வாழ்க்கைக் கதைகள்

வாழ்க்கைக் கதைகள்
Updated on
2 min read

எம்.ஜி. கன்னியப்பனின் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். 2019இல் விகடனில் வெளிவந்த ‘தனி இருக்கை’ எனும் சிறுகதை வெளியான காலகட்டத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற கதை. கன்னியப்பனின் கதைகள் அனுபவங்களால் ஆனவை. அதனால், உயிர்ப்புள்ள வாழ்க்கையும் இதில் இருக்கிறது. சிக்கலற்ற மொழியும் சுவாரசியமான கதைக் கருக்களும் வாசிப்புக்குச் சுவை கூட்டுகின்றன. கதை சொல்வதில் வெளிப்படும் ஆற்றல் கவனிக்கத்தக்கது. - ஹுசைன் - ஹுசைன்

தனி இருக்கை,
எம்.ஜி.கன்னியப்பன்,

டிஸ்கவரி
பப்ளிகேஷன்ஸ்,
விலை: ரூ.130
தொடர்புக்கு: 99404 46650

துறவும் இல்லறமும்: திபெத்தில் யாரோ எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பு என்கிற திசைதிருப்பலுடன் ‘எதிர்க்கரை’ நாவல் தொடங்குகிறது. பூமியின் வெவ்வேறு பகுதியில் பிறந்து வளரும், இரண்டு வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கும் இருவரின் நனவோடைப் பயணமே இந்நூல். இருவருக்கும் பிறப்பாலோ, உறவாலோ எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆனால், சற்று உற்று நோக்கினால் ஒருவரின் இடத்தில் மற்றொருவர் இருப்பது புலப்படும்.

இல்லற வாழ்க்கை வாழ்வதிலும் துறவிகள் உண்டு. மாதத்தின் தொடக்கத்தில் வீட்டுச் சாமான்கள் வாங்கிப்போட்டுவிட்டு, பின் எது குறித்தும் கவலையின்றித் தூங்கி, முயங்கி, போட்ட சாப்பாட்டின் உப்பு, காரம் குறித்து ஏதும் கருத்துச் சொல்லாமல், காலத்தைக் கழிக்கும் துறவிகள்.

எதிர்க்கரை எப்போதுமே பசுமையானது மட்டுமல்ல, வசீகரமானதும்கூட. அடைய முடியாத பொருளில் இருக்கும் அதே ஆசையைத் தூண்டுவது எதிர்க்கரை. துறவும் இல்லறமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதைச் சொல்ல விழையும் கதையில் தத்துவவிசாரம் அதிகமாக வந்திருக்கிறது.

தன்னையே ஒரு பார்வையாளர் மனநிலையில் தூர இருந்து பார்ப்பது என்பதுபோலப் பல கனமான விஷயங்களை நாவலில் கையாளப்பட்டுள்ளன. யுவன் சந்திரசேகரின் மற்ற நாவல்களிலிருந்து விலகியது இது. கதையைவிடத் தத்துவார்த்தம், தர்க்கவிவாதங்கள் நிறைந்த நாவல் இது. - சரவணன் மாணிக்கவாசகம்

எதிர்க்கரை
யுவன் சந்திரசேகர்

எழுத்து பிரசுரம்
விலை: ரூ.420
தொடர்புக்கு: 8925061999

கலங்க வைக்கும் கட்டுரைகள்: லண்டன் வாழ் இலங்கைத் தமிழரான மு.நித்தியானந்தன் எழுதிய 46 குறுங்கட்டுரைகள், ‘பெருநதியின் பேரோசை’ எனும் நூலாக தொகுக்கப்பட்டுள்ளன. சில கட்டுரைகள் உன்னதமான மனிதர்களைப் பேசுகின்றன. சில கட்டுரைகள் நூல்களை அறிமுகப்படுத்துகின்றன. சில கட்டுரைகள் கடந்த கால நிகழ்வுகளை எடுத்துச் சொல்கின்றன.

1944ஆம் ஆண்டு பாரிஸில் ஒரு கிராமத்தில் நாஜிக்கள் நிகழ்த்திய கொடுமைகளைச் சொல்லும் ‘பாசிசம் தின்ற ஒரு கிராமத்தின் கதை’யும் ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் என்று சொல்லி, கொலை செய்யப்பட்ட மருத்துவ தேவதை ‘ராஜினி திராணகம’வின் நினைவுகளும் கலங்க வைக்கின்றன. ‘சிவரமணியும் தற்கொலையும்’ கட்டுரையில், தற்கொலை செய்துகொள்வதால் கோழையாகிவிட மாட்டார்கள், உயிரோடு இருப்பதால் மட்டுமே வீரர்களாகிவிட முடியாது என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். - சுஜாதா

பெருநதியின் பேரோசை
மு.நித்தியானந்தன்

விலை: ரூ.275
கலைஒளி முத்தையா பிள்ளை நினைவுக் குழு, லண்டன்.

தமிழைப் பறைசாற்றும் நூல்: மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை ஒட்டி தொகுப்பட்ட கட்டுரை நூல் இது. தமிழின் பலதரப்பட்ட அம்சங்களைப் பறைசாற்றுவதாக இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. தற்கால நவீனத் தமிழ்ச் சூழலில் புழங்கும் அறிஞர்கள் பலரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது. பாமயன், உதயசங்கர், நா.மம்மது, நா.முத்துநிலவன், இரா.கலைக்கோவன், நீதிமணி, செழியன் உள்ளிட்ட பலரும் கட்டுரைகள் எழுதியுள்ளனர். கி.ராஜநாராயணன், வையாபுரியார் ஆகியோரது கட்டுரைகளும் இதில் கோக்கப்பட்டுள்ளன. இணையத் தமிழ், தமிழ் இசை, தமிழ்ச் சிறார் இலக்கியம், சூழலியல் உள்ளிட்ட அம்சங்களை இக்கட்டுரைகள் பொருளாகக் கொண்டுள்ளன. - விபின்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுச் சிறப்பு மலர்
மராசிரியர்: சுகவன முருகன்

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
இந்தியக் கிளை
தொடர்புக்கு: 044 28340488

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in