நூல் நயம்: தனித்திருக்கும் மனம்

நூல் நயம்: தனித்திருக்கும் மனம்
Updated on
1 min read

பிசிறுகள் இல்லாது நேர்த்தியான சொல்முறையில் நம் காலத்தின் நிகழ்வுகளில் நம்மை இருக்கச் செய்யும் கவிதைகளின் தொகுப்பு, ‘லிங்க விரல்’. காலம் தன் நகர்வைத் தொடர்ந்துகொண்டு இருந்தபோதும் அவரவருக்கும் உயிர்ப்பான சில நினைவுகளை விட்டுச்செல்ல மறந்ததில்லை. அது நமக்கு ஊன்றுகோலாக மாறி நம்முள் இயக்கத்தை உறுதிப்படுத்திவிடுகிறது.

அதுவும் பால்யத்தின் நினைவுகள், ஈரம் பட்டுப்போன செடிகளைக்கூட உயிர்ப்பிக்கக்கூடியதாக இருக்கிறது. ‘தவறவிட்ட/கோலிக் குண்டுகள்/தோட்டத்து அரும்புகள்/அம்மாவின் கடுங் காப்பி/ஆச்சியின் சீலை/சரோஜ் நாராயணஸ்வாமி/ஆண் பெண் மரப்பாச்சி/ஆலமரத் தூளி/பீங்கான் ஜாடி உப்பு ஊறுகாய்/பழுப்பு ஓலைச்சுவடி/மதியத்தில் எப்பவாவது கேட்கும் மிதிவண்டி சத்தம்’ இப்படியாக அவரவருக்கான வாழ்க்கை இருக்கத்தான் செய்கிறது. பழுத்த இலைகளை மட்டுமே மரங்கள் உதிர்க்கும்.

ஆனால், அலைபேசி திரையில் எல்லா இலைகளும் உதிர்க்கும் மேஜிக் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த மேஜிக் நம் மனப்போக்கை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்துவதாக இந்தக் கவிதை இருக்கிறது: ‘உதிரிலைகளின் நடுவே/பழுக்கத் தொடங்குகிறது/ஒன்று/திறக்கப்படாத/அந்தக் குறுஞ் செய்தி/ஒரு வேளை/'பிரத்யேக அழைப்பொலி உள்ளவரிடமிருந்து...

'/என்று/மனப்பட்சி நமைக்கிறது/' தொழில் நுட்பக் கோளாறாக இருக்கலாம்'/சமாதான நிழலாடுகிறது/அவ்வப்போது/பதிவுக் குரலைக் கேட்கிறேன்/என் பேச்சினைக் குறைத்திருக்கலாம்/காணொளி அழைப்பில்/நீ தவிர்த்த பார்வை/குறுந்தகவல்கள்/தரவிறக்க சுயமிகள்/தடயமின்றி அழிக்கவும்/தேய்ந்தலைகிறது/லிங்க விரல்/இன்னும்...’ ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கும் லிங்கம் சார்ந்த தத்துவார்த்தங்களோடு அலைபேசியையும் இணைத்துப் பார்க்கச் செய்கிறது கவிதை. கவிதையின் முதல் பத்தி தவறான புரிதலையும் கொடுக்கக் கூடிய தன்மையில் இருப்பதால், இன்னும் கொஞ்சம் கூடுதல் உழைப்பைச் செலுத்தியிருக்கலாம்.

திண்ம நிலை நீர்ம நிலையை அடையாது திண்மத்திலிருந்து ஆவியாகுதல் பண்பைக் குறிக்கும் பதங்கமாதல் எனும் அறிவியல் விதியைக் கவிதைக்குள் முயற்சித்துப் பார்த்துள்ளார் வேல் கண்ணன். பேருந்தில் விற்கப்படும் வெள்ளரிக்காய், அதில் பயணிப்போரைக் குளிர்விக்கும் கணத்தை 'பதங்கமாதல்' கவிதையில் காட்சிப்படுத்தியுள்ளார்.

‘என் கிளை மீது/வந்தமர்ந்த பறவை/இளைப்பாறிய பின் பறக்கிறது/மீண்டும் இளைப்பாற அமரும் வரை/பின் தொடர்ந்து செல்லும்/என் கிளை’ இக்கவிதையில் கிளை என்பதை மனம் எனக் கொள்ளலாம். மனம் குறித்த தத்துவார்த்தங்களை மீண்டும் அசைபோடும் தன்மையை தொகுப்பில் பல கவிதைகளில் காண முடிகிறது. தனித்திருப்பவரின் மனப்போக்கின் வெளிப்பாடுகளே ‘லிங்க விரல்' என மதிப்பிடுவதற்குத் தொகுப்பிலுள்ள கவிதைகள் பொருத்தமாக இருக்கின்றன. - ந.பெரியசாமி

லிங்க விரல்
வேல் கண்ணன்

யாவரும் பதிப்பகம்
விலை: ரூ.110
தொடர்புக்கு: 9042461472

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in