

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சுமதிக்கும் பண்ணையார் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்துக்கும் திருமணம் நடக்கிறது. தேச சேவையில் ஈடுபாடுகொண்டு, படிப்பை முடித்ததும் ராணுவத்தில் சேர்ந்துவிட்டாலும் விவசாயத்தைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறான் ஜெயந்த்.
ஆடை வடிவமைப்புத் துறையில் இருக்கும் சுமதி, வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு ஒரு குடும்பத் தலைவியாக மட்டும் தன்னைச் சுருக்கிக்கொள்ள முடியாது என்கிற கொள்கையோடு இருக்கிறாள். விடுமுறை முடிந்து மகனிடம் பிரியாவிடை பெற்றுச் செல்லும் ஜெயந்த், எல்லையில் ஏற்பட்ட சண்டையில் பங்கேற்கும் சூழல் உண்டாகிறது.
அப்போது டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைகிறது. சண்டையில் ஜெயந்துக்கு என்ன ஆனது, அவன் எடுத்த முடிவு என்ன என்பது நாவலின் பிரதான அம்சம். சுமதியும் ஜெயந்தும் தாயை இழந்தவர்கள். எத்தனையோ கதைகளில் அம்மாவின் இறப்பு குறித்துப் படித்தாலும் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் நெகிழ்ச்சிதான்.
கதாபாத்திரங்களுக்கு இடையில் நிகழும் சில உரையாடல்கள் ஆங்கிலத்திலும் அதற்குத் தமிழிலும் அர்த்தம் கொடுத்திருப்பது நாவலைத் தொய்வடையவைக்கிறது. டெல்லி விவசாயப் போராட்டம் எனும் முக்கிய நிகழ்வை இந்த நாவல் பதிவுசெய்துள்ள விதம் கவனிக்கத்தக்கது. - சுஜாதா
யுத்தம் என்பது… (நாவல்)
வல்லபாய்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 044 24330024
பண்பாட்டுக் கட்டுரைகள்: கவிஞராக அறியப்பெற்ற மா.ச.இளங்கோமணியைக் களஆய்வாளராக அறியத் தருகிறது இந்நூல். ‘ஒரு பெரும் தேடல், அதில் கிடைக்கும் சில தகவல் களஞ்சியங்கள், அதைச் சரியான முறையில் உருவாக்கும் பண்பு, அதன் அடிப்படையில் நமக்கு நல்ல தரமான கட்டுரைகள் உருவாகின்றன’ என்று சொல்லும் ஆய்வாளர், வெறும் தரவுகளை மட்டும் முன்வைத்து எழுதாமல், நேரடியான களப்பயணங்களையும் மேற்கொண்டுள்ளார்.
அதற்கு இக்கட்டுரைகள் சாட்சி. ‘மீசை எனும் மயிர்’, ‘பாலியல் குறித்தான தமிழ்ச் சமூக வெளி’, ‘பரோட்டா ஊடுருவலும் சமூக நிலையாக்கமும்’, ‘புடவை குறித்தான தமிழ்ச் சமூக மதிப்பு’ உள்ளிட்ட 10 கட்டுரைகளும் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களின் ஊடாக, சமூகத்தில் நிலவும் மதிப்பீடுகளையும் மனித மனங்களின் சிந்தனையோட்டங்களையும் ஒருசேர விமர்சனப் பார்வையில் அணுகி ஆய்ந்திருக்கின்றன. - மு.முருகேஷ்
காது வளர்த்தல் அல்லது
காது வடித்தல்
மா.ச.இளங்கோமணி
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.125
தொடர்புக்கு: 044 24896979
அயல் மொழி நூலகம் | தொல்காப்பியம்: ஓர் உலக இலக்கியம்
பயன்முறை மொழியியல் என்ற அறிவுத் துறையின் முதல் பனுவலாகத் தொல்காப்பியத்தைக் காணும் அரிய முயற்சி இந்த நூல். மொழியியல் என்ற உலகளாவிய அறிவியலுக்குத் தொல்காப்பியம் பெரும் கொடைகளை வழங்கியுள்ளது என்பதை இந்நூல் நிறுவுகிறது. உள்ளுறை, இறைச்சி, இயற்கையையும் மனித உணர்வுகளையும் இணைத்துப் பார்க்கிற, சூழலியல் திறனாய்வு தோன்றக் காரணமான, வேறு மொழிகளில் காணப்படாத திணைக் கவிதையியல் போன்ற இலக்கியம் சார்ந்த தொல்காப்பியத்தின் கருத்துகளையும் பின்னால் தோன்றிய பிறமொழி எடுத்துக்காட்டுகளுடன் சேர்த்து இந்த நூல் முன்வைக்கிறது.
மொழி குறித்த அணுகுமுறையில் தொல்காப்பியம் மூத்தது மட்டுமல்லாமல், எக்காலத்துக்கும் பொருத்தமுடைய புதுமையும் கொண்டது. ‘உலக இலக்கியம்’ என்று கதே அழைத்த நீடித்து நிற்கும் உயர்தனிப் படைப்புகளின் வரிசையில் இடம்பெறத்தக்கது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பிரதி என்பதை இந்த நூல் உறுதிப்படுத்துகிறது. நூலாசிரியரே மொழிபெயர்ப்பாளராகவும் அகராதிகளைத் தொகுப்பவராகவும் இருப்பதால் சுய அனுபவத்திலிருந்து எழும் இந்நூலின் வாதங்களுக்குக் கூடுதல் வலு உண்டு. கல்விப்புலப் புலமை, ஆய்வு சார்ந்து புதுப் பார்வைகளைத் தேட இந்த நூல் தூண்டும்.
- ஆர்.சிவகுமார்
அப்ளைடு லிங்க்விஸ்டிக்ஸ் ரீடிங் ஆஃப் தொல்காப்பியம்
(Applied Linguistics Readings of Tolkappiyam)
வி.முருகன்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 044-22540125