

தஞ்சாவூரின் வரலாறு அரசர்களால் மட்டும் ஆனதல்ல; அதில் நம்மைப் போன்ற சாமானியர்களும் வாழ்ந்துள்ளனர். இருப்பினும், தஞ்சாவூர் குறித்து எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் பலவும் அரசர்களின் மீது மட்டுமே பெருவிருப்பம் கொண்டவையாக இருக்கின்றன. அன்றைய காலகட்டத்தில் சாமானியர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எங்கே வசித்தார்கள், வசிப்பிடம் எப்படி இருந்தது, என்ன சாப்பிட்டார்கள், என்ன உடை அணிந்தார்கள் என்பது போன்ற தகவல்கள் பூதக்கண்ணாடி கொண்டு தேடினாலும் நமக்குக் கிடைப்பதில்லை.
இந்தச் சூழலில், சாமானியர்களின் வாழ்விடமாக விளங்கிய / விளங்கும் தஞ்சாவூர் சந்துகளின் வரலாறு குறித்து இந்நூலில் தஞ்சாவூர்க் கவிராயர் எழுதியிருக்கிறார். நூலாசிரியர் தனது இளமைக் காலத்தில் தஞ்சாவூரின் சந்துகளில் அதிகம் புழங்கியவர். இதன் காரணமாக, தஞ்சாவூரின் சந்துகள் இந்நூலில் மிகுந்த உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. - உசேன்
தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம்
தஞ்சாவூர்க் கவிராயர்
சந்தியா பதிப்பகம், விலை:ரூ.175
தொடர்புக்கு: 044 2489 6979
சமகாலத்தை எதிர்கொள்ளல்: மூத்த மார்க்சிய-பெரியாரியச் சிந்தனையாளரான எஸ்.வி.ராஜதுரை, சமீபத்திய ஆண்டுகளில் அச்சு, இணைய இதழ்கள் பலவற்றில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசியல், சமூக ரீதியிலான பின்னடைவுகள் உலகம் முழுவதும் தீவிரமடைந்துவருவதன் பின்னணியில், உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரை அதன் போக்குகள் பற்றிய எஸ்.வி.ஆரின் உடனடி எதிர்வினைகளாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன; அதன் நீண்டகால விளைவுகளைச் சிந்திக்க வாசகர்களைத் தூண்டுகின்றன. ஆளுமைகள், அரசியல், இசை, இலக்கியம், அறிவுச் செயல்பாடு, சாதி, இந்துத்துவம், ரஷ்யா-உக்ரைன் போர் எனப் பல தளங்களில் கட்டுரைகள் அமைந்துள்ளன. - அபி
இருண்ட காலங்களில்
பாடுவதும் இருக்குமா?
எஸ்.வி.ராஜதுரை
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. விலை: ரூ.540
தொடர்புக்கு: 044 2625 1968
நம் வெளியீடு:
அறிவியலை எளிமையாக, ஒரு மேஜிக் போலதாங்களே செய்துபார்க்கும்படி கொடுத்தால், விரும்பாதவர்கள் இருக்க முடியுமா? வீட்டில் இருக்கக் கூடிய பெரும்பாலான பொருள்களைக் கொண்டும் குறைந்த செலவில் வாங்கக்கூடிய பொருள்களைக் கொண்டும் இந்த அறிவியல் சோதனைகளைச் செய்துபார்த்துவிடலாம்! ஒரு சோதனையை நீங்களே செய்து பார்த்துவிட்டால் அந்த மகிழ்ச்சியே அடுத்தடுத்த சோதனைகளைச் செய்துபார்க்கத் தூண்டும் வகையில், இந்த நூலில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
அறிவியல் மேஜிக்
டி.கார்த்திக்
இந்து தமிழ் திசை
விலை: ரூ.120
தொடர்புக்கு: 7401296562
கலையில் மிளிரும் ஆன்மிகச் செழுமை: கலை ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய 30 ஆன்மிகக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டுரை தமிழ்நாட்டு மன்னர்கள் கட்டிய கோயில்களில் உள்ள விநாயகர் சிற்பங்கள் குறித்த விவரணைகளையும் தமிழர் மரபில் விநாயகரின் வாகனம் பெருச்சாளியே, மூஞ்சூறு வாகனம் வடவரிடமிருந்து வந்தது என்பது உள்ளிட்ட விநாயகர் வழிபாடு குறித்த அரிய தகவல்களையும் தருகிறது. பெருவுடையார் கோயில் விமானத்தின் புறத்தோற்றம் சதாசிவலிங்க வடிவமாக அமைக்கப்பட்டுள்ளதை விளக்குகிறது ஒரு கட்டுரை.
நெல்லையப்பர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்கள் குறித்த கட்டுரைகள், சோழர் காலத்தில் சக்தி வழிபாடு குறித்த கட்டுரை, ராஜேந்திர சோழன் எடுப்பித்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் நரசிம்மர் -சரபர் சிற்பம் குறித்த கட்டுரை, கண்ணன் தொடர்பான இரண்டு புராண நிகழ்வுகள் தமிழ்நாட்டு சைவ, வைணவக் கோயில்களில் சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் வடிக்கப்பெற்றது குறித்த கட்டுரை எனப் பல கட்டுரைகள் தமிழ்நாட்டின் ஆன்மிகத் தொன்மையையும் கோயில்களாலும் கலைகளாலும் ஆன்மிகம் செழித்து வளர்ந்ததையும் விவரிக்கின்றன. - கோபால்
ஆன்மிக தரிசனம்
குடவாயில் பாலசுப்ரமணியன்
அன்னம் வெளியீடு
விலை: ரூ.190
தொடர்புக்கு: 7598306030