

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆசுதோஷ் பரத்வாஜ் 2011 முதல் 2021வரை சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார், தண்டேவாடா உள்ளிட்ட பகுதிகளுக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் ஆதிக்கம் நிறைந்த அண்டை மாநிலப் பகுதிகளுக்கும் சென்று செய்தி சேகரித்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘தி டெத் ஸ்க்ரிப்ட்’ (The Death Script) என்னும் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.
மாவோயிஸ்ட் இயக்கத்தினர் இயற்கை வளம் நிறைந்த இந்தப் பகுதிகளில் பழங்குடி மக்களிடையே எவ்வாறு இயங்குகின்றனர் என்பது குறித்த விரிவான சித்திரத்தை ஆசுதோஷ் தந்திருக்கிறார். மாவோயிஸ்ட்களுடன் நெருக்கமாகப் பழகி அவர்களுடன் மாதக் கணக்கில் தங்கி, அடர்வனங்களில் பயணித்து, அவர்களின் இயக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றைச் சூழ்ந்துள்ள புகைமூட்டத்தைச் சற்றேனும் அகற்றியிருக்கிறார்.
மாவோயிஸ்ட்டுகள் மட்டுமல்லாமல் பழங்குடி மக்கள், காவல் துறையினர், காவல் துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட்டுகள், அவர்களில் காவல் துறையினரின் உளவாளிகளாக மாறி என்றைக்கும் உயிராபத்தில் இருப்பவர்கள், அமைதி வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டவர்கள், மாவோயிஸ்ட்களை ஒடுக்குவதற்காகப் பழங்குடி மக்களை வைத்து மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சல்வா ஜுடும் அமைப்பினர், மாவோயிஸ்ட்டுகள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் ரத்தமும் சதையுமாக இதில் வந்துபோகிறார்கள்.
மாவோயிஸ்ட்கள் பழங்குடி மக்களுடனும் அவர்களின் பண்பாட்டுடனும் இரண்டறக் கலந்திருப்பதை இந்த நூல் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. மூன்று தலைமுறை மாவோயிஸ்ட்கள் பழங்குடி மக்களிடையே தமது கருத்துகளை விதைத்துவிட்டார்கள். அதே நேரம், சல்வா ஜுடும் அமைப்பின் தலைவர் மகேந்திர கர்மா, அவருடைய மனைவி, வாரிசுகள் ஆகியோரைப் பற்றிய நீண்ட அத்தியாயம் மாவோயிஸ்ட்களை எதிர்க்கத் துணிந்த பழங்குடிகளுக்கு நேர்ந்த கதியை விவரிக்கிறது. அரச வன்முறையாலும் மாவோயிஸ்ட் வன்முறையாலும் உயிரிழந்தவர்கள், உறவுகளை இழந்து அனாதை ஆக்கப்பட்டவர்கள் என இந்தப் போரில் அகப்பட்ட அப்பாவிகளின் கதைகள் வந்துபோகின்றன.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் பேரர்களும் கொள்ளுப் பேரர்களும் மாவோயிஸ்ட் கெரில்லாக்கள் ஆகிவிட்டதைச் சொல்வதன் மூலம் சுதந்திர இந்தியாவின் அரசுகள் குறித்த சங்கடமான கேள்விகளை எழுப்புகிறது இந்நூல். மாவோயிஸ்ட் இயக்கத்தில் பெண்களின் பங்கேற்பு குறித்தும் அதிக அளவில் பெண்கள் பங்கேற்றால் மட்டுமே போராட்டம் நீண்ட காலத்துக்குத் தொடர முடியும் என்று மாவோயிஸ்ட்கள் நம்புவதும் அமைப்புக்குள் பெண்கள் நடத்தப்படும் விதமும் பதிவாகியுள்ளன.
தேசம், தேசிய அரசு ஆகியவை குறித்த பார்வை, இயக்கத்துக்குள் ஆண் - பெண் உறவு குறித்த கறாரான கட்டுப்பாடுகள் போன்ற விஷயங்களில் மாவோயிஸ்ட் இயக்கத்துக்கும் தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கும் ஒற்றுமை இருப்பதை நூலாசிரியர் கண்டுணர்ந்து பதிவுசெய்திருக்கிறார். இன்றைக்கு அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பும் படித்த நடுத்தரவர்க்கத்தினரை ‘அர்பன் நக்ஸல்’ என்று முத்திரை குத்தி இழிவுபடுத்தும் பாஜக, சத்தீஸ்கர் பகுதிகளில் மாவோயிஸ்ட்களுடன் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வளர்ச்சி அடைந்ததையும் நூல் பதிவுசெய்கிறது.
அரசும் காவல் துறையும் மாவோயிஸ்ட் தாக்குதல்கள், அவர்கள் கொல்லப்பட்டது ஆகியவை தொடர்பாகக் கொடுக்கும் செய்திகளில் எவ்வளவு பொய்த் தகவல்கள் இருக்கின்றன, எவ்வளவு அலட்சியத்துடன் இந்தத் தகவல்கள் கையாளப்படுகின்றன என்பதிலேயே அரசின் தார்மிகம் கேள்விக்குள்ளாகிறது. அதே நேரம், காவல் துறையினர் பத்திரிகையாளர்களுக்கு உதவுகிறார்கள். தமக்கு எதிரான செய்திகளை எழுதுவதற்கு காவல் நிலையங்களிலேயே இடமும் பிற வசதிகளும் அளிக்கிறார்கள்.
இரண்டு தரப்பின் தவறுகள், நியாயங்கள் எல்லாம் தாண்டி, சுதந்திர இந்தியாவில் மத்திய அரசும் பொதுச் சமூகமும் பழங்குடி/ஆதிவாசி மக்களுக்குக் காட்டிவரும் அலட்சியத்தையும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்காமல் அவர்கள் எதிர்கொண்ட புறக்கணிப்பைக் கூறும் அத்தியாயங்கள் நகரத்தில் வாழும் மனசாட்சியுள்ள ஒவ்வொரு குடிநபரிடமும் குற்ற உணர்வை ஏற்படுத்துபவை. நகரத்தில் எளிதாகக் கிடைக்கும் வசதிகள் பழங்குடிகள் பலரால் நம்பவே முடியாத அதிசயங்களாக இருக்கின்றன. ஊடகங்களோ அவர்களை இழிவுபடுத்தும் மொழியையே கையாள்கின்றன. அவர்கள் பண்பாட்டைப் புரிந்துகொள்ள நாம் முயல்வதேயில்லை.
தான் கண்டறிந்த உண்மைகளையும் அனுபவங்களையும் புனைவுக்கும் அல்புனைவுக்கும் இடைப்பட்ட மொழியில் ஆசுதோஷ் எழுதியிருக்கிறார். பல இடங்களில் வேதங்கள், புராணங்கள், காவியங்கள், சர்வதேச நாவல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், நூலாசிரியர் தேர்ந்துகொண்ட மொழி சில நேரம் வாசகரின் கவனத்தைத் திசைதிருப்பிவிடுகிறது. நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட நூலை வாசிப்பது போன்ற சரளத்துடன் இந்த நூலை மொழிபெயர்த்திருக்கிறார் அரவிந்தன்.
மாவோயிஸ்ட்டுகள் என்றால் தேசத்துக்கு எதிரான கொடிய தீவிரவாதிகள் என்றும் பழங்குடி மக்களை இயற்கை வளங்களையும் காக்கும் தியாகிகள் என்றும் இருவேறு எல்லைகளில் நிற்கும் சித்தரிப்புகளுக்கு மத்தியில் சமநிலைப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ள இந்த நூல் தமிழுக்கு முக்கிய வரவு.
மாவோயிஸ்ட் இயக்கத்தினர் இயற்கை வளம் நிறைந்த இந்தப் பகுதிகளில் பழங்குடி மக்களிடையே எவ்வாறு இயங்குகின்றனர் என்பது குறித்த விரிவான சித்திரத்தை ஆசுதோஷ் தந்திருக்கிறார்.
மரணத்தின் கதை
ஆசுதோஷ் பரத்வாஜ்
(தமிழில்: அரவிந்தன்)
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.430
தொடர்புக்கு: 04652 278525
- தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in