

தமிழிசை பற்றிய நவீனகால ஆராய்ச்சி நூல்களின் தொடக்கம் ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாமிருத சாகரம்’. அதனைத் தொடர்ந்து விபுலானந்த அடிகளாரின் ‘யாழ் நூல்’ தொடங்கித் தமிழிலும் ஆங்கிலத்திலும் இசை அறிஞர்களும் தமிழறிஞர்களும் விலை மதிக்கவொண்ணாப் பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
1930இல் பெரியார் ஈரோட்டில் பிராமணர் அல்லாத இசைக் கலைஞர்களின் மாநாட்டைக் கூட்டி, அவர்களின் தன்மதிப்புக்காகக் குரல் கொடுத்தார். தமிழ்நாட்டில் தமிழ்ப் பாடல்களை இசையரங்குகளில் பாட வேண்டும் என்பதற்கான இயக்கம் 1934ஆம் ஆண்டில் நீதிக்கட்சித் தலைவர் பி.டி.ராஜனால் தொடங்கப்பட்டு, ராஜாசர்.
அண்ணாமலையார் போன்றவர்களின் ஆதரவுடன் வளர்ச்சியடைந்து, 1946இல் ஆர்.கே.சண்முகம், ராஜாஜி, கல்கி, அரியக்குடி ராமானுஜர், தியாகராஜ பாகவதர் போன்றோர் பங்கேற்ற தமிழிசைச் சங்கமாக மலர்வதில் முடிந்தது. இசைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களுக்கு இடம் அளிக்கப்படாமல் இருந்ததை பாரதியாரும் கண்டனம் செய்திருக்கிறார்.
அந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக, ‘நிழல்’ ப.திருநாவுக்கரசு ‘திரை இசையில் தமிழிசை’ என்ற கலைக்களஞ்சியத்தை வழங்கியிருக்கிறார். புத்தகத்தின் தலைப்பு திரையிசையைப் பற்றியதாக மட்டுமே இருக்கும் என்று கருதவைக்கிறது. ஆனால், தொல்காப்பியரிலிருந்து சங்க காலப் புலவர்கள் வரை, திருவள்ளுவர் தொடங்கி நாயன்மார்கள், ஆழ்வார்கள் வரை தமிழிசைக்கு வழங்கிய காணிக்கைகளும் அந்த மாமனிதர்களுக்கு இருந்த இசை ஞானமும் இந்த நூலில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன்பே நாட்டார் இசையிலிருந்து செவ்வியல் இசையாக வளர்ச்சியடைந்திருந்த தமிழிசையின் பண்கள் எவ்வாறு தற்போது கர்னாடக இசை என்று அழைக்கப்படும் ராகங்களாக மாறின என்பதைப் பற்றிய அறிவார்ந்த விளக்கங்களையும் ஆதாரங்களையும் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.
இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் கலந்த ‘சிலப்பதிகார’த்தில் கானல் வரிப் பாட்டு போன்ற நாட்டார் இசைக்கு, செவ்வியல் இசைக்குத் தரப்படும் அதே முக்கியத்துவம் தரப்படுவதையும் நாட்டுபுற இசைதான் செவ்வியல் இசையின் ஊற்றுக்கண் என்பதையும் விளக்குகிறது இந்த நூல்.
நாட்டுப்புற இசையும் உழைப்பிலிருந்தே பிறந்ததைத் தக்க எடுத்துக்காட்டுகளுடன் கூறுவதன் மூலம் மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சன் ‘மனித சாரம்’ நூலில் கூறியுள்ள கருத்துகளை நினைவூட்டுகின்றது. நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படும் ராகங்கள், அவற்றில் பயன்படுத்தப்பட்ட (படும்) இசைக் கருவிகளையும் திருநாவுக்கரசு விளக்கியுள்ளார்.
ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு பொழுதுக்கும் உரிய தனித் தனிப் பண்கள் இருந்ததை எடுத்துரைக்கும் நூலாசிரியர், தமிழ்ப் பண்களுக்கு இணைப் பொருத்தமானவையாக உள்ள ‘ராக’ங்களை ஆங்காங்கே சுட்டிக்காட்டியுள்ளார். பாடலுக்கேற்பவே பண்கள் அமைக்கப்பட வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்தியதையும் நினைவுபடுத்துகிறார். பண்டைக்காலத் தமிழர்கள் புல்லாங்குழலை முதன்மைக் கருவியாகக் கொண்ட ‘ஆமந்திரிகை’யை (ஆர்கெஸ்ட்ரா) உருவாக்கியிருந்தனர் என்பது வியப்பு தரும் செய்தி.
அது மட்டுமின்றி, தமிழிசைதான் வட இந்திய இந்துஸ்தானி செவ்வியல் இசைக்கான பிறப்பிடமாக இருந்தது என்பதைக் குமரிலாயபட்டர் போன்றோரின் நூல்களை ஆதாரமாகக் கொண்டு விளக்கியுள்ள நூலாசிரியர், அரேபியா வழியாக கிரேக்கத்துக்குத் தமிழிசை சென்றதையும் கிரேக்க இசையில் தமிழ்ப் பண்களின் கூறுகள் இன்று வரை நிலவுவதையும் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கிறார்.
இந்திய ஆன்மிகத் துறைக்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ள பக்தி இயக்கம், தமிழகத்தில் தோன்றி இந்தியத் துணைக் கண்டம் முழுவதற்கும் பரவியதையும் தமிழிசை மரபை இன்றுவரை பாதுகாத்து, ஓதுவார்கள் தேவாரத்தைத் தமிழ்ப் பண்களில் பாடிவருவதையும் அதேவேளை வைணவக் கோயில்களில் ஆன்மிகத் தமிழ்ப் பாடல்கள் வேதம் ஓதுவதுபோலப் பாடப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோழர் காலத்தில் நாட்டியக் கலைஞர்களுக்கும் தமிழிசை வாணர்களுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் கூறும் இந்நூலில் நாட்டியம் பற்றிய சிற்பங்கள், தமிழிசை பற்றிய கல்வெட்டுகள் ஆகியவற்றின் ஒளிப்படங்களும் தரப்பட்டுள்ளன. அருணகிரிநாதரின் ‘திருப்புகழ்’ முழுவதுமே தமிழிசைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பதையும் அவருடைய ஆழ்ந்த இசைஞானம் வள்ளலார் வரை தொடர்ந்து நிலவியதையும் இந்த நூலின் வழி அறிந்துகொள்கிறோம்.
தமிழிசை மரபில் பாடல்களுக்கான சந்தங்களான ‘தன தன தன’ என்ற தத்தகாரங்களைக் கொடுத்து, அதற்கேற்பப் பாடும் நீண்ட காலத் தமிழிசை மரபை வளப்படுத்தியவர் அருணகிரிநாதர். அந்த மரபுதான் தற்காலத் திரைப் பாடலாசிரியர்களாலும் திரையிசை அமைப்பாளர்களாலும் பின்பற்றப்படுகிறது.
தமிழிசைக்கு, செவ்வியல் இசைக்குக் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் வழங்கியுள்ள பங்களிப்புகளைப் பதிவுசெய்யும் இந்த நூல், ‘சங்கீத மும்மூர்த்தி’களைப் போற்றிப் புகழும் கர்னாடக இசைக் கலைஞர்களில் பெரும்பாலோரால் புறக்கணிக்கப்படும், அந்த மும்மூர்த்திகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் இசை ஞானம் கொண்டிருந்த முத்துத்தாண்டவரின் பங்களிப்புகளைச் சுட்டிக்காட்டுகிறார். அதேவேளை, பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர் ஆகிய இருசாராரும் செவ்வியல் இசைக்கு வழங்கியுள்ள பங்களிப்புகளை நடுநிலையுடன் சிலாகிக்கிறார்.
மேற்கு நாடுகளைப் போலவே தமிழகத்திலும் நீண்ட காலம் செவ்வியல் இசை மதத்தோடும், மத நிறுவனங்களோடும் கட்டுண்டு கிடந்தது. அவற்றால் போற்றி வளர்க்கப்பட்டது. அதேவேளை மத்திய கால, மறுமலர்ச்சி கால ஐரோப்பாவில் உலகியல் சார்ந்த இசைப் பாடல்களும் அந்த நாட்டு மக்களின் மொழிகளில் பாடப்பட்டுவந்ததைப் போல தமிழகத்தில் உலகியல் சார்ந்த இசைப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களிலேயே இருந்து வந்துள்ளன.
கிறிஸ்துவத் திருச்சபையிலிருந்தும் அரண்மனைகளிலிருந்தும் விடுதலை பெற்று வெளியுலகுக்கு வந்த செவ்வியல் இசை, மேற்கு நாடுகளில் ஏறத்தாழ 17ஆம் நூற்றாண்டிலேயே முழு வளர்ச்சி பெற்றுப் பாடல் வரிகள் இல்லாத தூய இசையாக, ‘அருவ’ இசையாக சிம்பொனி, சொனாட்டா போன்ற வடிவங்களை மேற்கொண்டது. தமிழிசையை உலகியல்தன்மையாக்குவதில் முதன்மைப் பாத்திரம் வகித்தது திரையிசைதான்.
தொடக்க காலத் தமிழ் பேசும் படங்கள் மேடை அல்லது பார்சி நாடகங்களின் நீட்சியாகவே இருந்தன. அவற்றிலிருந்த முதன்மையான கூறுகளான இசையும் ‘விதூஷகன்’ பாத்திரமும் (நகைச்சுவை நடிகர்) இன்றுவரை தமிழ், பிறமொழித் திரைப்படங்களின் இன்றியமையாக் கூறுகளாகிவிட்டன.
தமிழ்த் திரை இசைக்கு அன்று முதல் இன்றுவரை பங்களித்த தமிழர்கள், தமிழர் அல்லாதவர்கள், அந்த இசையில் சங்கமித்துவிட்ட பல்வேறு இசை வடிவங்கள், இசைக் கருவிகள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் பற்றி நூலாசிரியர் திரட்டித் தந்துள்ள விவரங்களும் தரவுகளும் மலைக்க வைக்கின்றன.
இந்தித் திரைப்படங்களைப் போலவே தமிழ்த் திரைப்படங்களும் இன்றுவரை ‘மதச்சார்பற்ற’ விழுமியத்தைக் கொண்டுள்ளன. கர்னாடக இசையிலுள்ள அத்தனை ராகங்களும் திரைப்படங்கள் வழியாக வெகுமக்களுக்குப் போய்ச் சேர்ந்த்துள்ளதை எடுத்துரைப்பது நூலின் சிறப்புகளில் ஒன்று. இந்த நூலிலுள்ள சிறு குறைபாடுகள் அதன் கலைக்களஞ்சியத் தன்மையைச் சிறிதும் குறைத்துவிடவில்லை.
திரை இசையில் தமிழிசை
நிழல் திருநாவுக்கரசு
நிழல் புக்ஸ்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 94444 84868
- மார்க்சிய அறிஞர்; தொடர்புக்கு: sagumano@gmail.com