகத்தை மன்னர்களும் உயர்பதவிகளில் இருந்தவர்களும் செய்திருக்கிறார்கள்.
அடிமை வியாபாரம் செய்யும் வணிகர் எந்த மதம், எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து அந்த மதம், அந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கூட்டம் கூட்டமாக மக்களைப் பிடித்து, நயவஞ்சகமாக அழைத்துச் சென்று, வீடுகளில் மந்தைகளைப் போல் அடைத்துவைத்து, உயிர் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் கஞ்சி கொடுத்து, கப்பலில் ஏற்றி விற்பனை செய்திருக்கிறார்கள். வாங்கப்பட்ட அடிமைகளைக் கூடுதல் விலை வைத்துப் பலருக்கும் விற்பனை செய்திருக்கிறார்கள்.
இவர்களில் வெகு சில அடிமைகள் தப்பி வந்து, தங்களின் கண்ணீர்க் கதைகளையும் சொல்லியிருக்கிறார்கள். பொ.ஆ. (கி.பி.) 1547 முதல் 1792 வரை தமிழ்நாட்டுப் பகுதிகளில் நடைபெற்ற அடிமை வணிகம் குறித்துச் சான்றுகளோடு ஆவணப்படுத்தியிருக்கிறது இந்த நூல். ஆனால், பொ.ஆ. 1448இலேயே தமிழகத்தில் அடிமை வணிகம் இருந்தது குறித்த பனை ஓலைகளை ஆவணப்படுத்தியிருக்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் முத்துக்குமார்.
நாகப்பட்டினம் பகுதியில் மக்கள் ஒரு ரியாலுக்கு அடிமையாக விற்கப்பட்டுள்ளனர். டச்சு ஆளுகைக்கு உள்பட்ட அம்பொய்னா தீவில் தொழிலாளர்களின் தேவை இருப்பதால், அங்கு அடிமைகளை வாங்கி அனுப்ப அங்குள்ள டச்சு நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1659இல் விலை குறைவாக இருப்பதால் 5,000 அடிமைகளைத் தலா ஒரு ரியாலுக்கு வாங்கி அனுப்பிவைத்துள்ளனர். இன்னொரு கவனிக்கத்தக்க விஷயத்தை நூலாசிரியர் ஓரிடத்தில் சுட்டிக்காட்டுகிறார்.
ஆர்க்காடு நவாப், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எழுதிய கடிதத்தில், அடிமை வணிகத்துக்கு எதிரான தனது அபிப்ராயத்தைப் பதிவுசெய்துள்ளார். அடிமை வணிகத்துக்கு அனுமதி கொடுத்தாலும், அவர்கள் இஸ்லாம் சமயத்தவர் அல்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார். இம்மாதிரி வலுவான ஆதாரத்துடன் தமிழக அடிமை வியாபாரம் குறித்த முக்கியமான இந்த ஆய்வு நூலை எஸ்.ஜெயசீல ஸ்டீபன் ஆங்கிலத்தில் எழுதி, கி.இளங்கோவன், புதுவை சீனு. தமிழ்மணி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். - எஸ். சுஜாதா
அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகமும் காலனிய அடிச்சுவடுகளும்
எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில்: கி.இளங்கோவன், புதுவை சீனு. தமிழ்மணி)
நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் (பி) லிட்.
விலை: ரூ.280
தொடர்புக்கு: 044 26251968
இனத்தின் பெருவலி: எளிய மனிதர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை நேர்மொழியில், அரசியல் பார்வையோடு கவிதைகளாக்கியுள்ளார் பச்சோந்தி. அவருடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பு இது. பெருநகரங்களின் நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும் வாழ நேர்ந்த மனிதர்கள், அவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் ஒடுக்குமுறை, நகரமயமாக்கல் எனும் பெயரால் சென்னையின் பூர்வகுடிகள் துரத்தப்படும் அவலம் என அனைத்தையும் இயல்பான மொழியில் கவிதைகளுக்குள் கொண்டுவரும் கலை பச்சோந்திக்குக் கைவரப்பெற்றுள்ளது.
‘நடனமற்ற ஆகாயம்’ தொடங்கி, ‘மாமிச மஸ்தகம்’ வரை 30 கவிதைகள் அடங்கிய குறுந்தொகுப்பு என்றாலும், ஒவ்வொரு கவிதையும் பேசும் மையப்பொருளின் உள்ளீடான அரசியல் இக்கவிதைகளைப் பேசுபொருளாக்குகின்றன. ‘மகனே! அதைச் சற்றும் புசிக்க விரும்பாதே/முண்டத்திற்கு வயிறு மட்டும் எதற்கென்று/ இரைப்பையையும் பிய்த்துவிட்டோம்?/அழுகிய காலைத் தலைக்கு வைத்து/உறங்கும்/ஒரு ஜோடிக் காலணியில்/எத்தனை பாதைகள்/தேய்ந்தனவோ/அதிர்ச்சியுறாதே மகனே/இது காலணியல்ல/நம்/இனத்தில் கடைசிக் கால்கள்’ எனும் வரிகள் காலத்தின் மீதேறி நடக்கும் ஒரு இனத்தின் பெருவலியைப் பேசுகின்றன.
வார்த்தைகள் ஒன்றன்கீழ் ஒன்றாக வரிசையாக இல்லாமல் ஒரே பத்தியாக எழுதப்பட்டிருந்தாலும் ‘ரத்தத் தீவு’, ‘மண்டையோட்டின் முகக் கவசங்கள்’, ‘எலும்புக் குவளை’ ஆகியவற்றைக் கவிதையென்று சொல்லாமல் வேறெதைக் கவிதையென்று சொல்வது? - மு.முருகேஷ்
கபால நகரம்
பச்சோந்தி
நீலம் வெளியீடு
விலை: ரூ.100
தொடர்புக்கு: 6369825175