Published : 04 Nov 2017 09:55 AM
Last Updated : 04 Nov 2017 09:55 AM

பொருளாதார நூல்கள் பெருகட்டும்!

டம் ஸ்மித் என்ற ஸ்காட்லாந்து அறிஞர், உலகில் சில நாடுகள் மட்டும் பணக்கார நாடுகளாக இருப்பது எப்படி என்று ஆராய்ந்து ‘அன் இன்க்வைரி இண்டூ த நேச்சர் அண்டு காஸஸ் ஆஃப் த வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’ என்ற முன்னோடியான பொருளாதார நூலை 1776-ல் எழுதினார். அதைத் தொடர்ந்து, பொருளாதாரம் சார்ந்து மேலை நாட்டு மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் ஏராளமான பொருளாதார நூல்கள் எழுதப்பட்டன. ஆனால், இந்திய மொழிகளின் நிலைக்கு ஏற்ப தமிழிலும் சுயமான பொருளாதார நூல்கள் மிகமிகக் குறைவு. உலகப் புகழ்பெற்ற பொருளாதார நூல்களின் மொழிபெயர்ப்புகளும் தமிழில் மிகக் குறைவாகவே வெளியாகியிருக்கின்றன. பொருளாதாரம் சார்ந்து அறிஞர் கள் நம் மொழியில் சுயமாக எழுதுவது மிகக் குறைவாக இருப்பதும் பொருளாதாரம் சார்ந்து தமிழில் எழுதப்படும் பெரும்பாலான நூல்களும் கட்டுரைகளும் வாசிப்புக்கு இலகுவாக இல்லாததும் முக்கியமான காரணங்கள்.

பொருளாதாரச் சிந்தனைக்கு இங்கு வரலாறு இல்லாமல் இல்லை. நாடாளுமன்றத்தில் வருடாந்திர வரவு - செலவு கணக்கைத் தாக்கல் செய்தபோதெல்லாம் அந்நாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் பொருத்தமான திருக்குறள்களைக் கூறி வள்ளுவரும் பொருளாதார அறிஞர்தான் என்று வடக்கிந்தியர்களுக்கு உணர்த்தினார். ஆக, தமிழில் பொருளாதாரச் சிந்தனைக்குக் காத்திரமான வரலாற்றுத் தொடர்ச்சி இல்லாமல் போனதுதான் பிரச்சினை.

இந்திய நாட்டின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தொடங்கி டி.டி.கிருஷ்ணமாசாரி, சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன் என்று பலரும் அரசியல் தளத்தில் தங்களுடைய பொருளாதார அறிவை வெளிப்படுத்தியுள்ளனர். காந்தியவாதி ஜே.சி.குமரப்பா, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்கள் ரங்கராஜன், ரகுராம் ராஜன் போன்றோர் அரசியல் உலகம் அறிந்த பொருளாதார அறிஞர்கள். தமிழக முதல்வர்களிலேயே சி.என்.அண்ணாதுரை மட்டும்தான் பொருளியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரப் படிப்பு இன்னமும்கூட தமிழர்களிடையே சரியாகச் சென்றுசேரவில்லை. பேராசிரியர்களும் ஆய்வறிஞர்களும் தமிழ்ச் சமூகத்தில் கணிசமாக இருந்தாலும் அந்தத் துறையில் எளிமையான நூல்கள் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்படவில்லை.

எனினும், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகிய இரண்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகு பொருளாதாரம் சார்ந்த ஏராளமான கட்டுரைகளும் நூல்களும் வர ஆரம்பித்தது ஆரோக்கியமான மாற்றம். இந்த நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியவர்களில் எத்தனை பேர் ஆழமான பொருளாதார அறிவு கொண்டவர் கள் என்ற கேள்வி எழுந்தாலும் முதலில் இந்த மாற்றமே வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

கூடவே, உலகின் மகத்தான பொருளாதாரத் தத்துவ அறிஞர்களுள் ஒருவரான கார்ல் மார்க்ஸின் 200-வது ஆண்டு, அவரின் ‘மூலதனம்’ வெளியான 150-வது ஆண்டு, ரஷ்யப் புரட்சியின் 100-வது ஆண்டு ஆகியவற்றை ஒட்டி அவரது நூல்கள் தமிழில் மறுபதிப்பு கண்டுவருகின்றன. தமிழ் அறிவுலகில் பொருளாதார நூல்களின் பெருக்கத்துக்கு இவை யாவும் வித்திடும் என்று நம்புவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x