Published : 09 Dec 2017 10:03 AM
Last Updated : 09 Dec 2017 10:03 AM

தொடுகறி: ரேக்ளா வேணுகோபால்!

சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான சு.வேணுகோபால் பலவகையிலும் சுவாரசி யமான மனிதர்தான். விவசாயி, எழுத்தாளர், கல்லூரி ஆசிரியர் என்ற அளவில்தான் அவரைப் பற்றிப் பலருக்குத் தெரியும். அவர் மாட்டுக் குப் பிரசவம் பார்ப்பதில் நிபுணர், ரேக்ளா வீரர், கபடி வீரர், ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர், நீச்சல்வீரர் என்று பல அவதாரங்களை எடுத்திருப்பவர்.

இலக்கிய நண்பர்களுடன் சேர்ந்து சென்றுகொண்டிருந்தாலும் எதிரில் ஏழெட்டு மாடுகள் நின்றுகொண்டிருந்தால் நின்று பார்த்துவிட்டுத்தான் செல்வாராம். மாடுகளின் நடையைப் பார்த்தும், சுழியைப் பார்த்தும் அவற்றின் குணங்களைச் சொல்லக்கூடியவராம்! இப்படி எல்லாவற்றோடும் சேர்த்துதான் சு.வேணுகோபாலின் இலக்கியத்தையும் பார்க்க வேண்டும் என்பார்கள் அவரது நண்பர்கள்!

குறுநாவல் போட்டி

குறுநாவல் போட்டியொன்றை, மறைந்த எழுத்தாளர் கி.பி. அரவிந்தன் நினைவாக ‘காக்கைச் சிறகினிலே’ இதழ் அறிவித்திருக்கிறது. தமிழ் இலக்கிய ஆர்வலர் இ.பத்மநாப ஐயரின் வழிகாட்டுதலில் பேரா. அ.ராமசாமி, எழுத்தாளர்கள் ரஞ்சகுமார், இளவாலை விஜயேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட குழு விருதுக்குரிய எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறது. முதல் பரிசு: ரூ. 10,000, இரண்டாம் பரிசு: ரூ.7,500, மூன்றாம் பரிசு: 5,000, மூன்று ஆறுதல் பரிசுகள்: 2,000. போட்டிக்குக் குறுநாவல்களை அனுப்ப வேண்டிய கெடு: 05.01.2018. மேற்கொண்டு விவரங்களுக் குத் தொடர்புகொள்ளவும்: 9841457503.

மணல் வீடு இலக்கிய வட்ட விருதுகள்

மணல் வீடு இலக்கிய வட்டம், முன்னோடிப் படைப்பாளுமைகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக விருது வழங்கி கவுரவித்துவருகிறது.

அந்த அமைப்பின் சார்பாக வழங்கப்படும் அஃக் பரந்தாமன் நினைவு விருதுக்கு சௌந்திர சுகன் இதழும், கவிஞர் சி.மணி நினைவு விருதுக்கு என்.டி.ராஜ்குமாரும், நாவலாசிரியர் ப.சிங் காரம் நினைவு விருதுக்கு நக்கீரனும், கு.அழகிரிசாமி நினைவு விருதுக்கு அழகிய பெரியவனும், ராஜம் கிருஷ்ணன் நினைவு விருதுக்கு எம்.ஏ. சுசீலாவும், ஓவியர் கே.எம். கோபால் நினைவு விருதுக்கு ஓவியர் ஷாராஜும், நிகழ்த்துக் கலைஞர்களுக்கான அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருதுக்கு கூத்துக்கலைஞர் மட்டம்பட்டி பழனியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த விருது தலா ரூ.25 ஆயிரத்தையும் சான்றிதழை யும் உள்ளடக்கியது. விருது வழங்கும் விழா ஜனவரி 6-ம் தேதி ஏர்வாடியில் நடக்கவிருக்கிறது. விருதாளர்களுக்கு வாழ்த்துகள்!

சிறுகதைகளுக்காக ஒரு நாள்!

டிசம்பர் வந்துவிட்டதால் புத்தக வெளியீடுகள், புத்தக விமர்சனக் கூட்டம் என்று இலக்கிய உலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தக்கை அமைப்பின் சார்பில் சமீபத்திய சிறுகதை தொகுப்புகளுக்கு ஒரு முழுநாள் விமர்சனக் கூட்டம் நடைபெறுகிறது. விஷால் ராஜா, தூயன், குமாரநந்தன், குலசேகரன், கே.என்.செந்தில், பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புகள் இந்தக் கூட்டத்தில் விமர்சனம் செய்யப்படுகின்றன. கோணங்கி, ஜி.முருகன், க.மோகனரங்கன், அசதா ஆகியோரின் நெறியாள்கையில் ந.பெரிய சாமியின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு சேலத்தில் நாளை (10-12-2017) நடைபெறுகிறது. தொடர்புக்கு: 7824880225.

தெரிந்ததை எழுதாதீர்கள்!

இளம் எழுத்தாளர்களுக்கு மூத்த எழுத்தாளர்கள் விதவிதமான அறிவுரைகள் வழங்குவார்கள். அவற்றுள், இலக்கியத்துக்கான நோபல் விருதைச் சமீபத்தில் பெற்றிருக்கும் கசுவோ இஷிகுரோவின் அறிவுரை சற்று வித்தியாசமானது. “உனக்குத் தெரிந்ததை எழுது’ என்ற அறிவுரை தான் நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் முட்டாள்தனமான விஷயம். சலிப்பூட்டும் சுயசரிதையை எழுதவே எல்லோரையும் அந்த அறிவுரை ஊக்குவிக்கிறது. எழுத்தாளர்கள் தங்களின் கற்பனையையும் சாத்தியத் தையும் பீறிடச் செய்வதற்கு நேர்மாறான விஷயம் அது. ஆகவே, தெரிந்ததை எழுதாதீர்கள். தெரியாததைப் பற்றியே எழுதுங்கள்” என்கிறார் கசுவோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x