Published : 04 Nov 2017 09:59 AM
Last Updated : 04 Nov 2017 09:59 AM

சிற்றிதழ் பார்வை: மணல் வீடு

தொல்கலைகளின் தொடர்பதிவு

சேலம் மாவட்டம் ஏர்வாடி கிராமத்திலிருந்து வெளிவரும் ‘மணல் வீடு’ இதழ், நவீன இலக்கியப் படைப்பாக்கங்களுடன், நாட்டார் நிகழ்த்துக்கலைகள் பற்றி தொடர்ந்து கவனப்படுத்திவருகிறது. கூத்து உள்ளிட்ட மரபார்ந்த தொல்கலைகள் குறித்தும் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கலைஞர்கள் குறித்தும் தொடர்ந்து இந்த இதழ் பதிவுசெய்து வருகிறது.

சமீபத்தில் வெளிவந்துள்ள 30&31-வது இதழ், மத்திய அரசு நடத்திவரும் நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய அகாடமி ஆகிய நிறுவனங்கள் தமிழில் பதிப்பிக்கும் நூல்களின் எண்ணிக்கை குறைந்துவருவதைச் சுட்டிக்காட்டி, பதிப்பு எண்ணிக்கையை உயர்த்த தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடி குரல்கொடுக்க வேண்டும் என்று கோருகிறது. பிரதேசவாரியான கலை, இலக்கிய, பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கவும் சிறுபத்திரிகைகள் அவசியம் என்பதை வலியுறுத்தியிருப்பதோடு, அதை வெளிப்படுத்தும் வகையில், கூத்துக் கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் பற்றிய பதிவொன்றும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.

அதைப் போலவே நிகழ்த்துக்கலைகள் பற்றிய நவீன பார்வைகளையும் இந்த இதழ் தவறவிட்டுவிடவில்லை. ரஷ்ய நாடகக் கலைஞர் ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புக் கலை முறையியல் பற்றி சோனியாமூர் எழுதிய நூல், நாடகத் துறைப் பேராசிரியர் மு.இராமசாமி மொழிபெயர்ப்பில் தொடராக வந்துகொண்டிருக்கிறது. அத்தொடரில் உடல்மொழிக்கும் மன உணர்வுகளுக்குமான பிணைப்பை விளக்குவதற்கு, கதவைத் திறப்பதைப் பற்றிய உதாரணத்தைக் கையாண்டிருக்கும் விதம் சிறப்பு.

உரைநடைக்கவிதைகளின் முன்னோடிகளைப் பற்றிய எளிய அறிமுகத்தோடு மைக்கேல் ஒண்டாட்ஜியின் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார் பிரம்மராஜன். மேலும், கற்சுறா எழுதிய ‘நடுக்களம்’ என்ற நாடகப் பிரதி, அம்பை, அழகிய பெரியவன் ஆகியோரின் நெடுங்கதைகள், சுதாகர் கத்தக், ஜீ.முருகன் வா.மு.கோமு ஆகியோரின் சிறுகதைகள், 15 கவிஞர்களின் கவிதைகள் இந்த இதழில் பிரசுரமாகியுள்ளன. மொழிபெயர்ப்புக் கதைகளும் சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.

- புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x