

கோவை விஜயா வாசகர் வட்டம் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கிவரும் ‘கி.ரா. விருது’ இந்த ஆண்டு மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.வி.ஆர்., மார்க்சியம், பெரியாரியம் தொடர்பாகவும் பல குறிப்பிடத்தகுந்த நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பிரெஞ்சு அறிஞர் ழான் பால் சார்த்தரின் ‘இருத்தலியம்’ தொடர்பாகக் கட்டுரைகள் எழுதியுள்ளார். ரஷ்யக் கவிஞர் அன்னா அக்மதோவா கவிதைகளை வ.கீதாவுடன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார். மனித உரிமைச் செயற்பாட்டாளராக செயல்பட்டுள்ளார்.
விருதுக்குப் பரிந்துரைகள்: ராஜபாளையம் மணிமேகலை மன்றம், நாவல், சிறுகதை, கவிதை, மொழியாக்கம், சிறார் இலக்கியம் ஆகிய பிரிவுகளில் இந்த ஆண்டு இலக்கிய விருதுகளை அளிக்கவுள்ளது. அதற்காகப் பரிந்துரை நூல்களை வரவேற்கிறது. மேற்கண்ட பிரிவுகளில் 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் முதற்பதிப்பு வந்த நூல்கள் மட்டுமே அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கொ.மா.கோதண்டம், மணிமேகலை மன்றம், 146/1, குறிஞ்சி தெரு, முத்து நகர், ராஜபாளையம்-626108. அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 31.08.2023
பிடிஎஸ் இசைக் குழு புத்தகம்: உலகப் புகழ்பெற்ற தென் கொரிய இசைக் குழு பிடிஎஸ். இந்தியாவில் இளம் தலைமுறைக்கு விருப்பமான பாடல்களை உருவாக்கியவர்களும் இவர்களே. இந்தக் குழுவின் 10 ஆண்டுப் பயணம் குறித்து தென் கொரியப் பத்திரிகையாளார் மியோங்சோக் காங் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
வஸ்லின் ஜங், கிளேர் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் இணைந்து ‘Beyond the Story: 10-Year Record of BTS' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். உலக அளவில் அதிகம் விற்பனையாகும் நூல் என ‘நியூயார்க் டைம்ஸ்’ இந்தப் புத்தகத்தைப் பட்டியலிட்டுள்ளது.