Published : 18 Nov 2017 11:27 AM
Last Updated : 18 Nov 2017 11:27 AM

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்

மா

ர்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக இருக்கும், எழுத்தாளர் குமார செல்வாவின் சொந்த ஊர் மார்த்தாண்டம். இப்போது அம்சி அருகே உள்ள வழுதூரில் வசித்துவருகிறார். ‘கய்த முள்’, ‘உக்கிலு’, ‘கயம்’, ‘குன்னிமுத்து’, ‘தலையோடுகள்’ என இவரது படைப்புலகம் விளவங்கோட்டு மக்களின் வாழ்க்கைக் கூறுகளைக் காட்டும் கண்ணாடி. தமிழகமும் கேரளமும் ஒன்றுகூடுவதைக் காட்டும் வகையிலான நிலப்பரப்பு, காணும் இடங்களிலெல்லாம் நீர்நிலைகள், தென்னை, ரப்பர் மரங்கள், ஆங்காங்கே தானாகவே ஊறிக்கொண்டிருக்கும் ஊற்றுநீர் என்று அழகான கிராமத்தில் குமார செல்வாவைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

எப்போது எழுதத் தொடங்கினீர்கள்?

என் அப்பா செல்லய்யன் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். நானும், தம்பி நேசகுமாருமாக வீட்டில் இரண்டு பையன்கள்தான். அப்பா திடீரென்று இறந்துவிட்டார். என் அம்மா செல்லத்தாய், தேவலாயத்தில் ஊழியம் செய்துதான் எங்களை வளர்த்தார். அம்மா ஊழியம் செய்யப் போகும்போது எனக்கு நீண்ட தனிமை வீட்டில் கிடைச்சுது. அதைத் தீர்க்க இலக்கியம் கிடைத்தது. இலக்கியமும், எழுத்தும் இல்லை என்றால் அப்போதே எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். அப்போதே எழுதத் தொடங்கிவிட்டேன். கவிதை வாயிலாகத்தான் என் எண்ணங்களை முதலில் வெளிப்படுத்தினேன்.

எழுத்துலகில் முதல் அங்கீகாரம் எப்போது கிடைத்தது?

ஒரு பேருந்துப் பயணத்தில் அறிமுகமாகி நெருக்கமான நண்பர் ஆனவர் டி.என்.அன்பழகன். அவர்தான் என்னை சுந்தர ராமசாமியிடம் அழைத்துப் போனார். அது 1981-ம் ஆண்டு. அப்போது நான் வானம்பாடி குழுவில் இருந்தவர்களைப் போல் மரபுக் கவிதைகளை எழுதினேன். சுந்தர ராமசாமிதான் என்னிடம், ‘உனது கவிதையை நீயே எழுது’ என்றார். பின்பு நகுலன், நீல.பத்மநாபன், கோவை ஞானி, வீ.அரசு, அ.மார்க்ஸ் இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கருத்தியல், படைப்புரீதியாக என்னைப் பாதித்தவர்கள். என்னு டைய 24 வயதில் ‘கயித முள்’ வெளியானது. ‘உக்கிலு’ தொகுப்புக்கு லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது, ‘கயம்’ தொகுப்புக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது, ‘குன்னிமுத்து’வுக்கு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, 2013-ல் விகடனின் சிறந்த நாவல் விருது போன்ற விருதுகள் கிடைத்திருக்கின்றன.

உங்கள் ‘கய்த முள்’ தொகுப்பு ஒருவகையில் வட்டார கவிதை நூல்களுக்கான தொடக்கப்புள்ளி அல்லவா?

அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹெச்.ஜி. ரசூல், என்.டி.ராஜ்குமார், நட.சிவக்குமார், தாணு பிச்சையா, ஜி.எஸ்.தயாளன், சிவசங்கர், சுதந்திரவள்ளி என நீண்டுகொண்டே போகிறது பட்டியல். சமூகத்தின் வெவ்வேறு அடுக்கைச் சேர்ந்த இவர்களின் வாழ்க்கை யின் உள்ளடக்கம் கவிதைகளிலும் எதிரொலித்தது.

கவிதை, சிறுகதை, நாவல் என்று மூன்று தளங்களிலும் பயணிக்கிறீர்கள். உங்களுக்கு பிடித்தது எது?

கவிதைதான். ஆனால், சமூக மாற்றத்துக்கு சில விசயங்களை கவிதை இல்லாத பாணியிலும் சொல்ல வேண்டியுள்ளது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருப்பவர்ளுக்கே, உங்கள் விளவங்கோடு மொழி நடை சிரமமாக இருக்கிறதே!

தஞ்சை பல்கலைக்கழகம் சங்க இலக்கியப் பொருள் களஞ்சியத்தைத் தொகுத்துள்ளது. அதில் ஒரு இடத்தில் ‘கயிதை’ என்பதைத் தொகுப்பாளர் ‘தாழை’ என்று சொல்லியுள்ளார். ஆனால், விளவங்கோட்டில் குழந்தைக்குக்கூடத் தெரியும். கயிதை வேறு, தாழை வேறு என. இரண்டும் வேறு வேறு பூ இனங்கள். மலைபடுகடாமில் வரும் ‘ஆசினி முதுசுளை கலாவ’ என்பதில் ஆசினியை தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியம் ஈரப் பலா என்கிறார். ஆனால், அது அயனி மரம் என்று விளவங் கோடு மக்களுக்குத் தெரியும்.

அம்மா, ஆயீ, ஆத்தா எல்லாமே வேறு வேறு. இதை அம்மா என ஒரே வார்த்தையில் சொல்லவும் கூடாது என எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் சொன்னதையும் இதில் கவனிக்க வேண்டும். வட்டார மொழி என்பது பண்பாட்டின் சேமிப்புக் களம். யாழ்ப்பாணத் தமிழும், எங்கள் விளவங்கோடு தமிழும் ஒரே மாதிரி இருக்கும்.

கல்லூரிப் பேராசிரியர்களிடம் இன்று வாசிப்புப் பழக்கம் குறைந்துள்ளதுதானே?

நிச்சயமாக. ஒரு கல்லூரிக்குத் திடீர் விஜயம் செய்து, புத்தகங்களை வையுங்கள். எத்தனை பேராசிரியர்கள் ஆர்வத்தோடு வந்து புத்தகம் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.

பாடத்திட்டம் என்பது ஒருவழிப் பாதை. அதை உதறிவிட்டு வெளியே வந்து படித்தால்தான், பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களே புரியும். வீட்டில் சாப்பாடு சரி இல்லை என்றால் வெளியில் ஓட்டலில் போய்ச் சாப்பிடுவதைப் போல, பாடத்திட்டங்கள் சரியாக இல்லையென்றால் வேறு வழியும் இதுதான்.

ஒரு பல்கலைக்கழகம் தலித்தியம் தொடர்பான பாடத்தை நீக்கியபோது நீங்கள் போராடிச் சேர்த்தீர்கள் அல்லவா?

ஆமாம்… இங்கு தலித்தியத்தைக் கற்பிக்க வேண்டிய நோக்கம் நிறைவேறிவிட்டதா என்ன? அதனை நிறுத்திவிட! என் பள்ளிப் பருவத்திலேயே அப்பா இறந்துவிட்டதால், அம்மா ஊழியம் செய்யச் செல்வார் என்றேன் அல்லவா? ஊழியம் மட்டுமல்ல, சாவு வீடுகளுக்குப் பாடவும் செல்வார்.

எல்லாம் எங்களை வளர்க்கத்தானே? பிறப்பினால் இல்லாவிட்டாலும் வாழும் சூழலி னால் தலித் மக்களின் வேதனையையும் வலியையும் புரிந்துகொண்டவன் நான்.

இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

தெற்கெல்லைப் போராட்டத்தில் புதுக்கடை துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மையப்படுத்தி ஒரு நாவல், உலகமயமாக்கல் சிக்கலை மையப்படுத்தி ‘எலிப்பொறிக்குள் பூமி உருண்டை’ என்னும் கவிதை தொகுப்பு இரண்டு பணிகளையும் தொடங்கியுள்ளேன்.

எதுவாக இருந்தாலும் எங்கள் மக்களின் வாழ்க்கையை அவர்களின் அசலான மொழியில் தொடர்ந்து தந்துகொண்டிருப்பேன்.

- என். சுவாமிநாதன்,

தொடர்புக்கு: swaminathan.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x