Published : 12 Nov 2017 10:48 AM
Last Updated : 12 Nov 2017 10:48 AM

அஞ்சலி: நினைவில் நீங்காத விஜயராகவன்

தினேழு வயதிலிருந்து எழுத்து, இலக்கியம் பத்திரிகை என்று வாழ்ந்த எழுத்தாளர் கா. விஜயராகவன் தமது 55 வயதில் திருவாரூரில் காலமானார். சிறுவயதிலேயே தஞ்சாவூர் கரந்தையில் ‘சோழமுரசு’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். ‘சோழமுரசு’ இதழின் பல படிகளைப் பிரதிசெய்து தஞ்சை நூலகங்களில் வாசகர் பார்வைக்கு வைத்துவிட்டுச் செல்வார். என்றாவது பத்திரிகை ஆசிரியர் ஆக வேண்டும் என்பது விஜயராகவனின் கனவாக இருந்தது. இந்தக் கனவை மறைந்த எழுத்தாளர் ராஜகுருவின் மகன் ஜெயகாந்தன் நிறைவேற்றி வைத்தார். ஜெயகாந்தன் நடத்திய ‘சிவ ஒளி’ இதழின் ஆசிரியராக விஜயராகவன் 20 ஆண்டுகள் பணிபுரிந்தார். ஜெயகாந்தன் நடத்திவரும் ‘பேசும் புதிய சக்தி’, ‘சிவ ஒளி’, ‘பொம்மி’ முதலான இதழ்களிலும் ஆசிரியர் குழுவிர் பணியாற்றினார். ‘சிவ ஒளி’ இதழின் ஆசிரியர் பக்கங்கள் விஜயராகவனின் ஆன்மிக ஞானத்தின் ஆழத்தைப் பறைசாற்றுபவை. தஞ்சை ப்ரகாஷின் இறுதிக் காலத்தில் அவரது இணைபிரியாத தோழமையாக விஜயராகவன் விளங்கினார். தஞ்சை ப்ரகாஷ் நோய்வாய்ப்பட்டு கையால் எழுத முடியாமல் போனபோது சிறுகதைகளையும் கட்டுரைகளையும் அவர் சொல்லச் சொல்ல விஜயராகவன் எழுதினார்.

காரைக்கால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தஞ்சை ப்ரகாஷின் அருகில் உட்கார்ந்து சாகித்ய அகாடமிக்காக க.நா.சு. பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை அவர் சொல்லச் சொல்ல விஜயராகவன்தான் எழுதினார்; பிரதியைச் செம்மைப்படுத்தினார். தஞ்சை ப்ரகாஷின் முக்கியமான நூல்களுள் ஒன்றாக அது விளங்குகிறது. தஞ்சை ப்ரகாஷ் எழுத உத்தேசித்திருந்த, தஞ்சையின் 300 ஆண்டுகால வரலாற்றைப் பேசும் நாவலை எழுதுவதற்கு தஞ்சை வட்டாரங்களில் அலைந்து திரிந்து குறிப்புகள் சேகரிக்க தஞ்சை ப்ரகாஷுக்கு விஜயராகவன் உதவினார். தஞ்சை ப்ரகாஷ் பற்றிய அரிய தகவல்கள், வாழ்க்கைச் சம்பவங்களை சுவையாகச் சொல்லத் தெரிந்தவர் விஜயராகவன். தனது சிற்றிதழ் பணிகளாலும் தஞ்சை ப்ரகாஷுக்கு உறுதுணையாக இருந்த வகையிலும் விஜயராகவனின் நினைவு நம்மை விட்டு என்றும் நீங்காது.

- கோபாலி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x