

கைவினை கலைஞர்கள் அனைவரும் ஒருவழியில் போனால், பூமாதேவியோ தனிவழியில் செல்வார். அதுதான் அவரைச் சிறந்த படைப்பாளியாக அடையாளப்படுத்துகிறது. கண் பார்ப்பதை கைசெய்து விடுகிற வித்தை தெரிந்துவைத்திருக்கிறார் பூமா. வேண்டாம் என தூக்கி எறிகிற பொருட்களைக்கூட அழகிய கலைப்பொருளாக உருவாக்கிவிடுகிறார்.
பூமாதேவியின் ஆர்ட் அண்ட் கிராஃப்ட் ஸ்கூலில் ஆறு முதல் அறுபது வயது வரை மாணவர்கள் இருப்பதே இவரது திறமைக்கு சாட்சி. ‘வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்த சிறுமிதான் நானும். பாடம் பிடிக்காமல் படம் வரையத் துவங்கினேன். இன்று கைவினை கலைகள் கற்றுத்தரும் ஆசிரியராக இருக்கிறேன்’ என்கிறார் பூமாதேவி. கிட்டத்தட்ட 300 வகையான கைவினை கலைகளைக் கற்று வைத்திருக்கும் இவர், தற்போது 3டி மியூரல் பெயிண்ட்டிங்கில் தடம் பதித்து வருகிறார். இவர் கைத்திறனில் உருவான கலைப்பொருட்கள் திருமணம், பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களின் போது பரிசுப்பொருட்களாக வழங்கப்படுகின்றன. ஹோட்டல்களின் வரவேற்பறைகளையும் இவரது படங்கள் அலங்கரிக்கின்றன. அழகுக்காக இல்லாமல் அன்றாடத் தேவைகளை மையமாக வைத்தே இவரது கலைப்படைப்புகள் இருப்பதால் எங்கேயும் எப்போதும் வரவேற்பு இருக்கிறது.