வாழ்க்கை அழைக்கிறது 04: இரும்பல்ல; காந்தம்!

வாழ்க்கை அழைக்கிறது 04: இரும்பல்ல; காந்தம்!
Updated on
3 min read

12 வயதில் சென்னைக்கு ஓடிவந்த நான், அறிமுகமற்ற வீதிகளில் தன்னந்தனியனாய் நடந்தபோது எனது சுதந்திர உணர்வைத் தவிர வேறெதும் என்னிடம் எஞ்சியிருக்கவில்லை.

ஆனால் நான் ‘ஐயோ’ என்று ஆகி விடவில்லை.

அதுவரை நான் பெற்றிருந்த சிந்தனைகளும் நம்பிக்கைகளும் என் கால்களுக்குத் தீபங்களாய்ச் சுடந்தன. வாழ்க்கை என் முன்னே விரிந்து கிடந்தது.

புதிய மனிதர்கள், புதிய உறவுகள், புதிய கனவுகள், என் பயணம் எவ்வளவு நீண்டது. எத்தனை இனியது?

இந்தப் பயணத்தில்தான் ‘காம்ரேட்’ கதிர்வேலுவையும், ‘ஆத்மா’வையும், ‘கருஞ்சட்டை ஞானி’யையும் இன்னும் நான் எழுதாத எத்தனையோ மனிதர் களையும் சந்தித்தேன்.

இந்த மனிதர்கள் பேரும் புகழும்கொண்ட மாமனிதர்கள் அல்லர். இவர்கள் வறிஞர்களாய் இருந்தார்கள். கேவலமானவர்களாய்க் கருதப்பட்டார்கள். தங்கள் நிழலைப் போட்டு வைப்பதற்கு இடந்தேடி இடந்தேடி இழுத்துக்கொண்டே திரிந்தார்கள். அநாதைகளாய், அசடுகளாய், கசடுகளாய், அலைக்கழிக்கப்பட்டவர்களாய், தேடுகிறவர்களாய், தேடப்படுகிறவர்களாய் இருந்தார்கள்.

‘எதற்காவது பயன்படுவார்கள்; இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று பெரிய மனதோடுதான் அரசாங்கம் இவர்களைக் குப்பைக் குழிகளுக்குள் அள்ளிப் போடாமல் இருந்தது.

வாழ்க்கை இவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. வெயிலும், மழையும், வியர்வையும், குளிரும், பசியும், பிணி யும் மாத்திரமே இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், மானுடம் மாத்திரம் இங்கே மங்காமல் எரிந்தது. எந்தப் புயலாலும் அந்த அமர ஜோதியை அணைத்துவிட முடிய வில்லை.

நாம் படிக்கும் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த புத்தகங்கள் இந்த மனிதர்கள்தாம்.

“மனிதனைவிடச் சிறந்த புத்தகம் எக்காலத்திலும் எழுதப்பட்டதில்லை” என்று சும்மாவா சொன்னான் கார்க்கி!

இந்த மனிதர்களோடு நான் வாழ்ந்த வாழ்க்கை, அது தந்த படிப்பினைகள், சோகங்களுக்குள்ளும் சுடர்ந்த அந்தச் சுகமான அனுபவங்கள்…. இவற்றை ‘நமது நிருபர்’ வார இதழில் எழுதி வந்தேன்.

ஒருநாள் கரூரைச் சேர்ந்த கண்ணதாசன் என்கிற தி.மு.கழகத் தோழர், என்னைச் சந்தித்தார்.

அவர் என்னிடத்தில் சொன்னார்: “நீங்கள் எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் சரி, கலைஞரின் முத்திரை பெறவில்லை என்றால் தமிழ் மக்களால் கவனிக்கப்படப் போவதில்லை. கலைஞர் பாராட்டினால், அதுதான் எழுத்து; அவன்தான் எழுத்தாளன். அது உங்களால் முடியுமா?”

‘கலைஞர்’ என்னும் மந்திரச் சொல் இளைஞர்களைக் கட்டி இழுத்து, தட்டிக் கொடுத்து, தன்வயப்படுத்தும் ஆற்றல் பெற்றிருப்பதை நானும் அறிவேன். அவர் ‘வா’ என்றால் வந்தார்கள்; ‘போர்’ என்றால் களத்தில் நின்றார்கள்.

கரூர் கண்ணதாசனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நான் மவுனமாக இருந்தேன்.

“உங்களால் கலைஞரின் முத்திரை பெற முடியாதா, என்ன?” என்றார்.

“அது ஒன்றும் முடியாததல்ல. ஆனால் நான் கம்யூனிஸ்ட் ஆதரவாளன். அவரோ, திராவிட முன்னேற்ற கழகத் தலைவர். இடைவெளி அதிகம்” என்றேன்.

“கடந்த வாரம் கேள்வி - பதிலில் என்ன எழுதினீர்கள்! நினைவிருக்கிறதா?” என்றார் அவர்.

‘கலைஞரின் குடும்பப் படத்தை ‘நமது நிருபரில்’ வெளியிடுவீர்களா?’ என்றொரு கேள்வி.

அதற்குப் பதிலாக நான் ‘ஆறு கோடித் தமிழர்களையும் ஒரு புகைப்படத்தில் கொண்டுவரும் அளவுக்கு விஞ்ஞானம் இன்னும் வளரவில்லையே” என்று எழுதியிருந்தேன்.

நான் எழுதியதை நினைவுபடுத்தினார் கரூர் கண்ணதாசன். “ஆறு கோடித் தமிழர்களும் கலைஞரின் குடும்பம்தான் என்று ஒப்புக் கொள்ளும் நீங்கள், அந்தக் குடும்பத் தில் ஒருவர் என்கிற உரிமையுடன் கலைஞரைப் பாருங்கள்” என்றார்.

“பார்க்கலாம்” என்று முடித்துக் கொண்டேன்.

கட்டுரைத் தொடரைப் புத்தகமாகக் கொண்டுவர முடிவு செய்தேன். பதிப்பாளர்களைப் பார்த்து பேசினேன். இரண்டு ஆண்டுகளுக்குமேல் காத்திருந்தேன். இவர் வெளியிடப் போகிறார். அவர் வெளியிட போகிறார் என்று எல்லோருக்கும் சொல்லிகொண்டிருந்தேன்.

ஆனால் ‘ஆத்மா என்றொரு தெருப் பாடகன்’ என்று பெயர் சூட்டப்பெற்ற அந்த புத்தகத்தை வெளியிட எந்தப் பதிப்பாளரும் முன்வரவில்லை. ‘‘இதை வெளியிட்டால் பலருடைய கசப்புக்கு ஆளாக நேரிடும். அரசு நூலகங்களை நம்பியிருக்கும் எங்களுக்கு ஆபத்தாக முடியும். மன்னிக்கவும்’’ என்று நான் நம்பியிருந்த பதிப்பகங்களெல்லாம் மறுத்துவிட்டன.

ஒரு பதிப்பாளர் என்மீது பரிவு கொண்டு ‘‘நான் வெளியிடுகிறேன். ஆனால், கலைஞரின் அணிந்துரை வாங்கி வர முடியுமா’’ என்றார். கரூர் கண்ணதாசன் வேறு வழியில் வந்து மறித்தது போல் இருந்தது.

எனக்குள் எத்தனையோ குழப்பங்கள். யோசனைகள். நெருடல்கள்.

பதிப்பாளர் கேட்டார்: ‘‘காந்தியம் உங்களுக்கு பிடிக்குமா?’’

‘‘பிடிக்காது!’’

‘‘காந்தி படத்தை கிழிப்பீர்களா?’’

‘‘காந்திய எதிர்ப்பென்பது, காந்தி படத்தைக் கிழிப்பதல்ல; ஏழ்மையை ஒழிப்பதென்பது ஏழைகளை ஒழிப்ப தல்ல!’’

“கலைஞரை உங்களுக்குப் பிடிக்குமா? பிடிக்காதா?’’

‘‘அவருடைய தமிழ் பிடிக்கும். ஆனால்...’’

‘‘என்ன ஆனால்..?’’

‘‘கலைஞர் என்கிற மனிதர் கரடு முரடானவர். எளிய மனிதர்கள் நெருங்க முடியாத இரும்புத் தலைவர்!’’ என்றேன்.

‘‘நீங்களாக எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள். அவரைப் போய் பாருங்கள். அணிந்துரை கேளுங்கள். அவர் அணிந்துரை தந்தால் என்னை வந்து பாருங்கள். புத்தகம் போட லாம்...’’

பதிப்பாளர் எழுந்து போய்விட்டார்.

‘இவரே இப்படி என்றால்... அவர் எப்படி இருப்பார்?!’

போய்த்தான் பார்ப்போமே... என்று மனம் சம்மதித்தாலும் தயக்கம். குழப்பம் மறுபடியும்... மறுபடியும்.

காந்தி ஒரு சோஷலிஸ்ட்

நேரு ஒரு சோஷலிஸ்ட்

ராஜாஜி ஒரு மாஜி சோஷலிஸ்ட்

காமராஜ் ஒரு மாதிரியான

சோஷலிஸ்ட்!

அண்ணாதுரை

ஒரு பாலங்கட்டுகிற சோஷலிஸ்ட்

இந்திராவோ

பரம்பரை சோஷலிஸ்ட்

கருணாநிதி?

அவரோ, நாங்கள்தான்

உண்மையான கம்யூனிஸ்ட் என்கிற

தீவிர சோஷலிஸ்ட்!

ஆம்..

இவர்களெல்லாம் சோஷலிஸ்ட்கள்!

ஆனாலும் சோஷலிஸம்

வரவில்லையே ஏன்?

ஏனென்றால்,

இவர்களெல்லாம்

சோஷலிஸ்ட்கள்!’

- இப்படி எல்லாம் எழுதிவிட்டு, எப்படி கலைஞரைச் சந்திப்பது?

-அழைக்கும்...

‘நவம்பர் 30-ல் வெளிவந்த ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் இளவேனில் எழுதிய ‘வாழ்க்கை அழைக்கிறது’ என்கிற தொடரில் எனது தந்தை பேராசிரியர் கோ.கேசவன், சிறுநீரக குறைபாட்டால் அவதியுற்றதாகவும், அதற்கு நாங்களும் அவரது நண்பர்களும் மருத்துவ செலவுக்கு நன்கொடை வசூலித்ததாகவும், இளவேனில் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி நடிகை சில்க் சுமிதாவிடம் பேசி, 4 லட்ச ரூபாய் தயார் செய்ததாகவும் பொய்யான ஒரு புனைவு செய்தியை எழுதியுள்ளார்.

35-க்கும் மேலான தமிழ் நூல்களை எழுதியவர் எனது தந்தை. எனது தந்தையின் மரணம் எதிர்பாராதது. சர்க்கரை நோய் காரணமாக 1998-ல் திடீர் மாரடைப்பால்தான் அவர் காலமானார்.

கடைசிவரை நல்ல பொருளாதார வளத்துடன் இருந்த எனது தந்தை கோ.கேசவன் கடைசி கால மருத்துவச் செலவுக்கு கையேந்தினார் என இளவேனில் எழுதியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தோம்’- என்று கோ.கேசவனின் இரண்டாவது மகன் கே.மதுபாலன் கடிதம் எழுதியிருந்தார்.

’தோழர் கேசவன் அவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்ன செய்யலாம்?’ என்று சில தோழர்கள் வந்து சொன்னபோது உதவி செய்ய வேண்டும் என்கிற அவசரம் மட்டுமே எனக்கிருந்தது. உடனே ஆனா ரூனாவையும், சில்க் சுமிதாவையும் தொடர்பு கொண்டு பேசினேன்.

பதற்றமான சூழலில் பெயர் குழப்பத்தால் விளைந்த என்னுடைய தவறான புரிதல்தான் இது. உண்மையில் அப்போது என்னிடம் கேசவன் என்கிற பெயரில் 4 பேர் தொடர்பில் இருந்தார்கள். ஒருவர் நந்தனம் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் கேசவன். மற்றவர்கள் எழுத்தாளர் ஆம்பூர் கேசவன், குடியாத்தம் கல்லூரி மாணவராக இருந்த கேசவன், பத்திரிகையாளர் தலைச்சேரி ராகவன் மூலம் அறிமுகமான கேரள கேசவன்.

பேராசிரியர் கேசவனின் இளைய மகன் எனது கட்டுரையைப் படித்துவிட்டு கோபமாகப் பேசிய பிறகே, பெயர் குழப்பம் என்னைத் தடுமாற வைத்துவிட்டதை உணர்ந்தேன்.

என்னிடம் எந்த கேசவனுக்கு உதவி கேட்டார்கள் என்கிற சரியான தகவலை எடுத்து சொல்லி, கவிஞர் ஜீவபாரதிதான் அந்த குழப்பத்தை தீர்த்து வைத்தார். அவர்தான் குடியாத்தம் கேசவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். அந்த குடியாத்தம் கேசவனுக்காகத்தான் நான் சுமிதாவிடம் உதவி கேட்டேன் என்பது புரிந்தது.

குடியாத்தம் கேசவன் என்று எழுதுவதற்கு பதிலாக பேராசிரியர் கேசவன் என்று எழுதியதற்காக மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in