Published : 25 Nov 2017 10:10 AM
Last Updated : 25 Nov 2017 10:10 AM

மின்னூல் யுகம் உங்களை வரவேற்கிறது!

சில நாட்களுக்கு முன்பு இதழ்கள் விநியோகிப்பாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் புலம்பித் தள்ளிவிட்டார். பரவலாக எல்லோரும் கைபேசியில் இணையவசதியைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு பல பருவ இதழ்களின் விற்பனை மூன்றில் இரண்டு பங்கு குறைந்துவிட்டதாகக் குறைபட்டுக்கொண்டார். எத்தனை வேகமாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காண ஆச்சரியமாக இருக்கிறது.

இதழ்களுக்கே இந்த நிலையென்றால் புத்தகங்களின் கதி எதிர்காலத்தில் என்னவாகும் என்று யோசித்துப் பார்க்கிறேன். வாசிப்பு என்றால் அதைக் காகிதத்தில் பார்த்துப் பழகிய மக்கள், தங்களை அறியாமலேயே டிஜிட்டல் உலகத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். சில வருடங்களில், டிஜிட்டல் ஊடகத்திலேயே முழுவதும் வாசிக்கும் இளம் தலைமுறையினர் வந்துவிடுவார்கள். அவர்கள், அச்சுப் புத்தகங்களை விட கைபேசியில் அல்லது வாசிப்பதற்கென்றே விற்கப்படும் இ-ரீடர் (e-Reader) போன்ற உபகரணங்களை நோக்கிச் செல்லக் கூடும்.

அமேசான் பத்து வருடங்களுக்கு முன்பு இ-ரீடரை அறிமுகம் செய்தது. ரூ. 6,000 தொடங்கி ரூ. 22,000 வரை விலை. இதில் லட்சக்கணக்கான மின்னூல்களை சேமித்துக்கொள்ளலாம். இ-ரீடரில் பின்னணி மென்மையான முட்டையோடு நிறத்தில் கண்ணைச் உறுத்தாத நிறத்தில் இருக்கும். எழுத்துகளின் அளவை மாற்றிக்கொள்ளலாம். தொடுதிரை வசதி கொண்டது. புத்தகத்தில் இருப்பதைப் போன்ற எழுத்துக்களுடன் வடிவமைக்கப்பட்டது. இதில் புத்தகங்கள், அகராதி தவிர வேறு எந்த நிரலியும் கிடையாதாகையால் தொந்தரவில்லாமல் வாசிக்க முடியும். நாம் வாசிக்கும் வேகத்தை வைத்து எவ்வளவு சதவீதம் வாசித்திருக்கிறோம், வாசித்து முடிக்க எத்தனை நாட்களாகும் என்ற தகவலையும் கொடுக்கும். ஒருமுறை மின்னேற்றம் செய்துகொண்டால் ஒருவாரம் வரைக்கும் தாங்கும். வை-ஃபை வசதியும் உண்டு.

அமேசான் தனது தளத்தில் புத்தகங்களை மின்னூலாகவும் விற்பனை செய்கிறது. யார் வேண்டுமானாலும் அமேசானின் kdp.amazon.com என்ற தளத்துக்குச் சென்று தாங்கள் எழுதிய புத்தகத்தை மின்னூலாகப் பதிப்பிக்கலாம். கட்டணம் எதுவும் கிடையாது. பிரசுர உரிமையும் எழுத்தாளரிடமே இருக்கும். அமேசானில் தேவைக்கேற்ப பதிப்பித்தலும் (பிரிண்ட் ஆன் டிமாண்ட்) உண்டு. ஆனால், இந்த வசதி அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்தியாவிலும் இந்த வசதி வந்துவிட்டால், எழுத்தாளர்கள் அமேசானிலேயே தங்கள் புத்தகங்களைப் பதிப்பிப்பதை விரும்பக் கூடும். காரணம், அமேசான் புத்தக விற்பனையில் 40%-த்தைத் தனது லாபமாக எடுத்துக்கொண்டு, மீதி 60%-த்தில், பதிப்பிக்க ஆகும் செலவு, வரி போக மீதியை உரிமைத் தொகையாகக் கொடுக்கிறது.

மின்னூலுக்கு 35% மற்றும் 70% என இரண்டு திட்டங்கள் உள்ளன. வாசகர்களுக்கு இரண்டு விதமான சலுகைகளை வழங்க அமேசான் அனுமதிக்கிறது. ஒன்று, ஏதேனும் குறிப்பிட்ட ஐந்து நாட்களுக்கு மின்னூல்களை யார் வேண்டுமானாலும் இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம். இரண்டு, விற்பனை விலையில் சலுகை.

2015-ல் அமேசான் ‘கிண்டில் அன்லிமிடெட்’ என்ற மின்னூல் நூலக வசதியை அறிமுகப்படுத்தியது. மாதச் சந்தா ரூ. 199 கட்டி, வேண்டிய புத்தகங்களை மின்னூலாக வாசிக்கலாம். கிண்டில் பதிப்பாகப் புத்தகம் வெளியிடும் எழுத்தாளருக்கு அவருடைய புத்தகத்தை மின்னூல் நூலகத்தில் வைக்க விருப்பம் தெரிவித்தால், வாசிக்கப்படும் ஒவ்வொரு பக்கத்துக்கும் அவருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும். (ஒரே நபர், ஒரே புத்தகத்தைத் திரும்பத் திரும்ப வாசிப்பது கணக்கில் சேராது).

தமிழ்ப் பதிப்பகங்கள் சமீப ஆண்டுகளில் மின்னூலாகவும் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. தற்போது, சுமார் 1,600 தமிழ் நூல்கள் கிண்டில் பதிப்பாகக் கிடைக்கின்றன. கிழக்குப் பதிப்பகம், விகடன் பிரசுரம், புஸ்தகா டிஜிட்டல் மீடியா போன்ற பதிப்பகங்களின் வெளியீடுகளைத்தான் கிண்டிலில் அதிகம் பார்க்க முடிகிறது. இதில் புஸ்தகா மீடியா தனியார் நூலகமாக பெங்களூரில் தொடங்கப்பட்டு, பின் மின்னூல் பதிப்பில் இறங்கியுள்ளது. இவர்களது தளத்திலும் மின்னூல்கள் விற்பனைக்கும் இரவலுக்கும் கிடைக்கின்றன. எழுத்தாளர்கள் ஜெயமோகனின் 43 நூல்கள், பா.ராகவனின் 41 நூல்கள், இந்திரா சௌந்தரராஜனின் 48 நூல்கள், எஸ்.ராமகிருஷ்ணனின் 6 நூல்கள் கிண்டில் வடிவில் கிடைக்கின்றன. சமீபத்தில் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் ஃபேஸ்புக் நண்பர்கள் சிலரின் உதவியுடன் கவிஞர் விக்ரமாதித்யனின் கவிதைத் தொகுப்புகளை கிண்டிலாகக் கொண்டுவருவதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். தற்போது விக்ரமாதித்யனின் 4 புத்தகங்கள் கிண்டிலில் வந்துவிட்டன. விமலாதித்த மாமல்லனின் படைப்புகளும் கிண்டிலில் கிடைக்கின்றன.

ஒரு புத்தகத்தைக் கையில் தொட்டெடுத்து வாசிக்கும் போது புத்தகத்துக்கும் அல்லது எழுத்தாளருக்கும் வாசகருக்கும் தோன்றும் நெருக்கம் என்னவோ மின்னூலில் கிடைப்பது இல்லை என்பது அச்சுப் புத்தககக் காதலர்களின் உணர்வு. ஒருவேளை அடுத்த தலைமுறைக்கு இப்படித் தோன்றாமல் போகலாம். ஆகவே, பதிப்பகங்களும் எழுத்தாளர்களும் புத்தகமாக வெளியிடும்போதே மின்னூலாகக் கொண்டுவருவதையும் கவனத்தில் கொள்வது நலம்.

விக்ரமாதித்யனும் விமலாதித்த மாமல்லனும்

தன்னுடைய நூல்கள் மட்டுமல்லாமல் தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவரான விக்ரமாதித்யனின் புத்தகங்களையும் நண்பர்களின் உதவியோடு மின்னூலாக அமேஸானில் வெளியிட்டுவருகிறார் விமலாதித்த மாமல்லன். ‘ஏன் விக்ரமாதித்யன்?’ என்று கேட்டால், “ஆரம்ப காலத்தில் எனது ஒரு பக்கக் கதையொன்று வெளியாகியிருந்தது. அதைப் பார்த்துவிட்டு புதுமைப்பித்தனைக்கூடப் படிக்காமல் எழுத வந்துவிடுகிறீர்கள் என்று என்னைக் கடிந்துகொண்டவரே விக்ரமாதித்யன்தான். ஒரே கதையோடு நிறுத்திவிட்டு, ஒரு வருட காலம் நவீன இலக்கியப் படைப்பாளிகள் அனைவரையும் தீவிரமாகப் படிக்கத் தொடங்கினேன்.

1981-ல் திரும்ப எழுதத் தொடங்கியபோது என் எழுத்து தி.ஜானகிராமன் பாராட்டும் அளவுக்குத் தரம் கூடி இருந்தது. இதற்காக விக்ரமாதித்யனுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்கிறார் விமலாதித்த மாமல்லன். தட்டச்சு செய்தல் போன்ற உதவிகளைச் செய்வதற்கு நீ, நான் என்று போட்டிபோட்டுப் பலரும் பங்கெடுத்திருக்கிறார்கள். வரவேற்பைப் பற்றிக் கேட்டால், “இந்த மாதம் 10-ம் தேதிதான் விக்ரமாதித்யனின் முதல் புத்தகம் மின்னூலாக வெளியிடப்பட்டது. அதற்குள் 18 மின்பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

வெளிநாடுகளிலெல்லாம் படித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2,000 பக்கங்கள் படிக்கப்பட்டிருக்கின்றன. மேற்கொண்டு இதுபோன்ற காரியங்களை முன்னெடுக்க இது தெம்பைக் கொடுத்திருக்கிறது” என்கிறார் விமலாதித்த மாமல்லன்.

- பாலா கருப்பசாமி, கவிஞர்
தொடர்புக்கு: balain501@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x