

அ
றிஞர் அண்ணா ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘காஞ்சி’ என்ற இதழைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த ‘காஞ்சி’ இதழின் 1966-ம் ஆண்டு பொங்கல் மலரில் வந்த காமிக்ஸ் வடிவக் கதையே ‘கள்வனின் மகன்’. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான கலித்தொகையின் காட்சிகளைப் படக்கதை வடிவில் அளிக்கும் முயற்சியே ‘கள்வனின் மகன்’ என்ற கதை.
பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன. நமக்குக் கிடைத்த ‘காஞ்சி’ இதழின் பகுதியானது கலித்தொகையில் 103-வது பாடலை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் பாடலில் ஏறு தழுவுதல் இடம்பெற்றிருக்கிறது.
ஏறு தழுவுதல் என்பது சீறிப் பாயும் காளைகளைத் தழுவி அடக்குவது. ஆயர், ஏறுகளின் கொம்பைக் கூர்மையாகச் சீவிப் பரந்த வெளியான ஏறு தழுவும் இடத்தில் விட்டுவிடுவார்கள். இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏறு தழுவ முயல்வார்கள். ஏறு தழுவிய இளைஞருக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவார்கள்.
‘கள்வனின் மகன்’ சித்திரக் கதையில் இங்கே இடம்பெற்றிருக்கும் பகுதி இப்படியாக ஒரு முக்கியமான இடத்தில் நிற்கிறது. தோழி இந்த விஷயத்தைத் தலைவியிடம் கூறும்போது, பின்னால் தலைவியின் தாயார் நிற்பதைக் கவனியுங்கள். ‘அடுத்தது என்ன?’ என்ற கேள்வி இப்போதே எழுகிறது. ஆனால், என்னிடம் இந்த இதழின் அடுத்த இதழ் இல்லை. ஆகையால், இது தொடர்ச்சியாக வந்த கதையா? அல்லது ஒரே ஒரு இதழில் வந்த சோதனை முயற்சியா என்பது தெரியவில்லை. அதுவுமில்லாமல் இந்தக் கதையை எழுதியது யார்? ஓவியங்களை வரைந்தது யார்? இது போன்ற கதைகள் ‘காஞ்சி’ இதழில் தொடர்ந்தனவா என்று பல கேள்விகள். தெரிந்தவர்கள் பதில் அளியுங்களேன்?
- கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர்,
தொடர்புக்கு: prince.viswa@gmail.com