

‘நம் உலகில் நம்மோடு வாழ்பவர்கள்தாம் என்றாலும் பழங்குடிச் சமூகங்கள் குறித்து நமக்குக் குறைந்தபட்ச அறிமுகம்கூட இல்லை’ என்கிறார் பல்துறை ஆய்வாளர் கணேஷ் தேவி. காடுகளில் வாழும் பழங்குடிகளைப் பற்றி நமக்குச் சரியான புரிதல் இல்லை. அப்படி ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வி வி.கட்டிமனி. கர்நாடகத்தில் பிறந்து, இந்தி மொழிப் பேராசிரியரானவர். மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், கல்வி சார்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 2014ஆம் ஆண்டு இந்திரா காந்தி தேசியப் பழங்குடி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டவர்.
ஒரு சிறந்த மனிதருக்குத் தகுதியான பொறுப்பு அளிக்கப்படும்போது, அவரால் சமூகமே அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார் கட்டிமனி. தற்போது ஆந்திரத்தின் மத்தியப் பழங்குடிப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருக்கும் இவர், மத்தியப் பிரதேசத்தின் அமரகண்டக இந்திரா காந்தி தேசியப் பழங்குடிப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றிய அனுபவங்களை, ‘பழங்குடி துணைவேந்தரின் போராட்டங்கள்’ என்கிற பெயரில் நூலாக எழுதியிருக்கிறார்.
ஒரு துணைவேந்தருக்கு இருக்கும் அதிகாரமும் செல்வாக்கும் மரியாதையும் என்னவென்று நமக்குத் தெரியும். ஆனால், தேசியப் பழங்குடிப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தபோது, அவர் தங்கும் அறை அவ்வளவு அசுத்தமாக இருந்திருக்கிறது. அதையெல்லாம் பொருள்படுத்தாமல் அவர் பணிசெய்துள்ளார்.
தன் முதல் பணியாகக் குப்பைகளை அகற்றுதலை எடுத்துக்கொண்டார். கழிவு மேலாண்மை நிபுணர்களின் வழிகாட்டுதலோடு பல்கலைக்கழகத்தைத் தூய்மையாக் கினார். தினமும் விடியற்காலை துணைவேந்தரும் அவர் மனைவியும் குப்பை பெருக்குவதை இந்திப் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. அடுத்துத் தண்ணீர்ப் பிரச்சினை. பெங்களூருவின் மழைநீர் மனிதரைத் தொடர்புகொண்டு, அவரது வழிகாட்டலில் மழைநீர்ச் சேமிப்பு, தடுப்பணைகள் போன்றவற்றை உருவாக்கி, தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்துவைத்தார்.
373 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் பல்கலைக் கழக வளாகத்தில் சொற்ப மரங்களே இருந்ததைக் கண்டு, தன் பதவிக் காலத்துக்குள் ஒரு வனத்தை உருவாக்கிவிட வேண்டும் என்று செயலில் இறங்கினார். இவர் செடிகளை நட்டுக்கொண்டே இருக்க, யாரோ ஒருவர் அதைப் பிடுங்கிக்கொண்டே இருந்திருக்கிறார்.
அவர் ஓர் அதிகாரி என்பதை அறிந்ததும், மறுநாள் அவர் கைகளால் ஐந்து மரங்களை நடச் சொல்லி, ‘அவற்றை வளர்க்கும் பொறுப்பு உங்களுடையது’ என்று கட்டிமனி கூறியதிலிருந்து எந்தச் செடியும் உயிரிழக்கவில்லை. தற்போது பல்கலைக்கழக வளாகம், 35 ஆயிரம் மரம், செடிகள் கொண்ட ஒரு வனமாக இருக்கிறது.
மூலிகைத் தாவரம், வேளாண்மை, விளையாட்டுத் திடல், நூலகம் என்று அடுத்தடுத்து செயலில் இறங்கி, தான் நினைத்ததைச் செய்து முடித்திருக்கிறார் கட்டிமனி. பழங்குடிகளும் ஏழைகளும் மற்றவர்களுக்குத் தொண்டு செய்யவே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற கருத்து பெரும்பாலானோரிடம் இருக்கிறது.
அதனால்தான் அவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறார்கள், மனிதாபிமானம் இல்லாமல் நடத்துகிறார்கள் என்று சொல்கிறார் கட்டிமனி. அவர்களுக்குப் பல்வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, முறையான ஊதியம் கிடைக்கவும் வழிசெய்திருக்கிறார்.
ஏகலவ்யா மழலையர் பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளியை ஆரம்பித்து, பழங்குடி மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டியிருக்கிறார். இதனால் பலரும் தங்கள் வீட்டு வேலைகளுக்கு ஆள் கிடைக்கவில்லை என்று கட்டிமனி மீது கடுங்கோபத்தில் இருந்திருக்கிறார்கள்.
குறுகிய காலத்துக்குள் இவ்வளவு பணிகளை ஒருவர் சிறப்பாகச் செய்ததை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஏழாம் வகுப்பு வரை மாடு மேய்த்துக்கொண்டும் களை எடுத்துக்கொண்டும் இருந்த ஒரு சிறுவன், இன்று நாட்டின் முக்கியமான பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியிருக்கிறார் என்பது வாசகருக்கு அவரை நெருக்கமானவராக்குகிறது.
ஆதிவாசி துணைவேந்தர், கறுப்பானவர், நாகரிகம் இல்லாதவர், ஆங்கிலம் தெரியாதவர், எங்களுக்குத் தொண்டு செய்யும் சாதியைச் சேர்ந்தவர், வலு இல்லாதவர், ஏழ்மையில் இருந்து வந்ததால் ஊழல் செய்யாமல் எப்படி இருப்பார், அறிவியல் தெரியுமா, எங்களை வணங்கியவர்களைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்தவர் என்பது போன்று ஆயிரமாயிரம் புறம்பேச்சுகள், சந்தேகங்கள், குற்றச்சாட்டுகள். ஆனால், அவர் சோர்ந்துவிடவில்லை. ‘தான் பிறந்ததிலிருந்து இதுபோன்ற பேச்சுகளை எல்லாம் கேட்டு, வலிகளை ஆற்றலாக மாற்றிக்கொண்டிருக்கிறேன்’ என்கிறார் அவர்.
பழங்குடி துணைவேந்தரின் போராட்டங்கள்
தேஜஸ்வி வி.கட்டிமனி
(தமிழில்: கே.நல்லதம்பி)
அகநாழிகை, விலை: ரூ.320
தொடர்புக்கு: 70101 39184
தொடர்புக்கு: sujatha.s@hindutamil.co.in